Home            Who is Eswaramoorthy Pillai?       Sanskrit and Saivam


திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
ஸிம்ஹக்ந மூர்த்தம்
(சிவபெருமான் நரசிங்கத்தோல் அணிந்தது)
பொங்குளை யழல்வாய்ப் புகைவிழி யொருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
-பதினொராந் திருமுறை
 
--------------------------------------------------------------------------------
சிவமயம்
    காசிபமுனிவர் திதி, அதிதி, தனு, அரிட்டை, சுரசை, கடை, சுரபி, விநதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்னும் பதின்மூவரையும் விவாகஞ் செய்தார்.  அவருள் திதி என்பாள் இரணியன், இரணியாக்கன் என்னும் இருவர் ஆண்மக்களையும், சிம்மிகை என்னும் பெண்ணொருத்தியையும் பெற்றாள்.  அவருள் இரணியன் என்பான் பிரமாவை நோக்கித் தவமியற்றினான்.  பிரமதேவர் அவனுக்கு அருள் செய்யும்படி தோன்றி, "உனக்கு யாது வரம் வேண்டும்?" என்று வினாவியருளினார்.  இரணியன் "பங்கயாசன! பஞ்சபூதங்களாலும், ஆயுதங்களாலும், பக்ஷ¢களாலும், மிருகங்களாலும், தேவராலும்; மனிதராலும் யான் இறவாதிருக்க வேண்டும்; இரவிலும் பகலிலும் இறவாதிருக்கவும், இறப்பினும் எனது யாக்கையின் குருதி ஓர் துளி பூமியில் விழுந்தாலும் அது என் வடிவெடுத்து என் பகைவரை வேரொடு போக்கும்படியும் அருள் புரிய வேண்டும்; ஐய! இவற்றைத் தந்தருளுக" என்று விண்ணப்பித்தான்.  பிரமதேவர் அவன் கேட்டவற்றைக் கொடுத்து, ஆயுதவகைகளையும் அளித்து மறைந்தருளினார்.  அளப்பற்ற வலி பெற்ற அசுரேசன் அண்டவாசிகள் அனைவரும் தன்னடி பணியும்படி கட்டளை செய்தான்.  இந்திரன் முதலாந் தேவர்களும், தேவ மகளிர்களும் அவனது குற்றேவலைச் செய்து ஒழுகுவராயினர்.  இவனது கொடுங்கோலிடைப்பட்ட சமஸ்தரும் "இரணியாய நம" என்றே இயம்புவார்கள்.  மறந்தும் மற்றொன்றும் கூறார்கள்.
    இரணியன் வைதிக தருமங்களைத் துறந்து, பெரும் பாதகங்கள் முற்றும்படி கொடுங்கோல் செலுத்திவருங் காலத்தில், அவனுக்கு ஓர் புத்திரன் உதித்தான்.  அவன் பெயர் பிரகலாதனன்.  அவனுக்கு ஐந்தாண்டாயிற்று.  சுக்கிராசாரியார் குமாரர் இருவரிடத்தில் இரணியன் தனது புத்திரனை வில்வித்தை கற்கும்படி அனுப்பினான்.  ஆசாரிய புத்திரர்கள் அவனுக்கு ஆரம்பத்தில்  'இரணியாய நம' என்று சொல்லிக் கொடுத்தார்கள்.  அவன் அதனைச் சொல்லாது மறுத்து, 'நமோ நாராயணாய' என்று கூறினான்.  அவர் இருவரும் எளியவனாகிய இரணியனிடத்தில் இதனை அறிவித்தனர்.  இரணியன் தனது புத்திரனை அழைத்து, "நீ யாது கூறினை?" என்று கேட்டான்.  பிரகலாதனன் "நமோ நாராயணாய" என்றான்.  இரணியாசுரன் வடவாமுகாக்கினி போலக் கோபித்து, ஏவலாளர்களைப் பார்த்து, "வாளை வீசி இவனைக் கொன்றிடுங்கள்" என்று கட்டளை யிட்டான்.  அவனை அவர்கள் வாளால் வெட்டினர்.  ஆயுதங்கள் முரிந்தன.  அதன்பின் விஷமூட்டி அவனைக் கொல்லும்படி பணித்தான்.  அவ்விஷம் அவனுக்கு அமுதாயது.  அதன்பின் நாகங்களைக் கடிக்கும்படி விடுத்தான்.  பாம்பின் பற்கள் தெறித்தன.  பிரகலாதனன் ஒன்றாலும் இறந்திலன் என்பதை இரணியன் அறிந்து, "இவனை நெடிய மலையின் உச்சியிற் கொண்டு சென்று, உறுப்புக்களைக் கட்டிப் பூமியில் தள்ளுங்கள்" என்று கட்டளையிட்டான்.  அவர்கள் அப்படி உருட்டினார்கள்.  பிரகலாதனன் இதனாலும் இறந்திலன்.  அவுணன் செய்வதொன்றும் உணர்ந்திலனாய்த் தன் புத்திரனைச் சபை முன்னர்த் தருவித்து தீப்பொறிகால நோக்கி, "என்னையன்றி உலகத்தைப் படைத்துக் காத்தற்கு உளதெனக் கூறிய கடவுளை என்னெதிரிற் காட்டுதி" என்று வெகுண்டு கூறினான்.  அப்பொழுது வேத முணர்ந்த அப்புதல்வன் "அறிவை யூட்டி அனுக்கிரகிக்கும் முதற் பொருளாவது கடவுளே, தேவர் நாயகரும் திருமகள்நாயகரும் அடியார் மனதிற் குடிகொண்டிருக்கும் காவல் நாயகருமாகிய திருமாலே அக்கடவுள்" என்று கூறினான்.  இப்படி அவன் கூறியதனை இரணியன் கேட்டலும், "இச்சிறு தூணில் அவனைக் காட்டக்கடவாய்; அங்ஙனம் காட்டாதொழியின் உன்னைத் தின்பேன்" என்று தீப்பொறி சிந்தக் கோபித்தான்.
    அப்பொழுது, அவன் சுட்டிய தூணிலிருந்து திருமால் நரசிங்கமாய்த் தோன்றியருளினார்.  நரசிங்கம் மாலைப் பொழுதில் இரணியனை மடியிலே கிடத்தி, குடலைப் பிடுங்கி இரத்தத்தைப் பருகியது.  அது குருதிநீர் குடித்தமையால் கருவங்கொண்டு, தன் நிலைமை மறந்து உலகத்துள்ள ஜீவராசிகளை வருத்தியது.  பிரமனாதியோர் அந்த நரசிங்கத்துக்குப் பயந்து, திருக்கைலாச கிரியை அடைந்து, பரமேசுரனுடைய திருச்சன்னிதானத்தில் நின்று, "ஐயனே! மறைக்குமெட்டாத மெய்யனே! மழுப்படை பரித்த கையனே! தேவரீரைச் சரணம்டைந்தனம்; புகலிடம் பிறிதில்லை; விட்டுணுவாகும் நரசிங்கம் செய்யும் குரோதத் தொழிலைத் தாங்கமாட்டோம்" என்று இரந்தார்கள்.
    சிவபெருமான் வீரபத்திரக் கடவுளை அழைத்து, "நரசிங்கத்தின் செருக்கை அழித்தி" யென்று கட்டளையிட்டருளினார்.
 
வீரபத்திர உருத்திரமூர்த்தி சரபப்பக்ஷ¢யின் பேருருவெடுத்து, அந்த நரசிங்கத்தின் பிடரிற் பாய்ந்து, சகல அவயவங்களையும் குத்தினார்.  நரசிங்கம் கர்வம் அகன்று உயிரிழந்தது.  வீரபத்திரக் கடவுள் நரசிங்கத்தின் தோலை உரித்தெடுத்துச் சிவபெருமானது திருச்சன்னதியில் வைத்து வணங்கினார்.  பிரமா முதலியோர் சிவபெருமானைப் பார்த்து,
    "எங்கள் நாயக! இதனை ஆடையாகக் கொண்டருள்க" என்று பிரார்த்தித்தனர்.  சிவபெருமான் அவ்விதமே சாத்தியருளினார்.
    "பத்திச் சிங்கவணை மீது படரின்றிருந்து பார்த்திவனை
    எத்திச் சிங்கலறக் கொன்ற இறுமாப்பதனால் இருநிலத்திற்
    றத்திச் சிங்கலுறத் தேய்த்தறன்னைக் கண்டு சரபமதாய்க்
    கொத்திச் சிங்கந்தனையழித்த கோவே நினது சரண் போற்றி"
என்று சிவ பராக்கிரமத்திலும்,
    "எரித்தமயிர் வாளர்க்கண் வெற்பெடுக்கத் தோளொடு தாள்
    நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினாள்
    உரித்த அரித்தோல் உடையான் உறைவிரம புரந்தன்னைத்
    தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே"
என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் சரபேஸ்வரர் பராக்கிரமம் காட்டப்படுகிறது.
    பரமசிவனது பாதகமலங்களுக்கு நரசிங்கமூர்த்தி அருச்சனை செய்தனர்.  விட்டுணு அந்த அவதாரத்திற் செய்த பாவங்கள் அணைத்தும் தீர்ந்தன.
    "துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
    தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
    அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
    மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
    மங்கநகத் தான்வல்ல மருந்து  தன்னை
    வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
    செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"
என்று அப்பர் சுவாமிகளும்.
    "எவர் கோரமான சரபவேஷந் தாங்கி உலகத்தை வருத்திய நரசிங்கத்தை ஹிம்சித்தனரோ, பாதங்களால் அரியை அரிக்கின்றவரோ, புருஷரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருளல் வேண்டுமென்று சர்வ தேவர்களாலும் மகாநிசியில் பின்றொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டனரோ, கிருபையினால் நரசிங்கத்தின் தோலை நகங்களாற் கிழித்துரித்தெடுத்து, வஸ்திரமாக அணிந்து கொண்டாரோ, மகாபலமுள்ள வீரபத்திரமூர்த்தியாகிய அந்த உருத்திரர் ஒருவரே தியானிக்கற்பாலர்" என்று சரபோபநிடதம் இவ்வற்புதச் செயலைப் புகழுகின்றது.
    சிவஞானசித்தியார் பரபக்ஷம் பாஞ்சராத்திரி மறுதலையில் ஸ்ரீ அருணந்திசிவாசாரியரும்.
    "இங்கடாவுளனோமாலென்றிரணியன் றூணையெற்ற
    ஷங்கடாமோதரன்றானுருநரசிங்கமாகி
    யெங்கடாபோவதென்னாவுடல் பிளந்திறையானென்ன
    வங்கடாசிம்புளாகியெடுத்தடர்த்தானரன்றான்"
என நரசிங்கத்தைச் சங்கரித்தமை கூறியருளினார்.
    "நரஹரி விஜயாத்" (மானுடமடங்கலை வலிதபக்கோறலின்)
    "பசுபதிஸ் ஸர்வதேவ ப்ரகிஷ்ட:" என்றதனால் பரமசிவனே அமரர்கள் அனைவர்கட்கும் உயர்ந்தோர் என்று அரதத்தாசாரியர் சிவபரத்துவம் நிலையிட்டருளினர்.
    நரசிங்கத்தைக் கொல்லும்படி வந்த சரபத்தோடு, அந்த நரசிங்கம் கண்டபேரண்டம் என்ற பக்ஷ¢யின் உருவெடுத்து யுத்தம் செய்து ஜயித்தது என்று புற மதஸ்தர் ஒரு கதை கூறுவர்.  நரசிங்கத்தைச் சரபம் கொன்றதென்னும் வாக்கியம் சரபோபநிடத்தில் உளது.  விட்டுணு சரபத்தை எதிர்த்தமைக்கு வாக்கியம் நரசிங்க பூருவதாபினி, உத்தரதாபினிகளிற் காணப்படுவது பொருத்தம்.  அங்ஙனம் காணப் பெறாமையால் அக்கதை புதுவதாய்ப் படைக்கப்பட்ட கற்பனையேயாம்.
    ஸிம்ஹக்ந மூர்த்தம் சிவபெருமானுடைய அஷ்டாஷ்ட (அறுபத்துநான்கு) லீலாமூர்த்தங்களுள் ஒன்றாகும்.  சரபமூர்த்தியானவர் சூரியசோமாக்கினி நேத்திர முடையராயும், அக்கினிச்சிகையுடையராயும், இருபக்கமும் சிறகுகளையுடையராயும், வெளிப்பட்ட பற்களையுடையராயும், எட்டுக் கால்களும் நான்கு கைகளுமுடையராயும், நரசிங்கத்தின் மார்பைப் பிளப்பவராயும் இருப்பர்.
    "நன்னாலிரண்டு திருவடியும், நனி நீள்வாலும், முகமிரண்டும்
    கொன்னார் சிறகும், உருத்திரமும், கொடும் பேரார்ப்பும் எதிர்தோற்றிச்
    செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செகுத்துரிக் கொண்(டு)
    ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம்"
என்று காஞ்சிப் புராணத்தில் காட்டப்படுகிறது.
    இச்சரித்திரத்தினாலே கடவுளும் புண்ணிய பாபமும் இல்லையென்று நாத்திகம் பேசுவோர் தண்டிக்கப்படுவர் என்பதும், மகாபராக்கிரமசாலியாகிய இரணியனது கொடுரங்களைக் கடக்கும் சத்தி பிரகலாதனனுக்கு வாய்த்தது, சிவனுக்குத் தொழும்புசெய்யும் விட்டுணுவின் மீது வைத்த பக்தி மிகுதியினாலேயாம் என்பதும், விட்டுணுவின் தியேயப் பொருளா விளங்குபவர் பரமசிவனே என்பதும், அகங்காரத்துக்கும் பிராயச்சித்தமாய் முடிவது சிவார்ச்சனையே ஆம் என்பதும் பிறவும் பெறப்படுகின்றன.

--------------------------------------------------------------------------------