Home            Eswaramoorthy pillai        Sivanjana Botham 1st Suthram meaning


 

Meaning of Shiva Rathiri, the Holy night of Shiva

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவராத்திரி நவராத்திரி ஏகாதசி விரதங்கள்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
--------------------------------------------------------------------------------
சிவராத்திரியும் நவராத்திரியும்
******
தோற்றுவாய்
    பாரததேசம் சுதந்திரம், பெற்றது.  ஆண்டுகள் சில சென்றன.  மக்களாட்சி நடந்து வருகிறது.  ஐந்தாண்டுத் திட்டங்கள் இரண்டு அநேகமாய் முடிந்தன.  ஆயினும் உணவு வளம் எவ்வளவிலிருக்கிறது? அது பற்றிய கருத்துக்கள் பல.  அனுபவமும் அனுகூலமாயில்லை.  காரணம் யாதாயிருக்கலாம்? அரசைக் குறை கூறுவார் கூறுக.  அரசுபற்றிய ஆராய்ச்சியிங்கில்லை.  இந்நாட்டுக்குச் சார்ந்தவரென்பதை அறியாத வருமுளர்.  அவரையும் சங்கியையிற் சேர்த்துக் கொள்க.  இன்றும் அச்சமயிகள் பலகோடியருளர்.  ஆயினு மென்?
    'இல்லைவை திக நெறி யில்லை நல்லறம்
    இல்லைநால் வருணமாச் சிரம் மில்லையாம்
    இல்லைமா ணாக்கர்க ளில்லை யாரியர்
    இல்லைநல் லொழுக்கமுங் கலியி னென்பவே.'
    'வைதிக சைவநூன் மானக் கோளிலை
    பொய்யிலைந் தெழுத்திற்கண் மணியிற் பூதியில்
    ஐமுகப் பிரானிடத் தன்பு மிவ்வுகத்
    தெய்திடு மிருபிறப் பாளர்க் கில்லையே.'
    'தாபதப் பிருகுமெய்த் ததீசி கெளதமன்
    சாபமன் றியுங்கலி தோடத் தான்மிகத்
    தேய்பொருட் பாஞ்ச ராத்திரம் பவுத்தமாம்
    பாபநூ லுறுதியே பன்வர்க் குண்டரோ' என்றது
காஞ்சிப்புராணம்.  கலிக்கொடுமையை விளக்குவன அப்பாடல்கள்.  அக்கொடுமை இத்தேசத்திற் பரவுகிறது.  சைவருள்ளும் ஏழையருளர்.  அவரும் பலரே.  அவரையும் பற்றியது அக்கலி.  அதனால் சைவாசார அனுட்டானங்கள் அவரைவிட்டு நழுவின.  ஐம்பொறியடக்கலென்பது அவர்பாலில்லாமற் போய்விட்டது.  பொறிகளுக்குத் தொண்டராயினாரவர்.  உபவாசமிருந்து விரதங்காத்தலென்பது சைவ தருமங்களுள் ஒன்று.
    'மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்
    களான் உண்டி சுருக்கலும்....' (தவம் 27) என்றார்
பரிமேலழகர்.  சோமவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி முதலியன மாதந்தோறும் வரும் விரதநாட்கள்.  சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, ஸ்கந்தசஷ்டி, விநாயகசதுர்த்தி முதலியன வருடந்தோறும் வரும் விரததினங்கள்.  உபவாச மிருந்து அவ்விரதங்களை விதிப்படி அனுட்டிக்க வேண்டும்.  அதனால் சைவமக்களிடம் மனிதவியல் நிலைக்கும்; சிவபத்தி வளரும்.  அவை சமயத்துறை பற்றிய இலாபம்.  இலெளகிக இலாபம் வேறு.  என்னை? உபவாசத்தால் சைவர் வீடு ஒவ்வொன்றிலும் உணவிற்காம் பண்டங்களிற் பெரும் பகுதி சேமிக்கப்படும்.  இந்நாட்டிலுள்ள சைவமக்களின் வீடுகளைச் சேரக் கணக்கிடுக.  மிஞ்சும் பண்டம் கொஞ்சமாகவாவிருக்கும்? பணமில்லாச் சைவரும் உபவாசம் இருக்கவேண்டியவரே.  இருந்தால் அவர் உண்ணும் நாட்கள் சுருங்கும்.  அப்பண்டங்களில் மிச்சம், இவ்வுண்ணுநாட்களின் சுருக்கம் ஆகியவற்றை ஓராண்டிற்குச் சேர்த்துக் கணக்குப் பார்க்கவேண்டும்.  நாட்டில் உணவுப்பஞ்சம் எவ்வளவோ குறையும்.  இதுவே இலெளகிக லாபம்.  சைவர் இதைக் கருதுவதில்லை.  உபவாசம் மறைகிறது, பரிகசிக்கப்படுகிறது.  ஒருசைவன் ஒருநாளில் பல தடவைகள் உண்கிறான், ஒவ்வொரு வேளையும் அதிகம் உண்கிறான்.  மனிதவியலுக்கு மாறாக உண்ணத்தகாத வற்றையெல்லாம் உண்கிறான்.  கண்ட விடங்களில் உண்கிறான்.  நாக்கை மகிழ்விக்கவும் வயிற்றை நிரப்பவுமே அவன் பிறந்தான் போலும்.  ஒரு வருடத்தில் அவன் உபவாசங்களையெல்லாம் விட்டு உண்ணுஞ் சோறு, உபவாசத்தை அனுட்டித்து உணவாசை யின்றி அவசியமென்ற கருத்துக் கொண்டு உண்டு வருகிற சுமார் பத்துப்பே ருணவுக்குச் சமமாகு மெனின் அது பொருத்தலாம்.  உபவாசத்தால் உயிருக்கு உறுதியுண்டு.  தேகமும் சுகமுறும்.  அதைப் பழித்த பாவம் நிர்ப்பந்தமான பட்டினிக்கிடக்கையைக் கொணர்ந்தது.  அதனால் உடலுயிர்களுக்குத் துன்பமே பலன்.  ஆகலின் நாட்டின் நலனைக் கருதியாயினும் சைவர் தம் சமய தருமமாகிய உபவாசத்தை மேற் கொள்வாராக.
    இன்னொன்று, சைவத்தில் சமயானுட்டானங்களத்தனையும் உபவாசத்தோடு கூடியவை.  அவற்றிறும் உண்டாட்டுக்கும் சம்பந்தமில்லை.  தீபாவளி, தைப்பொங்கல் என இரண்டு பண்டிகைகளுள.  அவையும் சைவசமூகத்திற் புகுந்தன.  புகத்தொடங்கிய காலந் தெரியவில்லை.  பண்டிகையென்னுஞ் சொல்லுக்குப் பொருள் எதுவோ? அச்சொல் தமிழன்று; சம்ஸ்கிருதமாகவுந் தெரியவில்லை.  தீபாவளி வைணவ சம்பந்தமுடையது; உண்டாடுக் களியாட்டு மிகுந்தது.  சைவர் அதை ஆசரிக்க வேண்டுமா? ஆமென்பதற்குச் சைவநூற் பிரமாணமுண்டா? தைப்பொங்கலுக்கு மகரசங்கிராந்தி யென்று பெயர். அதுவும் உபவாச்த்தோடு கூடியதே.  சைவரிடம் தம் சமயக் கற்புக் குலைந்தது.  சமயக் கலவை புகுந்தது. அதன் விளைவே அப்பண்டிகைக் கொண்டாட்டம்.  நான் ஒரு சைவன்.  எனக்கு சமயவழி என் சமயத்தாரிடம் தொடர்புண்டு.  அவரெல்லாம் சைவசமய வரம்பைப் பல்லாற்றானும் போற்றிக் கொள்ள வேண்டும்; அச்சமய ஆசார அனுட்டானபர ராக வேண்டும்; நாட்டுக்கு நல்ல சேவகராக வேண்டும்; சிவபிரான் திருவருளுக்குப் பாத்திரராக வேண்டும்.  அவ்வாசைபற்றி யெழுந்தனவே மேலுள்ள வசனங்கள்.  உபவாச வகைகளைக் கொண்ட பிற சமயங்களு மிருக்கலாம்.  அச்சமயிகளும் குறையின்றி அவற்றை யாசரிப்பாராக.
    சிவபிரான் உமாதேவியார், விநாயகர், குமரன் முதலியவரைக் குறித்துச் சைவசமய விரதங்களிருக்கும்.  அவற்றுள் சிவவிரதங்கள் சில.  அவற்றுள் சிவராத்திரி விரதம் முக்கியமானது.  அதைப்பற்றிச் சிறிது தெரியலாம்.
சிவராத்திரி விரதம்
    ஒரு கற்பத்தின் முடிவு காலம் வந்தது.  அப்போது சிவபிரான் ஒரு பிரளயத்தை யுண்டாக்கினார்.  அதனால் பிரபஞ்சம் அழிந்தது.  பிரம விட்டுணுவாதி சகலவுயிர்களும் முடிந்தன.  அம்முடிந்தநிலை கங்கு லாகும். கங்குல் - இராத்திரி.  அப்போது எஞ்சிநின்றவர் சிவபிரான்.  அவரே சர்வகர்த்தா.  அவருக்குச் சத்தி உமாதேவியார்.  அந்த இராத்திரி நான்கு யாமங்களாகப் பிரிக்கப்பட்டது.  உமாதேவியார் தம் நாயராகிய சிவபிரானை அந்நான்கு யாமங்களிலும் விதிப்படி பூசித்துக்கொண்டிருந்தார்.  உயிர்களெல்லாம் உய்தி பெறவேண்டு மென்பதே அப்பூசையின் நோக்கம்.  மீண்டும் பிரபஞ்ச சிருட்டி யுண்டாயிற்று.  அது விடியல், பகற்பொழுதின் ஆரம்பம்.  அப்போது பெருமான்முன் அம்மையார் வணங்கிநின்று 'சுவாமி, அடியேன் உம்மைப் பூசித்த இந்த இராத்திரியை உமக்கு உகந்த இராத்திரியாக நீர் கொள்ளவேண்டும்.  அதனால் இந்த இராத்திரியாக நீர் கொள்ளவேண்டும்.  அதனால் இந்த இராத்திரிக்குச் சிவராத்திரியெனப் பெயர் வழங்கவேண்டும்.  இச்சிவராத்திரி நான்கு யாமங்களிலும் உம்மைப் பூசிப்பவர் எவரேனுமாக, அவருக்கு நீர் சகல செளபாக்கியங்களையுந் தந்தருளவேண்டும்' என வேண்டினார்.  சுவாமியும் அவ்வாறே யாகுக என்றார்.  சிவராத்திரியின் வரலாறு இது.
    மற்றொரு கற்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது, பிரபஞ்சம் சலத்துள் மூழ்கியது.  திருமால் வராகவுருவெடுத்தார்.  அவ்வராகம் சலத்துட் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது.  அவ்வராகம் திருமாலாயிற்று அவர் செருக்கோடுதம் மிடஞ் சென்றார்.  அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார்.  சிருட்டி தொடங்கியது.  பிரபஞ்சம் செழிப்புற்றது.  அதனால் அவர் தருக்கினார்.  இருவருஞ் சந்தித்தனர்.  அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார்.  விட்டுணுதாமே கடவுள் என்றார்.  போர் முண்டது.  அஸ்திரங்கள் பிரயோகமாயின.  இருவருமே சாவாரென்ற நிலை வந்தது.  அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓரக்கினிப்பிழம்பாய் அடிமுடி யறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நினார் சிவபெருமான்.  அஸ்திரங்களை யெல்லாம் அப்பிழம்பு உண்டு சாம்பராக்கிற்று.  பின்னர் அன்னமும் பன்றியுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர் அப்பிரம விட்டுணுக்கள்.  அதுவு முடியவில்லை.  அவ்விருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் அப்பிழம்பு வடிவான இலிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார்.  அவ்வெளிப்பாட்டிற்கு இலிங்கோற்பவரென்று பெயர்.  பிரம விட்டுணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர். 
 
இச்சரித்திரத்தை
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ |
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்|
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:||"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரமாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை ஸ்துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்)
என வேத (சரப)மும் எடுத்துரைத்தது.  இச்சம்பவமும் இரவில் நடந்தது.  அதுபற்றி அவ்விரவு சிவராத்திரி யெனப்பட்டது.  இதின்னொரு வரலாறு.
    "'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்காதிகளை யழிக்கின்றது என்று பொருள்.  'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள்.  ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் சுகத்தைக் கொடுப்பது என்று பொருள்படும்" என ஒருவர் கூறிச் சிவராத்திரியின் சிறப்பை விளக்கினார்.
    பிரளயகாலம் வேறு அப்போது உமாதேவியார்க்குச் சிவராத்திரி.  தேவகாலம் வேறு.  பிரமவிட்டுணுக்களுக்கு முன் சிவபிரான் அக்கினிப் பிழம்பாய் நின்ற இரவு அவருக்குச் சிவராத்திரி.  மனித காலம் வேறு.  நாம் எந்த இரவை அச்சிவராத்திரியாகக் கொண்டு அனுட்டிப்பது? மாசி மாதத்துத் தேய்பிறைச் சதுர்த்தசியோடு கூடிய தினத்தையே சிவராத்திரி விரததினமாகக் கொண்டு மக்கள் அனுட்டிக்க என்பது சிவாகமவிதி.  அதனோடு வேறு சில காலங்களிலும் அதை யனுட்டிப்பது நலமென்றது சிவாகமம்.  அதுபற்றிச் சிவராத்திரி ஐந்து வகையெனச் சொல்லப்படும்.  அவை மாகசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்பனவாம்.  மாகம்-மாசிச் சிவராத்திரி மஹா சிவராத்திரி யெனச் சிறப்பும் பெறும்.  மற்றைச் சிவராத்திரிகளின் விவரத்தை விரிந்த நூல்களிற் கண்டு கொள்ளலாம்.
    மஹா சிவராத்திரியன்று திரயோதசி பகல் முழுவதுமிருந்து அன்றிரவும் மறுநாட் பகல் முழுவதும் சதுர்த்தசி யிருக்குமானால் அந்த இரவு உத்தமோத்தம சிவராத்திரியாகும்.
    சூரியன் அஸ்தமித்த பிறகு அல்லது அன்றிரவு பத்து நாழிகைக்குமுன் அதாவது முன் பத்து நாழிகையில் சதுர்த்தசி வந்தால் அவ்விரவு உத்தம சிவராத்திரியாகும்.
    காலை தொடங்கி மறுநாள் உதயம்வரை அதாவது பகல் இரவு ஆகிய அறுபது நாழிகையும் சதுர்த்தசியாக இருந்தாலும், சூரியாஸ்த மனத்துக்குமுன் சதுர்த்தசி வந்தாலும், அன்றிரவு பத்து நாழிகைக்குப்பின் சதுர்த்தசி வந்தாலும் அவ்விரவு மத்திமசிவராத்திரியாகும்.
    இரவில் முன் இருபது நாழிகை சதுர்த்தசியிருந்து நீங்க அதன்பின் அதாவது அவ்விரவின் பின்பத்து நாழிகை அமாவாசை தொடர்ந்தால் அவ்விரவு அதம சிவராத்திரியாகும்.  இது தள்ளத்தக்கது.  ஆகலின் திரயோதசியுடன் சதுர்த்தசி ஒரு நாழிகையாவது கூடிவருகிற முந்திய நாளிரவே சிவராத்திரியெனக் கொள்ள வேண்டும்.  திரயோதசி உமா சொரூபம்.  சதுர்த்தசி சிவசொரூபம்.  அவ்விரண்டு திதியுங் கூடிய இரவு சிவலிங்க சொரூபம்.  சிவராத்திரி கால நிர்ணயத்துக்கு இன்னும், நுணுக்கமான கணிதங்களுள.  அவற்றை விரிந்த நூலுட் காண்க.
    இச்சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.  இதனை அனுட்டித்துப் பேறுபெறாத தேவர் முனிவர் அரசர் இலர்.  பிரமன் சிருட்டித் தொழிலையும், விட்டுணு திதித்தொழிலையும், இந்திரன் விண்ணாசையும், குபேரன் அளவற்ற நிதியையும், சுகுமாரன் சாரூபத்தையும், கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.
    இச்சிவராத்திரி விரதத்தை நோற்ப தெப்படி? 'இத்தகைய மகிமை வாய்ந்த சிவராத்திரி விரதம் நோற்போர்; அச்சிவனிரவு வாய்ந்த தினத்தின் முன்னாள் ஒருவேளையுண்டு மங்கையர் சங்கம நீக்கல் முதலிய ஆசாரந் தவறாதிருந்து பொழுது போக்கிச் சுத்தமான விடத்திற் படுத்துறங்கிச் சிவராத்திரியன்று விடியற்காலையி லெழுந்து புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து சூரியனுதிக்கும் வேளையில் காலையனுஷ்டான மியற்றிச் சிவாலயத்துச் சென்று பரமேசுவரனை விதிப்படித் தரிசித்துத் திரும்பி இழிகுலத்தோரையும் பாதகரையும் பார்க்காமலும் (அவர்கள்பால்) நெருங்காமலும் வீட்டினுக்கு வந்து பரமேசுவரனைப் பூசிக்குமிடத்தைக் கோமயத்தால் மெழுகிப், பொன்னாடையையும் பட்டாடையையும் அவண் மேலே கட்டி வாழை மரங்களையும் கரும்புகளையும் நாட்டித் தோரணங்களையும் மலர்மாலைகளையுந் தொடுத்து அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் நடுப்பகலில் ஸ்நானஞ் செய்து உச்சிக்கால வனுட்டானங்க ளியற்ற வேண்டும்.  பின்னர்ப் பரமேசுவரனை யருச்சித்தற்குரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சிவாலயத்திற் கொண்டு போய்க் கொடுத்துப் பரமேசுவரனை யர்ச்சிக்குமாறு ஏற்பாடு செய்து வீட்டினுக்கு வந்து பின்னுமோர் தரம் ஸ்நானஞ் செய்து மாலைக்கால அனுஷ்டான மியற்ற வேண்டும்.  பின்னர்ப் பொன்னாடையாதியா லலங்கரித்த விடத்தில் பரமேசுவரனைப் பீடத்தில் வைத்துத் தாபித்து ஆகமங்களில் விதித்த சிவபூசாவிதி தவறாமல் நான்கு சாமத்திலும் சாமத்திற் கொருமுறையாகப் பூசை புரிதல் வேண்டும்------இப்படி நான்கு சாமத்தும் நித்திரை யகற்றிப் பூசனை யியற்றி மறுநாள் விடியற் காலையிற் போய் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து காலையனுஷ்டானமியற்றி உச்சிக்கால அனுஷ்டானமும் அக்காலையிலேயே புரிந்து தமது தீட்சா குருவைப் பூசித்துப் பிராமணோத்தமர்கட்கு ஆடையும் உணவிற்குரிய்வைகளும் கொடுத்து உபசரித்து அவர்களா லாசீர்வதிக்கப் பெற்று, சூரியனுதித்து ஆறுநாழிகைக்குள் பாரணஞ் செய்திடல் (விரதத்தை உயர்த்துதல்) வேண்டும்----இப்படிச் சிவபூசை செய்யச் சக்தியற்ற வயோதிகரும் ஸ்திரீகளும் நோயாளரும் சிவராத்திரி தினத்தில் ஊணுறக்க மொழித்து அன்றிரவு நான்கு சாமத்தும் சிவபுராணங் கேட்டேனும் ஜெபங்கள் செய்தேனும் சிவாலயத்துச் சென்று பரமேசுவரனைத் தரிசித்தேனும் அவ்விரவை யகற்றி மறுநாட் காலையில் மேற்சொன்னபடி பாரணஞ் செய்தல் வேண்டும்.  அப்படிப் பாரணை செய்த பிறகு சிவபுராணம் படித்தேனுங் கேட்டேனும் கண்துயிலாது அற்றைப் பகற்பொழுது போக்கி அஸ்தமிக்கும் வேளையில் மாலைக்கால வனுஷ்டான மியற்றி அவ்விரவிலும் அன்னபானாதியருந்தாது புனிதமானவிடத்தில் ஆசாரத்துடன் நித்திரை செய்தல் வேண்டும்.  பாரணை செய்தபின் அற்றைப் பகலிற் றுயில் வரேல் அவர் காரணமின்றி நூறு பிராமணரைக் கொன்ற பழியடைவர்.  அபுத்தி பூர்வமாய்த் துயில்வாரேல் வேத விதிப்படி ஹோமம் புரிந்து அக்குற்றத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும்' என்ற சிவராத்திரி புராண வசனத்தால் அதனைக் கண்டறிக.  இலிங்கோற்பவம் முன் சொல்லப்பட்டது.  சிவபூசை யில்லாத வருள் 'சிவராத்திரி தினத்திலே இராத்திரி நாலுயாமமும் நித்திரையொழிக்க இயலாதவர்கள், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையிலுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும்.  இக்காலத்தில் சிவதரிசனம் மிகமேலாகிய புண்ணியமாம்.  இலிங்கோற்பவ காலம் இராத்திரி பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு முகூர்த்த காலம்.'
நவராத்திரி
    சிவராத்திரிபோல் நவராத்திரியும் தேசமெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.  அது உமாதேவியார்க்குரிய விரதம்.  அவ்வுண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? உண்மைகண்டு அனுட்டிக்கப்படாத விரதம் அற்பப்பயனுடையதே.  ஆகலின் அதனை யனுட்டித்தற் குரியார் அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.  பெயரளவில் அனுட்டிப்பவர் ஏமாற்றமடைவர்.  அவ்விரதத்தில் அன்னிய சமயக் கருத்துப் புகுத்தப்பட்டு விடும்.  அப்படித் தான் நவராத்திரி விரதம் இருந்து வருகிறது.  அவ்விரத வுண்மையைச் சைவப் பிரமாண நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுவோர் இன்றும் உளர்.  ஆனால் அதை ஏற்க விரும்பாத மனம் படைத்த சைவர் பலராய்விட்டனர்.  அநியாயம்.  யாரிட்ட சாபமோ அது! அல்லது கலிக்கொடுமை தானோ! 'ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்திற் கண் வேண்டும்' என்பது பழமொழி.  அன்னிய சமயத்தவர் நம்மோடு நெருங்கி உறவாடுவர்.  ஆயினும் தம் சமயத்திற்றான் அவர்க்குக் கண்.  அதனொடு தமக்குள்ள தொடர்பை அவர் தளர்த்திக் கொள்ளவே மாட்டார்.  சைவருட்டான் பலர் அவருக்கு மாறாகவே யிருக்கின்றனர்.  அவர் சீர்ப்பட வேண்டும்.  நானும் பெரியோ ரடிச்சுவடு பற்றி ஊதுகிற சங்கை ஊதுகிறேன்.  விடிகிறபோது விடியட்டும்.  என்றாவது விடியாமலா போகும்? பார்க்கலாம்.
    நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்று பொருள்.  'நவராத்திரி உத்ஸவத்திற்கும் விஜயதெசமி உற்சவத்திற்கும் சம்பந்த மேதேனு முண்டா? இன்றா?' என ஒருவர் கேட்டிருக்கிறார்.  பிரமாண சகிதம் அதற்கு விடை வேண்டும்.  அதுவரை தசரா என்ற பெயரை விலக்கி வைப்பதே தக்கது. தசரா - பத்து இரவுகள்.
    முதலாவது, நவராத்திரிக்குரிய காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
    'சிவோத்சவங்களுக்கெல்லாம் தீர்த்தத்தை நிச்சயம் செய்து கொண்டு ஆரம்பத்தைச் செய்ய வேண்டும்.  இந்த உத்ஸவத்துக்கு ஆரம்பம் முக்கியமென்று வாக்கியங்கள் மூலம் தெளிவாகிறது' என்கிறார் பிரமஸ்ரீ தெய்வசிகாமணிப் பட்டர். மானாமதுரை.  இந்த உத்ஸவம் என்றது நவராத்திரியை.
    'நவராத்திரி உற்சவத்திற்கு ஆரம்ப காலம் நிச்சயித்திருப்பதுபோல மகோற்சவத்திற்கு ஆரம்பம் சொல்லப்படாமல் உற்சவம் முடிவாக வேண்டிய நக்ஷத்திரம் திதி முதலிய காலமே சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை, திருநெல்வேலி வைதிக சைவ சம்மேளன அமைச்சர்.  ஆகவே நவராத்திரி விஷயத்தில் சிவாலயத்தில் ஒன்பது நாளுமே முக்கியமாத லறிக.  சிவாகமம் அவ்விரத காலத்தைச் சாந்திரமானப் படியே நிச்சயித்துள்ளது.  விநாயக சதுர்த்தி பாத்திரபத (சாந்திரமான புரட்டாதி) மாதத்திலும், நவராத்திரி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்திலும், ஸ்கந்தசஷ்டி கார்த்தீக (சாந்திரமான கார்த்திகை) மாதத்திலும் அனுட்டிக்க வேண்டும் என்பது சிவாகமவிதி.
    'நாம் அறிந்த அளவில் ஸ்ரீ காரணாகமத்தில் நவராத்திரி விதிப்படலத்தில், 'ஆச்வயுக் சுக்ல பக்ஷது ப்ரதிபந் நவம் யந்தகே! ப்ரதிபத்தின மாரப்ய வ்ரதோத் ஸவம தாசரேத்!' என்று சொல்லப்பட்டிருகிறபடி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமையில் நவராத்திரி விரதோற்சவத்தை ஆரம்பித்து க்ஷ - நவமியில் முடிப்பதே முன்னோர் அனுஷ்டானத்திற்கும், சிவாகமங்கட்கும் பொருத்தமானதென்று தீர்மானிக்கின்றோம்" என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை.
    இனி அவ்விரதத்தின் கருத்தைக் காணலாம்.  சிவபிரானுடைய அருட்சத்தியே உமாதேவி.  அச்சத்தியும் ஒன்றே.  ஆயினும் அது பலதொழில்களை யியற்றும்.  நெருப்புக்குச் சத்தியொன்றே.  அது தான் சூடு.  ஆயினும் அது வறுக்கும், பொரிக்கும், அவிக்கும், நீற்றும், உருக்கும், பொசுக்கும்.  அத்தனை பெயர்களை அது ஏற்கின்றது.  அப்படியே அச்சிவசத்தியும் பல பெயர்களைப் பெறும்.  அது சிருட்டிக்கிறது.  திதிக்கிறது, சங்கரிக்கிறது.  சிருட்டிக்கும்போது அதற்குச் சனனியென்று பெயர்.  திதிக்கும்போது அது ரோதயித்திரியாம்.  சங்காரத்தில் அது ஆரணியெனப்படும்.  பிரமன் சிருட்டிக்கிறான், விட்டுணு திதிக்கிறான், உருத்திரன் சங்கரிக்கிறான் என்றால் அத்தொழில்கள் அவர்களுக்குச் சொந்தமல்ல.  அவர்கள் தோன்றி மறைபவர்கள்.  ஒரு பிரமன் போனால் அப்பதவிக்கு இன்னொருவன் வந்து பிரமனாவன்.  அப்படியே 1 விஷ்ணு முதலியோருக்குமாம்.  மேலும் அண்டந் தோறுமாகப் பிரமர் பலர் உளர்.  விஷ்ணு முதலியோரும் அங்ஙனமே.  ஆகலின் அவர்களைக் கணக்கிற் சேர்க்கக்கூடாது.  அப்பிரமரனைவரையும் அதிட்டித்துள்ள சிருட்டிசத்தி அச்சனனி யொன்றுதான், அவ்விட்டுணுக்களனைவரையும் அதிட்டித்துள்ள திதிசத்தி அந்தரோதயித்திரி யொன்று தான்.  அவ்வுருத்திரரனைவரையும் அதிட்டித்துள்ள சங்காரசத்தி அவ்வாரணி யொன்றுதான்.  அம்மூன்று சத்திகளும் சிவசத்தியின் வியாபார பேதங்களே, வியாபாரம் - தொழில்.  ஆரணி சத்தியை முதல் மூன்று தினங்ங்களிலும், ரோதயித்திரி சத்தியை அடுத்த மூன்று தினங்களிலும், சனனிசத்தியைப் பின்மூன்று தினங்களிலும் வழிபட வேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர் ஒன்பதாந் தினமாகிய நவமியன்று அம்முச் சத்திகளின் மூலமாகிய சிவசத்தியை அதாவது உமாதேவியாரை கலச ஸ்தாபனஞ் செய்து உபவாசமிருந்து வழிபடவேண்டும்.  அதுபற்றியே அத்தினம் மஹாநவமியெனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.
    'பெருகு காதலிற் புரட்டைமுற் பிரதமை முதலாப்
    மருவி முன்புகல் விதிமுறை மணிக்குட மமைத்துச்
    சொரிந றுந்துண ரருச்சனை வரன்முறை தொகுத்துப்
    பரிவி னெண்பகற் பலாதியுண் டருண்முறை பயில்வார்,'
    'நடந்த நாள்கழித் தீற்றிடை யெதிர்ந்தமா நவமி
    தொடங்கு பிற்றைநாண் மறையவர்ப் போசனந் தொகுத்து
    வடங்கொள் பூண்முலை மறையவர் மடந்தையர்க் கினிது
    நுடங்கு கோசிக மளித்தபின் பாரண நுகர்வார்'
என்ற உபதேசகாண்டத்தால் அவ்விரதம் அனுட்டிக்கு முறை அறியப்படும்.
    'சேந்த தாமரைத் தடங்கணா னத்திற நோற்று
    மோந்த போர்முகத் தசுரரை முதலற முருக்கி
    வாய்ந்த னன்கலா சத்தியை யடைந்தனன் மற்றோர்
    பூந்த டங்கணோர் பாக்கிய சத்தியும் புரிந்தான்',
    'இமய மீன்றெடுந் தளித்தவள் விரதமீ திழைத்தோ
    ரமைய நல்கிய பெருவளந் துய்த்தன ராகி
    யுமைத ரும்பெருங் கருணையா லருங்கதி யுவந்தார்
    தமையெ டுத்தெடுத் துணர்த்துவ தியாருழைத் தகுமே'
என்ற அந்நூற் பாடல்கள் அவ்விரத மனுட்டித்தவர் பெற்ற பேறுகளை எடுத்துரைக்கின்றன.
    இக்காலை அவ்விரதம் சாத்திரத்துக்குப் பொருந்த அனுட்டிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை.  மேலே சொல்லப்பட்ட செனனியைச் சரசுவதி யெனவும், ரோதயித்திரியை இலக்குமியெனவும், ஆரணியை உமையெனவுஞ் சொல்வதுண்டு.  அங்ஙனமாயின் பிரமாவை அதிட்டிக்கிற சரசுவதி வேறு, அவருக்கு மனைவியாகிய சரசுவதி வேறு; விட்டுணுவை அதிட்டிக்கிற இலக்குமி வேறு, அவருக்கு மனைவியாகிய இலக்குமி வேறு; உருத்திரனை அதிட்டிக்கிற உமை வேறு, அவருக்கு மனைவியாகிய் உமை வேறு என்பது பெறப்படும்.  அப்பிரமனாதியோரை அதிட்டிக்கிற சரசுவதி, இலக்குமிம் உமை யென்போரைக் குறித்தது நவராத்திரி விசேடம் என்றால் அது பொருந்தும்.  இம்மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரன் அவருக்கு மனைவியாகிய உமை என்பார்க்கு அம்மும்மூர்த்திகளின் தலைவராய சதுர்த்தப் பொருளாயும் சைவசமய தெய்வமாயும் உள்ள சிவபிரான் உமாதேவியார் வேறாவார்.  சிவராத்திரி விரதம் அச்சிவபிரானுக்கும், நவராத்திரி விரதம் அவ்வுமாதேவியார்க்குமே உரியன.  ஆனால் அம்மும்மூர்த்திகளின் மனைவிமாராகிய சரசுவதி முதலியோருக்குரியது அவ்விரதம் என்கிறார் சிலர்.  அது சரியன்று.  அவ்விரதத்தை அப்பிரம விட்டுணு வாதியரே அனுட்டித்ததால் அது அறியப்படும்.  அன்றியும் தக்க யாகத்தில் வீரபத்திரமூர்த்தியால் அச்சரசுவதியின் (பிரம்மாவின் மனைவி) மூக்கு 2 அறுக்கப்பட்டது.  அவ்விலக்குமிக்குந் (விட்டுணுவின் மனைவி) தண்டனை கிடைத்தது, அங்ஙனம் பங்கப்பட்ட அத்தேவ ஸ்திரீகளைக் குறித்த விரதமாக அதனைக் கொள்வது பாவம்.  இனியாயினும் அன்ன ஆபாசக் கருத்துக்களைத் தள்ளுக.  ஸ்ரீ உமாதேவியாருக்குரியதே நவராத்திரி விரதமென்பதைக் கடைப்பிடிப்பதே உசிதம்.  சைவர் அது செய்து நலம் பெறுவாராக.
முடிப்புரை
    யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரை அறியாத சைவர் வெகு சிலரெ.  அந்நாவலர் சைவ சமய ஆராய்ச்சி, அறிவு, ஆண்மை மிக்கவர்.  'சைவ வினா விடை' என இரண்டு நூல் அவரெழுதியிருக்கிறார்.  அவை அருமை பெருமையுடையன; ஒவ்வொரு சைவரும் ஊன்றிக் கற்றற்குரியன.  இரண்டாஞ் சைவ வினா விடையில் விரதவியல் என்றொரு பகுதியுண்டு.  அதிற் சைவ விரதங்களைத் தொகுத்தும், அவற்றை அனுட்டிக்கு முறைகளைச் சுருக்கியும் நன்கு கூறபட்டுள்ளன.  அவ்விரதங்களை அம்முறையில் அனுட்டிப்பதே சைவர்க்கு நெறி.  மாறானவற்றை விடுவதும் நெறிதான்.  அந்நூலிற் சொல்லப்படாத சில விரதங்களையும் நம்மவர் அனுட்டித்து வருகின்றனர்.  அவையும் பிரமாணமுடைவாயின் சரி தான்.
    ஏகாதசி யென்றொரு விரதமுண்டு.  அதை வைணவரும் அனுட்டிப்பர், சைவரும் அனுட்டிப்பர்.  அவ்விரத விவரம் வைணவருக்கு ஒருவிதம், சைவருக்கு ஒரு விதம்.  இன்று வரை வைணவர் தம் சமயப் பாங்கில் அனுட்டிப்பாராயினர்.  சைவரும் தம் சமய நீதியிலன்றோ அனுட்டிக்க வேண்டும்.  அந்தோ! அவருட் சிலரோ பலரோ அன்று மாத்திரம் ஊர்த்துவபுண்டரம் அதாவது நாமம் போட்டுக் கொள்கின்றனர், வைகுண்ட யாத்திரையுஞ் செய்கின்றனர்.  தன்மானமென்பது அதுதான் போலும்.  அது சைவ விரதமாதலெப்படி?  திருப்பாற்கடலைக் கடைந்தனர் பிரம விஷ்ணுவாதி தேவர்களும், அசுரர்களும், அதிலிருந்து எழுந்தது ஆலகால மென்னுங் கொடுவிடம்.  அவ்விட வெப்பத்தால் அப்பிரம விஷ்ணுவாதி சகலரும் பொசுங்கினர், கருகினர்.  உலகமே நடுங்கி விட்டது.  தேவரனைவரும் கயிலைக்கு ஓடிச் சென்று சிவபிரானிடம் சரண் புகுந்தனர்.  திருவுளம் இரங்கியது அப்பெருமானார்க்கு.  அவ்விடத்தைக் கொணர்வித்து வாங்கி உண்டு தம் படிகநிறமான கண்டத்தில் நிறுத்தி அவ்வனைவரையுங் காத்தருளினார் அவர்.  அந்நஞ்சையுண்ட காலம் ஏகாதசி.  திருநீலகண்டரின் திருவருள் பெற்றனர் அத்தேவர்.  அவர் மறுநாள் துவாதசியில் அக்கடலைக் கடைந்தபோது அமுதமெழுந்தது.  விடத்தைத் தாம் உண்டு அமுதத்தைத் தேவர்க்கீந்த காரணத்தால் அச்சிவ பரம்பொருள் அத்தேவரெல்லாராலும் திரயோதசியன்று உபாசிக்கப்பட்டனர்.  அங்ஙனம் சிவபிரான் ஆலாலமுண்டு தேவரைக் காத்தருளிய தினம் ஏகாதசி யாதலால் அத்தினம் சைவர்க்கு விரததின மாயிற்று.  அச்சரித்திரத்தை மறந்து அவ்விரதத்தைச் சைவர் அனுட்டித்தல் பரிதாபம்.  அவர் பரிகசிக்கவும் படுவர்.
    'ஏகா தசியின் மாலைதனி லெல்லாம் வல்ல வெம்பெருமான்
    ஆகா வாலா கலவிடத்தை யருந்தி யமார்க் காத்தனர்பின்
    வாகா வீரா றாந்திதியின் வாரி யமிழ்த மெழவானோர்
    ஏகா துண்டு பதின்மூன்றா வெண்ணுந் திதிசா யும்போழ்தில்,'
    'அரனார் சபரி மரபுளியே யாற்றி வணங்கிப் போற்றினர் முப்
    புரனார் பகைவ ரல்வேல்வை போத விடைமே னின்றருளி
    வரனா ரருளை வழங்கினரால்---'
என்ற சிவாலய தரிசனவிதிப் பாடல்களில் மேற்காட்டிய உண்மை புலனாம்.  சபரி - பூசை.  ஆகவே சைவமக்கள் இனியாயினும் சிவாகம பண்டிதர்களை நாடுக.  அவர்களைக் கொண்டு சைவ விரதங்களையும், அனுட்டான முறைகளையும் சிவாகமப் பிரமாண சகிதம் ஆராய்ச்சி முறையில் எழுதுவித்து வாங்குக.  அதனை அச்சிட்டுப் பரப்புக.  சிறந்த சைவ சேவையாகும் அது.
முற்றிற்று
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
 
--------------------------------------------------------------------------------
1. நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
     ஆறுகோடி நாராயண ரங்ஙனே
     ஏறுகங் கைமணலெண்ணில் இந்திரர்
     ஈறிலாதவன் ஈசனொருவனே.
                    (அப்பரடிகள் தேவாரம் 5-ம் திருமுறை)
2. நாமகள் நாசி சிரம்பிரமன் படச்
     சோமன் முகம் நெரித்துந்தீபற
     தொல்லை வினைகெட உந்தீபற
                    (திருவாசகம்-திருவுந்தியார் 13)

--------------------------------------------------------------------------------
சிவராத்திரி விரத மகிமை
வைதிகநெறியினோர்க்கும் வைதிகமுறைமைசிந்தி
ஐதிகவழிப்பட்டோர்க்கும் ஆகமபுராணமார்த்த
செய்தியினுட் பட்டோர்குந் திறம்புசண்டா ளருக்குங்
கைதிகழ்சுத்தங்காட்டுங் கருணையவ்விரதமாக்கும்.
மணிநவநிதியம்பூக்கும் மாசிலாத்தெருளுண்டாக்கும்
அணிசிவகருமந்தேக்கும் அட்டவைசொரியங்காக்கும்
பணிபுனைசுந்தரேசர் பயிலு நோன்பெவைக்குமேலாந்
திணிதிருத்தவத்தின் முன்னாஞ் சிவநிசியென்னுமாதோ.
எண்ணிலா நியமநூலிசைத்த செந்நெறி
பண்ணினுந்தொலைகிலாப் பாதகம்பல
விண்ணுயர்மணியெதிர் மேவுமல்லென
வெண்ணிலவணிபிரான் விரதநல்குமால்.
தற்பரபரம்பர சுயம்புவாதியாம்
அற்புதச்சிவநிசி அநேகசன்மத்தின்
உற்பவமுறுவினை ஓங்குமூழ்முறை
புற்புத நிலையெனப் புவியின் வீக்குமே.
பொருவரிய சிவநிசியின் மகிமைசொல்லும் புராணமதை நனிவரைந்தோர் புத்தகத்தை
அருள்பெரிய தானமதா யுதவுகின்றோர் அரனிரவினாதி திருவாலயத்தின்
விரவு பரிசனர்கேட்கவுரைத்தோர் கற்றோர் விரும்பியொளிர் சிவமுன்னி மிகமகிழ்ந்தோர்
உரவுதிரைப் புவிமீதிற் செல்வராகி உண்மையறிந்தாதி சிவனுலகு சேர்வார்.
சிவநெறி யுலகம்வாழி செந்தமி ழகிலம்வாழி
உவமையின் மழைச்சீர்வாழி ஓங்குபல் வளனும் வாழி
சிவநிசிப் புராணம்வாழி செய்யுண் முந்நூறும் வாழி
தவநெறிநீறும் வாழி சங்கரன் புகழும் வாழி.
அநுட்டானம் - சிவபூசை முதலியனபற்றி
திருமுறைப் பாசுரங்களிற் சில
துஞ்சிரு காலைமாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத் தோதிநாளும் அரனடிக் கன்பதாகும்
வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி யடிகளாரே.
                    (திருநனிப்பள்ளி- திருநேரிசை)
(காலைமாலை தொடர்ச்சி- அனுட்டானம்)
நறுமலர் நீறுங்கொண்டு நாடொரு மேத்திவாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும்வண்ண
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்கமாறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செய்யாயே.
                       (திருவாலவாய் - திருநேரிசை)
தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியி னன்னீர்
கொண்டிருக் கோதியாட்டிக் குங்குமக் குழம்புசாத்தி
இண்டைகொண் டேறநோக்கி யீசனை யெம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே.
                      (தனித்திருநேரிசை)
நின்போல் அமரர்கள் நீண்முடிசாய்த்து நிமிர்த்துகுத்த
மைப்போதுழக்கிப் பவளந்தழைப்பன பாங்கறியா
என்போலிகள் பறித்திட்ட இலையும், முகையும் எல்லாம்
அம்போதெனக் கொள்ளும் ஐயனை யாறனடித்தலமே.
                    (திருவையாறு - திருவிருத்தம்)
மண்பொருந்து வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேராய் நின்றானை
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனைஎன்
கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவே.
                    (அப்பரடிகள் - திருப்பழனம், சீகாமரம்)
    திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------