Home            Shankara Nainar Kovil        Kodi Maram Song
 
The Great Celestial Dance of Shiva

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
அம்பல வாணரின் ஆனந்த நடனம்
 
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
செய்த சொற்பொழிவுச் சுருக்கம்
சுருக்கி எழுதியவர் அச்சபையின் காரியதரிசி,
திரு. தி. சங்கரபாண்டிய முதலியார் அவர்கள்
இச் சொற்பொழிவு
 மேற்படி யூர்.ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி தேவஸ்தானத்தில்
ஸ்ரீ ஆறுமுகநயினார் சைவ மரபினர் மகமைப் பொதுச்சங்கத்தார்
29-12-1955ல் நடத்திய
திருவாதிரைப் பெருவிழாவில் நிகழ்ந்தது.

------------------------------------------------------------------------------
    தேவ தேவராகிய சிவபிரானார் ஆடிய கூத்துக்கள் சில.  அவற்றுள் ஆனந்த தாண்டவம், பிரதம மகா சங்கார தாண்டவம், அனவரத தாண்டவம் என்பன இங்குப் பேசப்படும்.  இத்தலைப்பை அம்பலம், வாணர், ஆனந்தம், நடனம் எனப்பிரிக்கலாம்.
    இச்சரீரம் சீவனுக்கே சரீரம், ஆயினும், இது பிரமபுரம் எனப்படும்.  பிரமபுரம் - பரமான்மாவுக்குச்சரீரம்.  பரமான்மாஇயக்கினாலன்றிச் சீவனின் அறிவு, இச்சை, செயல்கள் இயங்கா.  அது பற்றி இச்சரீரம் பிரமபுரமென உபசரிக்கப்பட்டது.
    இச்சரீரத்தில் ஹ்ருத் புண்டரீக முண்டு.  ஹ்ருத் புண்டரீகம் - இருதய கமலம்.  அது புறக்கண்ணுக்குப் புலனாகாத நுட்பமுடையது.  ஆகலின் அது தகர புண்டரீகமாம்.  தகரம் - நுட்பம், சிறுமை.  அதில் ஆகாச மிருக்கிறது.  அது பஞ்சபூதத்துள் ஒன்றாகிய ஆகாசத்தைவிட நுட்பமானது.  ஆகலின் அது தகராகாச மெனப்படும்.  பூதாகாசம் சடம்.  அத்தகராகாசம் ஞானமயம், சின்மயம்.  ஆகாசத்துக்கு அம்பரம் என்பதும் பெயர்.  ஆகலின் அதுவே ஞானாகாசம், சிதம்பரம் எனவும்படும்.  அம்பரம் அம்பலமென மருவியது.  ஆகவே சித் அம்பரம் என்பன தமிழ்முடிபால் சித்தம்பரம் என்றாகிச் சிற்றம்பலம் என்றாயிற்று.  தகரம் சிறுமை யாகலின் தகராம்பரம் என்பது சிற்றம்பல மாயிற்றெனவுங் கொள்ளலாம் ஸ்ரீ தகராம்பாம், ஸ்ரீ சிதம்பரம் என்பன வடமொழி.  அதற்குத் தமிழ் திருச்சிற்றம்பலம் என்பது.
    சரீரம் பிண்டம், இவ்வுலகம் அண்டம் இவ்வண்ட பிண்டங்கள் சமம்.  அண்டம் விராட்புருடனெனவும் படும்.  விராட்புருடனுக்கு இருதயகமலமாவது தில்லை நகர்.  36 தத்துவங்களுமே பிண்டத்திலும் அண்டத்திலுமுள்ள இருதயகமலம்.  அதன் தலையிலிருப்பது அந்த ஞானாகாசம் அல்லது சிற்றம்பலம்.  அவ்வம்பலம் தத்துவங் கடந்த எல்லையிலிருப்ப தென்பதாயிற்று.  "சிதம்பரந்து ஹ்ருந் மத்யே" என்றது தரிசநோபநிஷத்து.  "மலர்மிசை" என்றது திருக்குறள்.  மலர்-தாமரை மலர்.  அது இங்கே இருதய தாமரை.  மிசை - மேல்.  அது இருதய கமலத்துக்கு மேலுள்ள அவ்வம்பலத்துக்காகி அம்பலம் என்னும் பொருளைக் கொண்டது.  மலர் மிசை - இருதய கமலத்தின் மேலுள்ள தகராகாசமாகிய ஞானமயமான அம்பலம்.
    இனி, வாணர், வாழ்நர் என்பன ஒன்றே.  சிவபிரானாருக்குச் சொரூபம், தடத்தம் என நிலைகள் இரண்டு.  'உலகெலா முணர்ந்தோதற் கரியவன்' என்பது அவரது சொரூபம்.  'நிலவு லாவிய நீர்மலி வேணிய'னாவான் போகசிவன்.  'அலகில் சோதியன்' லயசிவன்.  'அம்பலத் தாடுவான்' அதிகார சிவன்.  போக சிவன் அருவுருவத் திருமேனி.  லயசிவன் அருவத் திருமேனி.  அதிகார சிவன் உருவத் திருமேனி.  இது மகேசுரன் எனவும்படும்.  அம் மூன்று திருமேனிகளும் அவரது தடத்தம் நிலவுலாவிய நீர்மலிவேணியனாகிய சதாசிவன் அருவுருவமாகிய தன் சாதாக்கிய தத்துவத்தில் அருவுருவா யிருந்துகொண்டு தன் அருவ பாகத்தால் லயசிவனுக் கிடமான சிவ தத்துவ சத்தி தத்துவங்களாகிய மேலுள்ள இரண்டு அருவ தத்துவங்களையும் வியாபித்து அலகில் சோதியனாகிய லயசிவனாகி, உருவபாகத்தால் அதிகார சிவனுக்கிடமான ஈசுர தத்துவ சுத்தவித்தியா தத்துவங்களாகிய கீழுள்ள இரண்டு உருவ தத்துவங்களையும் வியாபித்து அம்பலத்தாடுவானாகிய மகேசுரனாகி விளங்குகின்றான்.  ஆகவே உலகெலா முணர்ந் தோதற் கரியவராகிய சொரூப சிவனாரின் அத்தடத்த வடிவமே மகா ருத்ர தாண்டவேசுரரென்னும் ஸ்ரீமந் நடராஜப் பெருமானா ரென்பது சித்தித்தது.  மேலே காட்டிய ஹ்ருத்புண்டரீகத்தின் மஸ்தகத்திலுள்ள ஸ்ரீ தகராகாச (திருச்சிற்றம்பல)த்தில் எழுந்தருளியிருப்பவர் (வாணர்) அவரே.  சொரூப சிவனாரே தடத்த நடராஜரென்பது கருத்து.  சிதம்பரங் கோயிலில் சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற இடத்தில் வணங்கப்படுபவர் சொரூப சிவனார்.  அவரை யடுத்து எழுந்தருளி யிருக்கும் நடராஜர் தடத்த சிவனார் அக்கோயிலில் மாத்திரம் சிவபிரானார் அவ்விரு நிலைகளிலும் வைத்து வணங்கப்படுகிறார்.  மற்றைத் தலங்களிலெல்லாம் தடத்த சிவனார் மாத்திரம் எழுந்தருளுவார்.  "அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேச்ம தஹரோஸ்மிந் நந்தராகாசஸ் தஸ்மிந்ய தந்தஸ்ததந் வேஷ்டவ்யம் தத்வா வவி ஜிஜ்ஞாஸி தவ்யம்" (பிரமபுரத்திலுள்ள தஹர புண்டரீகத்தில் தகராகாச மிருக்கிறது.  அதற்குள்ளிருப்பதை யறியவேண்டும்) என்றது சாந்தோக்யோப நிஷத்து "சம்புராகாச மத்யே த்யேய:" (சம்புவை ஆகாச மத்தியில் தியானிக்க) என்றது அதர்வசிகோபநிஷத்து.  திருக்குறள் அந்நடராஜரையே ஏகினான் என்றது.  ஆகவே, "மலர்மிசை யேகினார்" அம்பலவாணரே யென்க.
    அவரது அருட் சக்தியே அந்த ஞானாகாசம்.  அதில் அவ்வருளையே திருமேனியாகவுங் கொண்டு அவர் நடனம் புரிகிறார்.  அச்சக்தியே ஸ்ரீஉமாதேவியார்.  அவருக்குக் ககனம் என்பதும் பெயர்.  'ககநாபிதாநா' என அவரைக் குறித்துக் கூறியது வாயுசங்கிதை.  "ஆகாச சரீரம் ப்ரஹ்ம" என்ற சுருதியும், "சக்திச் சரீரம்" என்ற அம்பா ஸ்துதியுங் காண்க ருக்வேதம் நடராஜரை "பரதர்" என்ற மந்திரத்தால் துதித்தது.
    பதஞ்சலி வியாக்சிரபாதர் என்பவருக்கு ஆடிக்காட்டிய நடனம் ஆனந்த நடனம் சர்வ பிரபஞ்சத்தையும் சம்ஹாரம் செய்து தாம் மாத்திரமாய் நின்று தம் நித்தியத்துவத்தை விளக்கிக்கொண்டு அவர் ஆடுகிற ஆட்டம் மஹா சம்ஹார தாண்டவம்.  அவர் எப்போதும் புரிகிற நடனம் அனவரத தாண்டவம்.
    அவர் எல்லாச் சித்துப் பொருள்களிலும், சடப்பொருள்களிலும் அத்துவிதமாய்க் கலந்து வியாபித்திருக்கிறார்.  அவர் அசைத்தாலன்றிச் சடப்பொருள்கள் அசைதலும், அறிவித்தாலன்றிச் சித்துப்பொருள் (உயிர்)கள் அறிதலும் இல்லை.  எல்லாவற்றையும் இயக்குபவர் அவரே.  அந்த இயக்குதற் றொழிலே அனவரத தாண்டவம்.  அத்தொழில் பலவாய் விரியும்; ஆயினும் ஐந்தா யடங்கும்.  ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவே அவ்வைந்து.  ஆகலின் அவரே பஞ்ச கிருத்திய கர்த்தா.  அவர் உடுக்கை யேந்திய திருக்கரம் ஆக்கலையும், அபயகரம் காத்தலையும், தீ யேந்திய திருக்கரம் அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருத்தாள் அருளலையும் காட்டுகின்றன.  அவரால் அக்கிருத்தியங்களுக்கென நியமிக்கப்பட்டவர் முறையே பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்பவர்.  அவ்வம்பலவாணர் தம் நடனத்தை நிறுத்தினால் அப்பிரமன் முதலியோரால் தமக்குரிய அத்தொழில்களைச் செய்யமுடியாது.
    சர்வான்மாக்களும் உபாசித்தற்குரிய ஒரே பரம்பொருள் மலர்மிசையேகினாராகிய அம்பலவாணரே, அவ்வான்மாக்கள் சிவோகம் பாவனையால் அவரைத் தம் இருதய கமலத்தில் தியானிக்க வேண்டும்.  அத்தியான முதிர்ச்சியால் அவற்றின் பந்தம் நீங்கும்.  நீங்கவே, அவை பெறுவது இறவாத இன்பம்.  அதுவே முத்தியாம்.  நடராஜரின் தூக்கியபாதம் சிறிது வளைவுடையது.  மெய்யடியார் சிரசு அதிற் பொருந்தி அடங்கி நிற்கும்.  அதுதான் தாடலைபோல், காறலைபோல் நிற்றலென்பதாம்.  இரண்டறக் கலத்தல் என்னும் சைவசித்தாந்த முத்தி அதுவே.  தூக்கிய பாதம் சிவசக்திக் குரியதாகி இன்ப நிலயமாதலின் அதை 'மாணடி' என்றும், அதைப் போய்ச் சேர்தலே வாழ்க்கையின் குறிக்கோளாதலின் அதனைச் சேர்ந்த முத்தரைச் 'சேர்ந்தார்' என்றும்  திருக்குறள் கூறியது.  அது கூறிய 'நிலமிசை' யாவது மிசை நிலம்.  மிசை நிலம் - மேல் நிலம்.  எதற்கு மேலுள்ள நிலம்? தத்துவக் கூட்டத்துக்கு மேலுள்ள நிலம்.  நிலைத்திருப்பது நிலம்.  ஆகலின் அது அக்குஞ்சிதபாத நீழலே.  'நீடு வாழ்வார்' என்பது இறவாத இன்பந் துய்த்து மீளப் பிறவாமல் வாழ்வார் என்னும் பொருளது.  சர்வான்மாக்களுக்கும் பிதா நடராஜர்; மாதா சிவகாமசுந்திரியார் புத்திரர் இன்பமடைவதைக் கண்டு தாய் மகிழ்வள்.  ஆனந்த நடனம் ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பது முத்தான்மாக்கள் அவ்வானந்தத்தை யனுபவிக்கின்றனர்.  சிவகாமசுந்தரியார் அதைக்கண்டு மகிழ்கிறார்.  ஆகலின் நடராஜர் தம் நடனத்தால் அப்பெருமாட்டியாரை மகிழ்விக்கிறா ரென்பதற்கு அதுவே கருத்தென்க.
    சிதம்பரத்தில் நடராஜர் எழுந்தருளியிருக்கும் பீடம் பிரணவத்தையும், அவரைச் சூழ்ந்துள்ள நான்கு பொற்றூண்கள் இருக்கு முதலிய நான்கு வேதங்களையும் அவற்றை யடுத்துள்ள இருபத்தெட்டுத் தூண்கள் காமிக முதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களையுங் குறிக்கின்றன.  முன்னுள்ள ஐந்து படிகளும் பஞ்சாக்கரப் படிகளாம்.  அவ்வாலயத்திலுள்ள பிறபகுதிகளையும், அவை குறிப்பனவற்றையும் இவ்வாறே தெரிந்துகொள்க.  சிவாகமங்களே வேதங்களுக்குச் சரியான பாஷ்யம்.  வேதங்களுக்குப் பிரணவமே மூலம்.  பிரணவப் பொருளாயுள்ளவர் அம்பலவாணரே.  பிரணவத்தை "ஈசன் மேவரு பீடம்" என்றது கந்தபுராணம்.  இவ்வுண்மையை அவ்வமைப்புக் காட்டுகிறது.  வேதத்தை ஓதும்போது முதலினும் முடிவிலும் பிரணவமாகிய "ஓம்" என்று சொல்லவேண்டும்.  'ஓமென்று மறை பயில்வார்' என்றது திருமுறை பன்னிரண்டு திருமுறைகளும் வேதத்துக்கு மொழியாலும், ஆசிரியராலும் வேறுபடுவன அன்றிப் பொருளாற் சிறிதும் வேறுபடா.  ஆகலின் அத்திருமுறைகளை ஓதும்போது முதலிலும் முடிவிலும் பிரணவ அந்தர்க்கமாயுள்ள "திருச்சிற்றம்பலம்" சொல்லவேண்டும். அது சைவசமயமரபு.
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
 
 
------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை 1927ல் "சமய ஞானம்" பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
 
for more details
visit