Home            Jains Buddhists Hanged        Dance of Shiva
 

Thiruppavai vs Tiruvembavai

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி)
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
------------------------------------------------------------------------------
முன்னுரை
    சைவ சமயப் பிரமாண நூல்கள் இவையெனக் கண்டு அவற்றைச் சிறிதாவது படித்துணர வேண்டுவது சைவ சமயத்தாரின் முக்கிய கடமையாகும்.  அந்த எண்ணமில்லாத சைவ சமயிகள் பெருகிவிட்டனர்.  உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிலும் அப்பராமுகச் சைவர் பலருளர்.  ஆனால் அச்சமயப் பயிற்சி தமக்கிருப்பது போல் அவர் காட்டிக் கொள்வதுண்டு.  ஆயினும் தமக்குத் தெரியாத துறையில் பேசாமலிருக்கும் மனவொடுக்கம் அவருக்கு வராது.  அவருடைய சமயச் சொல்லும் செயலும் சைவ சமயப் பயிரைக் களைந்தெறிந்து களையை வளர்க்க இடஞ் செய்கின்றன.  அவருக்கிடையில் 'சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி)' என்னும் இந்நூல் வெளிவரலாயிற்று.  அவர் இதைப் படிப்பாரோ? என்ன செய்வாரோ? என்னதான் ஆவாரோ?
    நான் பாவைக்கூட்டு மகாநாடுகளைக் கண்டேன், அங்கு நிகழ்ந்த ஆரவாரப் பேச்சுக்களைக் கேட்டேன்.  வெளியான எழுத்துக்களைப் படித்தேன்.  அவையே என்னை இந்நூல் உருவாதற்கு வேண்டிய ஆராய்ச்சியிற் செலுத்தின.  ஆயினும் அது குற்றமாகாது.  சைவமும், வைணவமும், மாயாவாதமும் அடிப்படையிலேயே வேறுபட்ட சமயங்கள்.  அவ்வுண்மை சர்வ ஜனப் பிரசித்தமாக வேண்டும்.  அப்போது தான் சைவ சமூகம் சைவ சமயத்தைத் தனக்கு பயன் படுத்திக் கொள்ள முடியும்.  இந்நூல் அப்பணி செய்வதாகலின் அறிஞர்க்கு ஏற்புடையதே.
    திருப்பாவை யாராய்ச்சியில் எனக்குப் பிரமாணமாயிருந்தது 'திருப்பாவை ஆண்டா ளருளிச் செய்தது.  இதில் மூலமும் பதவுரையும், பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த மூவாயிரப்படி வ்யாக்யாநமும், அரும்பத விளக்கமும், ஸ்வாபதேச வ்யாக்யாநமும், மூவாயிரப்படி ப்ரமாணத்திரட்டும், அவற்றின் ஆகரமும் பதப்பொருளும் சேர்த்து----க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமியால் பரிசோதிக்கப்பட்ட பிரதிக்கிணங்க எம்.வி.நாயுடு அண்டு கம்பெனி யாரால் தமது டிவைன் பிரெஸ்ஸிற் பதிப்பிக்கப்பட்டது.  சென்னை 1905' என்ற முகப்புக் கொண்ட புத்தகம்.  மேற்கோள்களின் இறுதியில் பிறைக்குறிக்குள் உரை எனக் காட்டி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.  அவ்வுரையாவது அப்புத்தகம்.  எண்ணாவது அதிலுள்ள பக்க எண்.
    இந்நூலைத் தம் பணச்செலவில் அச்சிட்டுதவியவர்கள் சங்கரன் கோயில், சைவ சித்தாந்த சபைப், பொருளாளர் உயர்திரு S. இராஜகோபால முதலியார் அவர்கள்.  அவர்கள் சைவ சமயத்துக்கு நெஞ்சாரச் சேவை செய்து வருகிறார்கள்.  தம்மைப் போன்று சைவ சமய தனவான்களும் அச்சேவையில் ஈடுபடவேண்டும் மென்ற ஆசை அவர்களுக்கு நிரம்பவுண்டு.  ஆகையால் தம்மை யடுத்த அத்தகையாருக்கு 'ஆர்த்துப் பெருகி கரைகிழிய வலைந்துப் படரும் பெருகுநதி, யீர்த்துச் செருத்தற் புனிற்றவையிளங்கன் றலற வேகுங்காற், பார்த்துக் கரையி னிருந்தவர்கள் பலர்க்கும் பாவ முறாததனிற், றீர்த்துக் கரையின் விட வல்லான் செய்யா திருப்பி னவற்குறுமே' என்ற ஸ்ரீமத் கச்சியப்ப முனிவர் பெருமானாரின் அருளுரையை அவ்வப்போது எடுத்துக்காட்டுவதும் அவர்களுக்கு வழக்கம்'  அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.
    இந்நூலைச் செவ்வையாகப் புரூப்சரிபார்த்து உபகரித்த சித்தாந்த சைவ சீலர் சிவபூஜாதுரந்தரர் நெல்லைத், திருவாளர் தி.மாணிக்கவாசகம் பிள்ளையவர்களுக்கும், நல்ல முறையில் அச்சிட்டுப் புத்தகமாக்கித் தந்த நெல்லை, ராயல் பிரஸ் அதிபரவர்களுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.  இந்நூல் வெளிவரப் பெருமுயற்சி யெடுத்துக் கொண்ட நண்பர் திரு. தி. சங்கர பாண்டிய முதலியாரவர்கள் சைவ மக்களனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.
சங்கரன்கோவில்                            ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
17-1-1963                                 துணைத் தலைவர், சைவ சித்தாந்த சபை

--------------------------------------------------------------------------------
பதிப்புரை
    சைவ தர்ம தாபனங்கள் பல.  அவற்றிற் சைவ சமயமா பிரசங்கிக்கப் படுகிறது? ஆம்.  ஆங்காங்கே அதுவுஞ் சிறிதுண்டு தான்.  ஆனால் சைவத்துரோகம், வைணவம், மாயாவாதம், பேசுபவருக்கும் கேட்பவருக்கும் பணங் கொடுப்பவருக்கும் இன்னதென்றே விளங்காத கலப்பட மதங்கள் முதலியவே அப்பிரசங்கத்தில் மிகப் பெரும் பகுதியாயிருக்கும்.  அதற்குப் பொறுப்பாளியார்?  அவரைக் கடவுள் தான் அறிவர்.  பெரும்பான்மைப் பிரசாரகருக்கு மேடையேறிப் பேசத் தெரிந்துவிட்டால், அது போதும்.  சமய வரம்பைப் போற்ற வேண்டுமே யென்ற கவலை தமக்கு இருத்தலவசிய மென்பதை அவர் சிறிதும் எண்ணார்.  பணங் கொடுப்பவருட் பெரும்பாலாரும் அப்படித் தானிருக்கின்றனர்.  அப்பிரசாரகர் தமக்கு வேண்டியவராயிருந்தால் அப்பணங் கொடுப்பவரிடமிருந்து அப்பிரசாரகருக்கு அப்பிரசாரம் எதுவாயிருந்தாலும் பணம் கிடைத்துவிடும்.  அது நிச்சயம்.  அப்பணங் கொடுப்பவர் தம் சொந்த வேலைக்குச் சம்பளத்தில் ஓராளை நியமித்தால் அவ்வேலையையும், சம்பளத்தையும் ஆராய்ந்தே அந்த ஆளுக்குச் சம்பளங் கொடுப்பர்.  வேலை சீரில்லையானால் பேசின சம்பளத்தைக் குறைக்கவௌம் பின்னிடாரவர், ஏன்? அதவர் சொந்த வேலை, சொந்தப் பணம்.  ஆனால் தர்ம தானத்தின் பணம் அவர் சொந்தப்பணமன்று.  பிரசாரங்கள் பற்றிய கவலையும் அவருக்கில்லை.  ஆகலின் அவர் தாராளமாக அப்பணத்தை எடுத்து அப்பிரசாரகரின் பேச்சைக் கருதாமலே அவரிடம் கொடுத்துத் தாபனக்கணக்கில் எழுதிவிடுவர்.  அதுதான் அவருக்குச் சைவ தர்ம பரிபாலனமாயிருந்து வருகிறது.  சைவ தர்ம தாடனங்களின் பெரும் பகுதிப் பிரசாரங்கள் பிரசாரகரின் பணவருவாய்க்கே சாதகமாவதன்றிச் சைவ சமயாபி விருத்திக்கன்று.
     சமயங்கள் பல.  அவற்றுட் சைவம் ஒன்று.  வைணவம் இன்னொன்று.  திருவெம்பாவை யென்னும் பாடற்றொகுதி சைவம்.  திருப்பாவை யென்னும் பாடற்றொகுதி வைணவம்.  ஆகலின் அவ்விரண்டும் முற்றிலும் தம்முள் வேறுபட்டன.  ஆயினும் அவற்றின் கூட்டு மகாநாடுகள் சில ஆண்டுகளாக இத்தமிழ் நாட்டில் ஆங்காங்கே நடந்து வருகின்றன.  அவற்றை இயைத்து வழிபடலாமென்கிறார் ஒரு சாரார்.  இயைப்ப தெப்படி? முத்தன் என்பவனுக்கும், சித்தன் என்பவனுக்கும் கண் மூக்கு காது முதலிய எல்லா வுறுப்புக்குகளுமுள.  அதனால் அவ்விருவரும் சமம்; ஆகலின் முத்தன் மனைவி முத்தனைப் போல் சித்தனையும், சித்தன் மனைவி சித்தனைப் போல் முத்தனையுங் கூடிக் குலவலாம் என்னலாமா? முத்தனுஞ் சித்தனும் அவ்வுறுப்புக்களாற் சமந்தான்.  ஆனால் இவன் முத்தன், இவன் சித்தன் எனப்பிரித்தறிந்து கோடற்கு அடையாளங்களுமுள.  அவனவனடையாளம் அவனவனது தனித்தன்மையைக் காட்டும்.  ஒருவனது தனித்தன்மையைக் காட்டும் அவனடையாளத்தை உலகில் வேறு யாரிடமுங் காண முடியாது.  அவ்வடையாளத்தைக் கொண்டுதான் முத்தன் மனைவி முத்தனையும், சித்தன் மனைவி சித்தனையுமே கூடித் தம் கற்பைக் காத்து வாழ்கின்றனர்.  அவ்வடையாளத்தை உதாசீனஞ் செய்துவிட்டால் மக்கள் மக்களாதல் சிறிதுமில்லை.  தனித்தன்மையின் இன்றியமையாமையை 'இதனை இப்போது மாற்றுவது இந்தியாவின் தனித்தன்மையை இழக்கச் செய்துவிடு மாதலால் இக்கொள்கையை மாற்றக் கூடாது' (தினமணி 26-12-1962) என்று பிரதமர் நேருவுங் கூறிச் சம்மதிக்கிறார்.  அதுபோல் இருபாவைகளும் தமிழ், பாவைப் பாடல்கள், வருணனை நிறைந்துள்ளன.  பக்தியை யூட்டுவன என்பவற்றிலும் அவை போன்ற பிறவற்றிலும் சமமெனச் சொல்லப் பட்டாலும் அவை, கண் மூக்குக் காது முதலிய உறுப்புக்கள் சமமென்பது போலும் சமமாவனவே.  அவற்றைக்கொண்டு அவ்விரு பாவைகளுஞ் சமமெனப் பேசுவது சமயக் கற்பை குலைக்கவே செய்யும்.  திருவெம்பாவை சிவபரத்துவம் பேசுவதே அதன் தனித்தன்மையைக் காட்டும் அடையாளம்.  திருப்பாவை விஷ்ணுபரத்துவம் பேசுவதே அதன் தனித்தன்மையைக் காட்டும் அடையாளம்.  சிவனையும் விஷ்ணுவையும் ஒரு பொருளே யென்போர் சைவரெனப் படுதற்கும், வைணவரெனப் படுதற்கும் சிறிதும் உரிமையும் தகுதியும் அற்றவர்.  அவர் அவ்விரு பாவைகளையுமே தொடுவதேன்? ஆராய்ச்சியுடையார் அவை இயையுமென மறந்துஞ் சொல்லார்.  அன்றியும் சைவசமயிகள் மற்றைச் சிவஸ்துதிகளாகிய பஞ்சபுராணங்களை ஓதாமல் நிறுத்தித் திருவெம்பாவையை மாத்திரமே ஓதி வர வேண்டுமென்பதற்குரிய நாட்களில் அதனோடு அந்நிய தேவதாஸ்துதியாகிய திருப்பாவையும் சேர்த்து ஓதுக எனப் பேசுவது என்ன நியாயம்? அதைவிட அந்நாட்களில் அச்சைவர்கள் பஞ்சபுராணங்களைச் சேர்த்து ஓதிவரலாமே.  ஆனால் மேலே சொன்ன பிரசாரகரோ அத்திருப்பாவையியைபை ஆதரித்துப் பரப்புதற்கே மிகவும் உபயோகமாகின்றனர்.
    அவ்விரு பாவைகளும் தம்முள் இயைந்து செல்லக் கூடியனவா என்பதை எங்கள் ஆசிரியர் சித்தாந்த பண்டித பூஷணம் சிவ ஸ்ரீ.ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்களிடம் நான் விசாரித்தேன்.  அவர்கள் அவற்றின் கருத்து வேற்றுமைகளை எனக்கு விளக்கித் தாம் எழுதி வைத்திருந்த 'சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி)' என்னும் கையெழுத்துப் பிரதியையும் படித்துக் காட்டினார்கள்.  அப்பிரதியே இந்நூல்.  அவ்வேற்றுமையைக் காட்டும் அரிய கருத்துக்களை இந்நூலில் விளங்கக் காணலாம்.  ஆசிரியரவர்களைப் போன்று ஒப்பு நோக்கு முறையில் பல சமயங்களின் நூல்களிலும் ஆராய்ச்சி மிக்குள்ள தெள்ளறிஞர் இக்காலத்தில் மிகச் சிலரே.  ஆசிரியரவர்கள் தம் ஆராய்ச்சியிற் கண்ட 'சமய நுட்பங்களைச் சிறிதுந் தயங்காது தகுந்த பிரமாணங்களுடன் தருக்க முறையாகப் பேசியும், பல நூல்களை எழுதி வெளியிட்டும் சிவபணி செய்து வருகிறார்கள்.  அப்படியே இந்நூலையும் எழுதியுபகரித்த அவர்களுக்கு அடியேனது நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக.
    சைவசமய வளர்ச்சிக்கு அவ்வக் காலத்தில் வெவ்வேறு வடிவங்களில் தடைகள் பல புறப்படலாம்.  அவற்றை எப்பாடு பட்டாயினும் காண்டலும் நீக்கலும் அவசியம் அதற்கு உதவக் கூடிய நூல்களையாக்குவதும் வெளியிடுவதுமே சிவபணியில் உண்மையான உத்வேக முடையார்க்கு முதற்கடமை.  இந்நூலின் அருமையை நன்கறிந்தவரும், சிவபுண்ணிய சீலருமாகிய எனது நண்பர் ஸ்ரீ S.ராஜகோபாலன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்நூலை வெளியிட்டு உதவியுள்ளார்கள்.  அவர்கட்கும் எனது நன்றி உரியது.  அறிவுடைப் பெருமக்கள் இந்நூலைப் போற்றிப் படித்துப் பயனடைவார்களாக.
சங்கரன்கோவில்                            T.சங்கரபாண்டிய முதலியார்,
17-1-1963                                      காரியதரிசி, சைவ சித்தாந்த சபை

--------------------------------------------------------------------------------
சைவ வைணவப் பாவைகள்
(ஆராய்ச்சி)
தோற்றுவாய்
    மக்களின் நல்வாழ்வே எல்லா அரசியல்களுக்குங் குறிக்கோள்.  ஆனால் அதை அவர் அடையும்படி செய்ய அவ்வரசியலார் வகுக்கும் வழிகள் மாத்திரம் வேறு வேறு. அதை.
    "The welfare of the people is the aim of all politics.  But the means to achieve this object is conceived differently by those who hope and presume to guide the people"
                                                                -(Swarajya 23-12-1961)     என்றார் ராஜாஜி.  இந்நாட்டில் இக்காலை இருந்துவரும் அரசியற்கட்சிகள் பல.  அவை தம்முள் மோதிக்கொள்ளவும் செய்கின்றன.  அதற்குக் காரணமென்னை? மேலே சொன்ன குறிக்கோளா? அன்று.  அதனையடையும் பொருட்டு அவை தத்தமக்கென வகுத்துக்கொண்ட வழிகளே காரணம்.  எந்தக் கட்சிக்கும் அது வகுத்துக்கொண்ட அவ்வழிகள் அதன் தனித்தன்மையாகும்.  அவற்றையொதுக்கி அக்குறிக்கோளை மாத்திரம் எடுத்துக்காட்டி அத்தனை கட்சிகளையும் ஒன்றாக்க இப்போதுள்ள அரசியலறிஞருள்ளாவது எவராலும் முடிந்ததா? இன்றில்லாவிட்டாலும் நாளையாவது முடியுமா?  இரண்டு கட்சிகள் ஒன்றுபடுவதானாலும் அவற்றுள் ஒன்று மறைவது மெய், சுதந்திரா, கணதந்திர பரிஷத் இணைந்த விதங் காண்க.
    சிலபல கட்சிகள் கூட்டுச் சேர்கின்றன.  தமக்குப் பிடியாத பிறிதொரு கட்சியை எதிர்க்க வேண்டுமானால் அவை அங்ஙனம் சேரும்.  அப்போதும் அக்கூட்டுக் கட்சிகளில் எதுவுந் தன்தனித் தன்மையை விட்டுக் கொடாது.  ஒரு சிறு பகுதியை விட்டுக் கொடுத்தாலும் அது தாற்காலிகமாகவே யிருக்கும்.  தன் தனித் தன்மையை யறவே உதறி விட்ட கட்சி தன்னையே, ஒழித்துக் கொண்டதாகும்.  கூட்டுக் கட்சிகளே பின்னர் தம்முள் மோதிக் கொள்வது முண்டு.  குறிக்கோளை மாத்திரம் கருதினால் கட்சிகளின் தோற்றத்துக்கே இடமிராது.
    சிலபல நாடுகள் கூட்டுச் சேர்கின்றன.  அவையுந் தந்தந் தனித்தன்மையை விட்டுக் கொடுத்துக் கூட்டுச் சேரா.  சர்வதேசக் கூட்டு என்பதும் அவ்வடிப்படையிற்றான் உண்டாகும்.
    "இன்று சிலர் சர்வதேச பிரஜை என்றெல்லாம் பேசுகிறார்கள்.  ஆனால் சர்வ தேசியமானது தேசிய சிந்தனை அடிப்படையிலேயே அமைய வேண்டும்.  சர்வ தேசியம் தவிர்க்க முடியாதது.  தேசிய உணர்ச்சியின் அடிப்படையில் சர்வதேசியம் ஏற்பட வேண்டும்" (தினமணி 6-10-1961) என்றார் பிரதமர் நேரு.  ஆகவே நாடு (அரசு)களின் கூட்டால் அக்கூட்டிலிருக்கும் ஒவ்வொரு நாடும் தனக்குப் பிறநாடுகளால் தீங்கு விளையாமலிருக்குமா? மேலும் நலன் ஏதேனும் வரக் கூடுமா? என்பதிலேயே கருத்தாயிருக்கும்.
    மாகாணக் கூட்டுக்களும் அப்படித்தான்.
    மொழிகளும் தம் தம் தனிமையை விட்டுக் கூட்டுச் சேரா.  இரண்டு மூன்று மொழிகளுக்குரிய மாகாணங்கள் கூடி ஒரு மாகாணமாய் வாழ்ந்த காலமுமுண்டு.  அக்கூட்டால் அம்மொழிகள் பாதிக்கப்பட்டன வென்ற கருத்துத் தோன்றியது.  அதனால் அவை இப்போது மொழிவழி மாகாணங்களாய்ப் பிரிந்தன.
    இந்நாட்டிற் சாதிகள் பல.  அவையும் தம்தம் தனித்தன்மைகளை விட்டுக் கொடுக்கவில்லை.  சாதிச்சங்கங்கள், சாதிச்சத்திரங்கள் முதலிய ஸ்தாபனங்களே அதற்குச் சான்று.  அவ்வச் சாதியின் தனிமையும், தூய்மையும் அவற்றாற் போற்றப்பட்டு வருகின்றன.
    கூட்டரவு (கூட்டுறவு)ச் சங்கங்கள் பல.  அவற்றின் உறுப்பின ரொவ்வொருவரும் தம் தனிமையையும், பங்குத்தொகையையும், இலாபத்தையும் விட்டுக்கொடுக்க விரும்பார்.  எந்தக் கூட்டிலுள்ள அங்கத்தினரின் முழுவிலாசமும் பிறவும் அக்கூட்டுப் பதிவுப் புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.  அவ்விலாசம் தான் அவருடைய தனித்தன்மையாகும்.  அதிருந்தாற்றான் அக்கூட்டால் வரும் இலாப நஷ்டங்கள் அத்தனை பேருக்கும் சமமாய்க் கிடைக்க வழியுண்டு.  ஒருவரை யொருவர் மோசஞ் செய்ய இடனிராது.  மோசக்காரரை அரசு பிடித்துக் கொள்ளும்.  கூட்டுச் சேர்க்க முந்துபவர் தம் விலாசத்தைக் காட்டாமலிருந்தால் அவர் வஞ்சர்.  அவர் பேச்சை நம்பி அக்கூட்டத்திற் சேர்பவர் தம் கைப்பொருளை யிழந்து தவிப்பர்.
    கூட்டுக்கள் இன்னும் பல.  ஆனால் தனித்தன்மையை யிழக்கச் செய்யும் எந்தக் கூட்டும் அத்தன்மையை யுடைய பொருளையே அழித்துவிடும்.  அதிதுவரை ஆராய்ந்து காட்டப்பட்டது.
    உலகில் நாத்திகமுதல் சித்தாந்தசைவ மீறாகப்பல சமயங்களுள.  ஏதாவதொரு நாமரூபத்தில் அதிருந்து கொண்டுதானிருக்கும்.  அது போகாமலிருப்பதே நல்லதுமாகும்.  ஆனால் அத்தனை சமயங்களுக்கும் குறிக்கோள் ஒன்று தானா? ஆமென்பாரு முளர்.  நாத்திகமல்லாத சமயங்களுக்கு ஆத்திகமென்றொரு பொதுப் பெயருண்டு.  அவற்றின் குறிக்கோள் ஒன்றென்பார் மிகப்பலர்.  அதனை ஏற்கலாம்.  ஆயினும் அக்குறிக்கோளை மக்கள் அடையுமாறு ஒவ்வொரு சமயமும் வகுத்துள்ள வழிகளும் வேறு வேறாகத்தானிருக்கின்றன.  ஆகலின் ஒரு சமயம் தனக்கென வகுத்துக்கொண்ட வழிகளின் தொகுதியே அச்சமயத்தின் தனித்தன்மையாகு.  அத்தொகுதியை யழிப்பது அத்தனித்தன்மையை யழிப்பதாகும்.  அவ்வழிவு அச்சமயத்தின் அழிவென்பதிற் சந்தேகமில்லை.
    ஒவ்வொரு சமயத்துக்கும் அதன் வழிபடு கடவுள், பிரமாண நூல், ஆசாரியன், சாதனம், முத்தியியல் ஆகியவையே தனித்தன்மையாகும்.  சமயசாத்திரப் பயிற்சியின்மை, உலக சுகத்தில் மோகம், ஆன்ம லாபத்தில் அலட்சிய புத்தி முதலிய கேடுகள் ஒரு சமயத்தின் தனித்தன்மையை அச்சமயமாந்தருக்கு விளங்க வொட்டாமல் தடுத்துவிடும்.  ஒரு சமயத்தைச் சார்ந்த வொருவன் அதன் தனித்தன்மையை யறியாமற் கிடப்பானாயின் அவனுக்கு அச்சமயமானங்கெடும்.
    ஒரு சமயத்தின் எல்லையில் இன்னொரு சமயம் பிரவேசியாது.  அதற் கனுமதியு மில்லை.  வரம்புதாண்டிப் பிரவேசிக்கும் சமயத்தைத் தீர விசாரித்து வரை நிறுத்த அரசுண்டு.  பொதுவானதோ ரெதிர்ப்பிருந்து அல்லல் நேருமாயின் அவ்வல்லற் படுஞ் சமயங்கள் தம்முட் கூட்டுச் சேரலாம்.  அப்போதும் அச்சமயங்கள் தம் தம் தனித்தன்மைக்குப் பாதகம் நேராதபடி எச்சரிக்கையாயிருந்து கொள்ள வேண்டும்.  இன்றேல் அவற்றுள்ளேயே இலெளகிக வலியுள்ள சமயத்தால் அவ்வலியற்ற சமயம் அழிக்கப்பட்டுவிடும்.
    இந்நாட்டில் சமய நிலயங்கள் எத்தனையோவுள.  அவற்றின் செல்வங்களும் வருவாய்களும் அபரிமிதம்.  ஆயினும் அந்நிலயங்கள் தம் பாதுகாப்புக்கென என்றாவது பயங்கரமான யுத்த சாதனங்களைக் கொண்டிருந்தனவா? அது தெரியவில்லை.  பெருந்தொகைகளைச் செலவிட்டுப் பலவகை யுத்த சாதனங்களைச் சித்தஞ் செய்வதும், சைனியங்களை வைத்திருப்பதும் அரசுகளுக்கே உரியன.  அவற்றைப் பயன் படுத்தும் உரிமையும் அவற்றுக்கேயுண்டு.  சிலபல அரசுகள் சிலபல சந்தர்பங்களில் சமயங்களையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும்.  அரசியற் சச்சரவுகள் ஊடாடாமல் சமயங்கள் தம்மளவில் மோதிக்கொள்ளுமாயின் அது ஒப்பு நோக்கு முறையில் நிகழ்ந்து அறிவாராய்ச்சி நூல்கள் பெருகுவதற்கே ஏதுவாகும்.  தமிழளவில் அன்ன இன்னும் ஏராளமாய்க் காணப்படும்.  வடமொழியில் அவை இன்னும் அதிகம்.  ஆகலின் சமயங்களின் கூட்டுக்கு அத்துணை ஆவசியகம் நேரா தென்க.
    இந்நிலையில் இத்தமிழ் நாட்டில் சமயங்களின் கூட்டொன்று தலைதூக்கியிருக்கிறது.  அதிற் சேர்ந்துள்ளனவாகச் சொல்லப்படுஞ் சமயங்கள் இரண்டு.  அவை சைவசமயமும் வைணவசமயமுமாம்.  தனித்தன்மை சைவசமயத்துக்கு முண்டு, வைணவ சமயத்துக்கு முண்டு.  அதனைப் பறிகொடுக்க அவை சிறிது மிசையா.  அவை தோன்றியநாள் தொட்டுத் தம் தனித்தன்மையை விட்டுக்கொடாமலும், கூட்டுச் சேராமலும் நிலவி வருகின்றன.  நாத்திகம் பரவுகிறது.  அது தொலைய வேண்டும்; பக்தி குறைகிறது அது பெருக வேண்டும்; அதன் பொருட்டேயாம் அக்கூட்டு எனபாருமுளர்.  அதுண்மையானால் கிறித்தவம் இசுலாமியம் முதலியவும் அதிலிடம் பெற வேண்டும்.  அதில்லை.  ஆகலின் அக்காரணஞ் சரியன்று.  சென்ற பத்துப் பன்னிரண்டாண்டுகளுக்கு முன் அக்கூட்டுத் தொடங்கியது.  அதற்குத் திருவெம்பாவை திருப்பாவைக் கூட்டு என்பது பெயர்.  மார்கழி தோறும் அக்கூட்டு மகாநாடுகள் அதிவிமரிசையாய் நடக்கும்.  பல சைவக் கோவில்களும், சில வைணவக் கோவில்களுமே அதற்கிடம்.  செலவு அவ்விரு சமயக்கோவில்களையுஞ் சேர்ந்ததெனச் சொல்லப்படுகிறது.  அம்மகா நாடுகளால் அச்சமயங்களுக்கோ அச்சமயமாந்தருக்கோ ஏதேனும் நலன் விளையுமா? தீங்காவது இல்லாமலிருக்குமா? அதை விசாரிக்க எழுந்ததே இந்நூல்.
சைவமும் வைணவமும்
    சைவ சமயம் யாராலும் அசைக்க முடியாத அடிப்படையைக் கொண்டது.  வைணவ சமயமும் அப்படிப் பட்டதே.  சைவ சமயத்தார் தம் சமய் நெறியிலும், வைணவ சமயத்தார் தம் சமய நெறியிலும் ஒழுகித் தம்தம் சமயங்களிற் சொல்லப்பட்ட கதியை யடையவே பிறந்தனர்.  அச்சமயங்களின் சற்சம்பிரதாயங்களைப் போக்கியும்.  தம்மையும் சான்றோரெனக் கருதி மனம் போனபடி வேண்டாதனவும், கேடு பயப்பனவுமான புதுமைகளைப் புகுத்தியும் மாற்றங்கள் செய்ய அவ்விரு சமயத்தார்க்கும் அனுமதியுமில்லை, தரமுங் கிடையாது.
    "கொள்ளேன் புரந்தரன் மாலயன்
    வாழ்வு குடிகெடினும் - உள்ளேன்
    பிறதெய்வ முன்னையல்லா தெங்க
    ளுத்தமனே" என்றது சைவத்தமிழ்.
    "மறந்தும் புறந்தொழா மாந்தர்" என்றது வைணவத் தமிழ். புறந்தொழா மாந்தர் என்ற தொடருக்குப் பொருள் கூறவந்த வைணவ வுரைகாரர்.
    "தேவதாந்திர ஸ்பர்ச மின்றிக்கே
     யிருக்குமவர்களை, பர்த்தாவோடு பார்
     யைக்குப் பொருத்தமில்லையே யாகிலும்
     ருசியுண்டானவன்று கூடலாம்; பர்த்
     ரந்தர ஸம்ச்லேஷ முண்டானால் யோக்
     யதையுங் கெடு மத்தனையிறே" (உரை 67)
என்றார்.  இது இரு சமயத்தாருக்கும் ஒக்கும்.  ஆகவே சிவனே சைவசமய பரதெய்வம்.  அவனுக்குச் சமமென விஷ்ணு முதலிய வேறெந்த தெய்வத்தைக் கொண்டாலும் அங்ஙனங் கொண்ட சைவன் சைவ சமயக் கற்பழிந்தவனே.  வைணவனுக்கு விஷ்ணுவே பரதெய்வம்.  அத்தெய்வத்துக்குச் சமமெனச் சிவன் முதலிய வேறெந்த தெய்வத்தைக் கொண்ட வைணவனும் வைணவ சமயக் கற்பழிந்த்வனே.  அச்சமயங்களின் வரம்பு அப்படி யிருக்கிறது.  அதனைப் போற்றி யொழுகுவதே அவ்விரு சமயத்தார்க்குங் கடன்.
    கொற்றனுக்கு மனைவியர் நாலைந்து பேர்.  சாத்தனுக்கும் அத்தனை மனைவிய ருளர்.  அம்மனைவிய ரெல்லாரும் பதிவிரதைகளே.  ஆகலின் கொற்றன் மனைவிமார் சாத்தனைக் கொற்றனுக்குச் சமமாகக் கொண்டு உபசரியார்.  சாத்தன் மனைவிமாரும் கொற்றனை அங்ஙனஞ் செய்யார்.  ஆனால் கொற்றன் மனைவிமார் சாத்தனையும், சாத்தன் மனைவிமார் கொற்றனையும் உபசரியாமலும் இரார்.  உத்தமி தன் கணவனுக்குச் செய்யும் உபசாரமும் பிறருக்குச் செய்யும் உபசாரமும் பேதப்பட்டேயிருக்கும்.  குப்பியென்பவ ளொருத்தி.  அவள் அக்கொற்றனையும் சாத்தனையும் சமமாகக் கருதி உபசரிப்பவள்.  அவள் அப்பதிவிரதைகளைப் பார்த்து 'உங்களுட் சிலர் கொற்றனுக்கு மாத்திரம் மனைவிமாரா யிருப்பதும், சிலர் சாத்தனுக்கு மாத்திரம் மனைவிமாரா யிருப்பதும் நல்லதல்ல.  நான் அவ்விருவரையும் சமமாக உபசரித்துச் சமமான இன்பங் காண்கிறேன்.  கொற்றனுங் கணவன்.  சாத்தனுங் கணவன்.  கணவன் என்ற சொல் அவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேத புத்தியைத் தருவன கொற்றன் சாத்தன் என்ற பெயர்கள்.  அவற்றை விட்டு அபேதபுத்திக்கேதுவான கணவன் என்ற பெயரே பற்றி நீங்களைத்தனைபெண்டிரும் அவ்விருவரையும் சமமாகவே உபசரித்து நான்போ லாகுங்கள்' என்று பிரசங்கித்தாள்.  அப்பிரசங்கத்தை அப்பதிவிரதைகள் ஏற்பாரா? மாட்டார்.  அதே முறையில் கடவுள் என்ற பொதுப்பெயரைக் காட்டிச் சிவனையும் விஷ்ணுவையும் ஒன்றெனப் பேசி சைவரையும் வைணவரையுங் கற்புக் கெடச் செய்கின்றனர் அக்குப்பியன்னார்.  இவ்வுலகில் பதிவிரதைகள் நட்பினராய்க் கூடிவாழ முடியாதா? வரம்பழித்தாற்றான் அது சாத்தியமோ?
    ஒவ்வொரு பதிவிரதையும் பதிவிரதையென்ற தொடரிலுள்ள பதி என்ற சொல்லுக்குத் தந்தன் கணவனையே பொருளாகக் கொள்வாள்.  அதுபோல ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவனும் கடவுள் என்ற பொதுசொல்லுக்குத் தந்தன் சமயக் கடவுளையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
    சிவன் விஷ்ணு என்பன ஒரே கடவுட்குரிய வேறு வேறு பெயர்கள் என வாதிப்பார் சிலர்.  அமர கோசம் அப்படிச் சொல்லுகிறதா? அமரகோசமாவது சொற்பொருள் கூறும் வடநூல்.
பாவைகளின் கூட்டு
    அக்கூட்டு மகாநாட்டைத் தொடங்கியவர் யார்? அவர் தான் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரியார்.  சிவனும் விஷ்ணுவும் ஒன்றேயென்பது அவர் மதம்.  அதனால் அவர் சைவ சமயத்தவருமல்லர்.  வைணவ சமயத்தவருமல்லர் என்பதை எவருந் தெரிந்துகொள்வர்.  அவ்வாசாரியரது சமயத்தின் விலாசந்தானென்னை? அது தான் மாயாவாதமென்பது.  அஹம்பிரமவாதம், ஏகாத்மவாதம், மித்யாவாதம், பிரசன்ன பெளத்தம் முதலிய வேறு பெயர்களும் அதற்குள.  அவர் தம் மாயாவாத சமயத்தையும் அக்கூட்டுட் சேர்த்திருக்கின்றனரா? தத்துவராயரென்பாரொருவர்.  அவரியற்றிய நூல் "பாடுதுறை" என்பது.  அது மாயாவாதம் போதிப்பது.  அதில் நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இரண்டு திருவெம்பாவைகளிருக்கின்றன.  மாயாவாதமும் அக்கூட்டுட் சேர்ந்திருக்குமாயின் அம்மகாநாட்டிற்கு சைவத் திருவெம்பாவை, வைணவத் திருப்பாவை, மாயாவாதத் திருவெம்பாவைக் கூட்டு மகாநாடெனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும்.  அதில்லை.  அவ்வாசாரியர் அக்கூட்டில் தம்மதவிலாசத்தையும், தம்மதத் திருவெம்பாவையும் சேர்த்திலர்.  அங்ஙனம் அவர் தாம் விலகி நின்று மற்றவரை அக்கூட்டுட் படுத்தியிருக்கிறார்.  ஏன்? அவரைச் சார்ந்தாரேனும் விடை தருக.
ஸ்ரீசங்கராசாரியார் வணங்குந் தெய்வம்
    மாயாவாதத்தில் பிரமனெவொன்றுண்டு.  அதையும் அவர் வணங்குகிறாரெனச் சொல்ல முடியாது.  பாரத தேசத்தில் எங்குந் தேடுக.  அப்பிரம வணக்கத்துக்கு ஒரு கோயிலும் அகப்படாது.  அவர் மதம் சொல்லுகிறபடி அப்பிரமம் அநிர்வசநீயமும் சடமுள்ள மாயை யென்னுமோர் பின்னா சக்தியிற் பிரதிபிம்பித்தது.  அப்பிரதிபிம்பந்தான் ஈசன் அல்லது ஈசுரன், அவ்வீசுரன் முக்குணங்களிற் பிரதிபிம்பித்து மூன்று தெய்வங்களாயின.  அவை பிரமனும், விஷ்ணுவும், உருத்திரனுமாம்.  அம்மாயா சபளித மூர்த்தியாகிய ஈசுரனையே சந்திரமெளளீசுரனெனத் தம் மடத்தில் அவர் வைத்து வழிபடுகிறார்.  தமக்கு ஆலய வழிபாடு வேண்டுமாயின் அவர் சைவக் கோவில்களுக்கோ வைணவக் கோவில்களுக்கோதான் வந்து வழிபட வேண்டும்.  சைவக் கோயில்களிலுள்ள சிவலிங்க முதலிய எல்லா மூர்த்திகளும் சிவாகம விதிப்படியும், வைணவக் கோயில்களிலுள்ள எல்லா மூர்த்திகளும் பாஞ்சராத்திரனவகானஸ் ஆகம விதிப்படியும் பிரதிட்டீக்கப்பட்டவை.  அவ்விருசமய ஆகமங்களும் அவருக்கு வேதம் போல் உடன்பாடல்ல.  அக்கோயில்களில் நடைபெறும் நித்தியபூசையாதியவற்றில் தலையிட்டு ஏதேனும் செய்ய அவருக்கு உரிமையில்லை.  சைவக்கோவில்களிலுள்ள சிவமூர்த்திகளெல்லாம் ஞான வடிவங்கள்.  வைணவக்கோவில்களிலுள்ள விஷ்ணு மூர்த்திகளும் அப்படித்தானிருக்க முடியும்.  ஆனால் அவ்வாசாரியாரும் அவர் சீடரும் அவ்விரு சமயக் கோயில்களிலும் வந்து அம்மூர்த்திகளை தம்மதக்கொள்கைப்படி மாயையிலே, குணத்திலே தோன்றிய பிரதிபிம்பங்களென மனத்திற் பாவித்தே வணங்கிச் செல்வர்.  அவ்வாகமங்களிலே விதித்த வழிபாட்டு முறையோடு அவர் செய்யும் வழிபாட்டுமுறை முற்றிலும் மாறுபட்டது.  அவர் மதத்திற் கூறப்படும் பிரமம் அக்கோயில்களிலுள்ள மூர்த்திமான்களையெல்லாங் கடந்த பொருளென்பது அவர் மதத்தின் முடிவு.  சைவசமய சாத்திர வல்லுநரும், வைணவ சமய சாத்திர வல்லுநரும் அம்மதத்தையும், அப்பிரமத்தின் இலக்கணத்தையும் முழுக்க அவைதிகமெனக் கண்டித்தொதுக்கிப் பலநூல்களை வடமொழியிலும் தமிழிலும் எழுதியிருக்கின்றனர்.  அவ்விரு சமயங்களின் வரம்பையும் அவை பாதுகாப்பன.  ஆனால் அக்கூட்டு மகாநாடு அதை அழித்தேவிடும்.  வரம்பழிந்த பிறகு அவ்விரு சமயங்களையும் அவ்வச்சமயத்தார் பற்றுவதெப்படி? பற்றி வழிபட்டு உய்வதெப்படி? அவ்வரம்பழிவு அவரிடம் மாயாவாதத்தைப் பரப்பவே அடிகோலும்.
இரு சமயப் பாவைகள்
    மாணிக்கவாசகர் சைவ சமய ஆசாரியருள் ஒருவர்.  திருவாசகமும் திருக்கோவையாரும் அவர் பாடிய நூல்கள்.  தமிழிற் சைவசமய் பிரமாண நூல்களாகிய பன்னிரு திருமுறைகளுள் அவை எட்டாவதாகும்.  திருவாசகத்திலுள்ளது திருவெம்பாவை.  அதன் பாடல்கள் இருபது.  மற்றைத்திருமுறைகளையும் திருக்கோவையாரையும் ஒதுக்கித் திருவாசகத்தைத் தனி வைத்துப் பொருள் காணத் துணிவதும், திருவாசகத்திலுள்ள பிற பாடல்களைக் கழித்துத் திருவெம்பாவையைத் தனியாக்கிப் பொருள் காணத் துணிவதும் நேரியபொருள்கோள்முறையல்ல.  திருவெம்பாவை திருவாசகப்பாடல்கள் பிறவற்றோடியைந்தும், திருவாசகம், திருக்கோவையாரொடும் பிற திருமுறைகளோடு மியைந்துமே பொருள் தருவன.  அப்படியே ஆழ்வார்கள் வைணவ சமய ஆசாரியர்கள்.  அவர்கள் பாடியது நாலாயிரப் பிரபந்தம் என்ற நூல்.  நாச்சியார் அவ்வாழ்வார்களில் ஒருவர்.  அவர் செய்தது திருப்பாவை. அதன் பாடல்கள் முப்பது.  அதுவும் அந்நாலாயிரத்தைத் தழுவியே பொருள் தரும்.  அதனைத் தனி வைத்துப் பொருள் காண முயல்வதும் பொருந்தாது.  பொருள்கோள் முறையிற் பொருள் காண வல்லார்க்குத் திருவெம்பாவையின் இருதயம் சிவனே பரம்பொருள், விஷ்ணுவாதி சகல தெய்வங்களும், அவனுக்கடிமைகளேயென்பதும், திருப்பாவையின் இருதயம் விஷ்ணுவே பரம்பொருள், சிவன் முதலிய சகல தெய்வங்களும் அவனுக்கடிமைகளே யென்பதும் சித்திக்கும்.

ஓதுங் காலம்
    திருவெம்பாவை ஓதுவது மார்கழித் திருவாதிரைக்குப் பத்துநாள் முன் தொடங்கித் திருவாதிரையிற் பூர்த்தியடையும்.  அப்பத்து நாளிலும் திருவெம்பாவை தவிர வழக்காமாகவுள்ள பஞ்சபுராணமும் ஓதப்படுவதில்லை.  தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்ற ஐந்திலிருந்தும் அந்நூல் வரிசையில் ஒன்றிரண்டு பாடல்களையோதுவது பஞ்சபுராணம் எனப்படும்.
    "நிறையருட் பாடலாகி நிரம்புதே வாரம் யாரு - மறைதிரு வாச கஞ்சீ ரமையிசைப் பாபல் லாண்டு - குறைதவிர் புராண மின்ன கொண்டுறத் துதித்தல் செய்து - மறைபுகல் விபூதி மேனி வளைந்திரு கையாலேற்று"
                                                (மாயூரப் புராணம்)
என்றது காண்க.  திருக்கோவையாரும், பத்துப்பதினோராந் திருமுறைகளும் அவ்வோதுதலிற் சேர்க்கப்பட்டில.  அம்மாதத்து மற்றை நாட்களிலும், மற்றை மாதங்களிலும் பஞ்சபுராணம் ஓதப்படும்.  சைவ சமயத்து ஆன்றோராசாரம் அது.  ஆனால் திருப்பாவையில்,
    "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என மார்கழிப் பெளர்ணமியே குறிக்கப்பட்டிருக்கிறது.  ஆயினும் மார்கழி முழுவதும் திருப்பாவை வைணவச் சமயத்தாரால் ஓதப்பட்டு வருகிறது.  அது அச்சமய சம்பிரதாயம் போலும்.
    மார்கழி நீராடலுக்குச் சுருதிப் பிரமாணமில்லை.  ஆயினும் அது சிஷ்டாசாரமாயிருந்து வந்தது.  சிஷ்டாசாரமும் வேதப் பிரமாணம்போல் மதிக்கப்படும்.
    "இந்நோன்புக்கு மூலமென்னென்னில்; மீமாம்ஸையிலே ஹோளாதிகரண ந்யாயத்தாலே சிஷ்டாசார ஸித்தம்.  மேலையார் செய்வனகள் என்று ஆண்டாள்தானும் அருளிச் செய்தாள்" (உரை 14,15) என்றது காண்க.
    விடியச் சில நாழிகைக்கு முன் ஒரு வீட்டுக் கன்னிப்பெண் துயிலெழுந்து அடுத்த வீடு சென்று அவ்வீட்டுக் கன்னியை யெழுப்பித் தன்னொடு சேர்த்துக் கொள்வாள்.  அவ்விருவரும் இன்னொரு வீடு போய் அங்குத் துயிலுங் கன்னியை யெழுப்பித் தம்மொடு சேர்த்துக் கொள்வர்.  இப்படிப் பல பெண்கள் சேர்ந்து நீர் நிலைக்குச் சென்று நீராடித் திரும்புவர். இது இந்நாட்டில் மார்கழி தோறும் திருவாதிரை முடியப் பத்து நாட்கள் நடந்து வந்தது.  இவ்வழக்கத்தை அடியாகக் கொண்டு திருவெம்பாவையியற்றப் பட்டது.
    திருப்பாவைக்கு அடிப்படை வரலாறு வேறுண்டு.  அது நிகழ்ந்த விடம் ஆய்ப்பாடி.  அதிலும் நீராடலென்பது வருகிறது.  கண்ணன் திருவாய்ப் பாடியிலேயிருந்தான்.  அங்கு ஆய்ப் பெண்கள் பலர்.  அவர்களிடம் அவன் தூர்த்த முறையில் சரசம் பண்ணினான்.  அவன் தூர்த்தன் (காமுகன்), அவனோடு ஆய்ப் பெண்களைச் சேரவிடக்கூடாது எனக் கருதி அக்குல முதியோர் அப்பெண்களை நிலவறையிலே தள்ளிக் காவலில் வைத்தனர்.  அது மழையில்லாக் காலம்.  பசுக்களும் மனிதருந் துன்புற்றனர்.  மழைக்கு நோன்பு வேண்டும்.  அது தோற்றற் குரியார் பெண்கள்.  அம்முதியோர் அப்பெண்களை வெளிக் கொணர்ந்து, நோற்குமாறு அவர்களிடஞ் சொல்லிக், கண்ணனை அவர்களுக்குச் சகாயமா யிருக்குமாறு கேட்டு அவனிடம் சம்மதமும் பெற்றனர்.  அங்ஙனம் கண்ணன் கையில் அப்பெண்களைக் காட்டிக் கொடுத்துப் போயினர் அம் முதியோர்.  அந்நேரம் பகல்.  அவனும் அப்பெண்களும் அப்பகலை இரவாக்கிக் களித்து நெடுநேரம் போக்கினர்.  பிறகு அவன் அன்றையிரவின் பிற்பகுதியில் அவர்களைத் திரும்ப வருமாறு சொல்லியனுப்பிவிட்டு நப்பின்னை வீடு போய்ச் சேர்ந்தான்.  தாங்களும் அவனும் பரஸ்பரம் பண்ணின ஸம்ச்லேஷத்தால் அப்பெண்கள் தளர்ச்சியடைந்து தம் வீடு போய் அச்சம்ச்லேஷத்தையெண்ணி யெண்ணி உறங்கியும் உறங்காமலுங்கிடந்தனர்.  அப்பிற்பகுதி யிரவில் அப்பெண்களே எழுப்புதற்கும் எழுப்பபடுவதற்கும் திருப்பாவையில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
    "ஸ்ரீய: பதி - க்ருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி - பஞ்சலக்ஷம் குடியிலுள்ள - ஒத்த பருவத்திற் பெண்களும் தானுமாய் வளர்ந்தருளுகிற காலத்திலே; தானும் ப்ராப்தயெளவநனாய், அவர்களுக்கும் யெளவநம் வந்து தலைக்கட்டினவாறே, கோபவ்ருத்தரெல்லாருங் கூடி, 'க்ருஷ்ணன் தூர்த்தனாயிரா நின்றான்.  இவன் முகத்திலே பெண்கள் விழிக்கலாகாது' என்று பார்த்து, இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே யடைக்க; பெண்களும் க்ருஷ்ணனும் பண்ணின பாக்யத்தாலே வர்ஷமின்றிக்கேயொழிய, பெண்களிலிருந்து மநோரதிக்கிறார்கள்; - கோதநராயிருக்கிற இடையர் வர்ஷார்த்தமாக நம்மை நோற்கச் சொல்லக்கடவர்கள்.  க்ருஷ்ணன் இதுக்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன்.  'நமக்கொரு துக்கமில்லை.' என்று பெண்கள் ப்ரீதைகளாய் தரித்திருக்கிற தசையிலே, வர்ஷமின்றிக்கே யிருக்கிற படியைக் கண்டு.  கோபவ்ருத்தரெல்லாரும் திரண்டு, 'பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்கும் விரகு ஏதோ?' என்று பார்த்து 'வர்ஷார்த்தமாக நோற்க வர்ஷமுண்டாம்' என்று, 'இவ்வூரில் பெண்களடைய நோற்கக் கடவர்கள், இந்நோன்புக்கு, இங்குத்தைக்கு அதிபனான ஸ்ரீநந்தகோபர் மகன் க்ருஷ்ணன் கடகனாவான்' என்று அத்யவலித்து, பெண் பிள்ளைகளை யடைய அழைத்து க்ருஷ்ணனையுமழைத்து, பெண்களை நோற்கச் சொல்லி, 'இவர்கள் நோன்புக்கு நீ கடனாக வேணும்' என்று க்ருஷ்ணனை அபேக்ஷக்க; அவன், 'எனக்கு க்ஷமமன்று' என்ன; 'இத்தனையும் செய்ய வேணும்' என்று மறுக்க வொண்ணாதபடி நிர்ப்பந்திக்க; அவனும் இசைந்தபின்பு.  எல்லாரும் திரளவிருந்து பெண்கள் நோற்பார், இதுக்கு வேண்டுவது க்ருஷ்ணன் ஸஹகரித்துக் கொடுப்பான்' என்று ஓ மறைந்து, க்ருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டி கொடுத்து கோபவ்ருத்த ரெல்லாரும் போன பின்பு, பெண்களும் க்ருஷ்ணனும் கூடவிருந்து 'திருக்குரவை கோத்த ராத்தி போல, பெண்காள்! இதுவும் நமக்கொரு ராத்திரியே!' என்று க்ருஷ்ணன் கொண்டாடி, 'இனி அசிர்ப்புப் பிறக்க வைகல் இருப்போமல்லோம், இப்போது எல்லாரும் போய் அபர ராத்ரியிலே வந்து எழுப்புங்கோள் நோன்புக்குக் குளிக்கலாம்படி' என்றருளிச் செய்து, க்ருஷ்ணனும் பெண்களைப் பிரிந்து போய் தரிக்கமாட்டாமே, நப்பின்னைப் பிராட்டி திருமாளிகையிலே புக்கான்.  பெண்களும் பரஸ்பர ஸம்ச்லேஷத்தாலே கால்நடை தந்து போய் தம் தாம் மாளிகையிலே புக்கு உறங்கப் புக்கவிடத்தில்; கண் உறங்காமையாலே, முற்படவுணர்ந்தவர்கள், க்ருஷ்ண குண சேஷ்டி தங்களை நினைத்து, எழுந்திருக்கமாட்டாதே கிடக்கிறவர்களை யுணர்த்த, தனித்தனியே சென்று எழுப்பி, எல்லாருங் கூடி, உத்தேச்யமான ஸ்ரீநந்தகோபர் திருமாளிகையிலே சென்று க்ருஷ்ணனை யெழுப்பி, தங்கள் அபேக்ஷதத்தை யறிவித்து ---அபேக்ஷதம் பெற்று முடிக்கிறது" (உரை 17,18,19,20)
என்றது காண்க.  அவ்வாய்ப் பெண்கள் யுவதிகளென்பதும், அவர்களும் அவனும் செய்தது தேக ஸம்ச்லேஷ மென்பதும் தெரிகின்றன.  இல்லாவிட்டால் கோபவருத்தர் அவனைத் தூர்த்தனென நிந்தித்திருக்க மாட்டார்.  அப்பெண்களும் அவன் போற்றான் இருந்திருக்கக்கூடும்.  இன்றேல் அவர்கள் நிலவறைகளில் தள்ளப்பட்டிரார்கள்.
    'துறைவனொ டொருநாள் நக்குவிளை
    யாடலுங் கடிந்தன், றைதே கம்ம மெய்
    தோய் நட்பே' என்ற குறுந்தொகைப் பாடலையும், அதற்குத்
    'துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள் நகைத்து விளையாடுதலையும், அவனுடைய மெய்யைத் தோய்ந்த நட்பானது, நீக்கியது; இது வியத்தற் குரியது' என்ற டாக்டர் உ.வே.சாமிநாதையர் தந்த உரையையும் நினைப்பிக்கிறது அந்நிகழ்ச்சி.  மழையை விரும்பித் தம் பெண்களை அத்தூர்த்தன் வசம் காட்டிக் கொடுத்தனர்.  அக்கோபவ்ருத்தர்.  அதனால் அவர் தரமும் எண்ணப்படும்.  துயிலெழுப்புதற்கென அந்த யுவதிகளைக் கொண்ட திருப்பாவை போன்றதா திருவெம்பாவை? திருவெம்பாவைப் பெண்கள் கன்னிகள்.  அவர்கள் நீர்நிலைக்கே போய் நீராடினர்கள்.  அந்த யுவதிகள் ஆடியதாக நதியோ, பொய்கையோ வேறு நீர் நிலையோ திருப்பாவையிற் சொல்லப்படவில்லை.
துயிலெழுப்புதல்
    திருவெம்பாவையில் யுவதிகளோ, ஆடவரோ எழுப்பப்பட்டிலர்.  ஆனால் திருப்பாவையில் எழுப்பப்பட்டவர் யார்? முதல் 5 பாடல்களில் துயிலெழுப்புதலில்லை.  அடுத்த 16 பாடல்களில் பெண்கள் வீடு வீடாய்ச் சென்று பெண்களைத் துயிலெழுப்புகின்றனர்.  அப்பாவையில் 16 ஆம் பாடலின் அவர்கள் நந்தகோபன் மாளிகைக்கு வந்து காவற்காரனையும், உட்புறக் காவலைனையும் எழுப்புகின்றன்ர். 17 ஆம் பாடலில் அப்பெண்கள் உள்ளே சென்று நந்தகோபனையும், யசோதையையும், பலராமையும், கண்ணனையும் எழுப்ப அந்நால்வரும் எழுந்திலர்.  18ம் பாடலில் அப்பெண்கள் நப்பின்னையை யெழும்புகின்றனர்.  19, 20, 21 ஆம் பாடல்களில் அப்பெண்கள் கண்ணனை யெழுப்பி அப்பாடல்களிலும் பின்னுள்ள ஏனைப் பாடல்களிலும் அவனைத் துதித்துத் தம் அபேக்ஷத்தங்களைப் பெற்றுக்கொண்ட பகுதி சொல்லப்படுகிறது.  இப்படி அப்பெண்கள் நேரே கண்ணன் திருப்பிடத்துக்குப் போனார்கள்.  அவர்கள் எந்த நீர் நிலையிலாவது நீராடினார்களா? இல்லை.
    வீடு வீடாகச் சென்று எழுப்பப்பட்ட பெண்களுள் புணர்ந்து பழகிய யுவதிகளும் உளர்.  9 ஆம் பாடலில் 'அனந்தலோ' என்ற சொல் வருகிறது.  அதற்கு
    'நெடும்போது க்ருஷ்ணா நுபவம் பண்ணி,
    படுக்கையிற் சாய்ந்தது இப்போதோ'  (உரை 114,115),
    'நெடும் போது நாயகனோடு கூடியிருந்து
    படுக்கையிலே சாய்ந்த திப்போதோ' (உரை 116)
என உரை கூறப்பட்டிருக்கிறது.  கண்ணன் கோபிமாரோடு ஒருத்திக் கொருவனாகி ஏகக்காலத்தில் கூடியிருந்த விருத்தாந்தத்தை இங்கு நினைவுகூர்க.   மேலும் அப்படிச் சொல்லி யெழுப்புகிற பெண்கள் கன்னிகளா யிருக்கமாட்டார்களென்பது யாவரு மறிந்தே.  அவர்களும் அவ்வெழுப்பப்பட்ட பெண்போல் தேர்ந்த யுவதிகளாகவே யிருப்பார்கள்.  இங்கு அகத்துறையைக் கொண்டு வந்து பொருத்தப் பார்ப்பது செல்லாது.  அகத்துறையில் ஒரு தலைவனுக்கு ஒரு தலைவியே யுள்ளாள்.  கண்ணனுக்கிருந்த கோபப் பெண்களோ பலர்.
      அவ்வாய்ப் பெண்கள் ஆடிய நீர்தா னெது? 20 ஆம் பாடலில்.
    'நப்பின்னை நங்காய் --- உன் மணாளனை இப்போதே யெம்மை நீராட்டு' என வருகிறது.  அதற்கு உரை.
    'நப்பின்னைப் பிராட்டியே!--- உன் மணவாளனான க்ருஷ்ணனையும் விரஹத்தால் மெலிந்த சரீரமுனைய எங்களையும் இந்த க்ஷணத்திலேயே ஸம்ச்லேஷிக்கும்படி செய்ய வேணுமென்ற இரக்கிறார்கள்' (உரை 182) என்பது.
அதனோடு
    'க்ருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்க மின்றிக்கே உன் கடாக்ஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும் உறங்கு மத்தனையோ.  க்ருஷ்ணா நுபவத்துக்கு ஏகாந்தமான காலம் ஸித்தித்திருக்க உறங்கக் கடவையோ' (உரை 148) என்றதையுஞ் சேர்த்துக் காண்க. கண்ணனை அப்பெண்கள் தேகத்தால் ஸம்ச்லேஷிக்கவே விரும்பினார்களென்பது அவற்றாற் கருதப்படும்.  திருப்பாவை பெண்கள் ஆடிய நீர் அந்த ஸம்ச்லேஷமேயாம்.
ஸம்ச்லேஷம்
    ஆய்க்குலப் பெண்களுக்குச்க் கண்ணனை ஸம்ச்லேஷிக்க வேண்டுமென்பதே ஆசை.  அதற்காகவே அவர்கள் அந்நோன்பை யெடுத்தார்கள்.  மாரிக்காலம் போல மார்கழி மாதமும் புணர்ச்சிக் குகந்த காலம்.  அவர்கள் நோற்றது பாவைநோன்பு.  மழை வேண்டி அந்நோன்பில் அவர்கள் ஏவப்பட்டார்கள்.  மழையைத் தருந்தெய்வம் இந்திராணி.  காமத்துக் கநுகூலஞ் செய்யுந் தெய்வம் இரதி.  அந்நோன்பில் இந்திராணி வணங்கப்படவில்லை.  இரதிய்யெ வணங்கப்பட்டது.  ஆகலின் அப்பாவை இரதியே.  ஸம்ச்லேஷத்துக்குக் கண்ணன் தங்களோ டிணங்கவேண்டுமென்றே அவர்களால் அந்நோன்பு நோற்கப்பட்டது.  அவர்களுங் கண்ணனுங் கூடுங் களமே பாவைக்களம்.  கண்ணன் பெண்களின் மாயையில் சிக்கியவன்.  அப்படியே அப்பெண்களும் அவன் மாயையிற் பட்டனர்.   பொழுது விடிந்தாலும் அவர்கள் அவனைக் கட்டிக் கொண்டு கிடப்பார்கள்.  நீராட வேண்டுமென அவர்கள் சொல்வதற் கருத்தம் தாம் அவனை ஸம்ச்லேஷிக்க வேண்டுமென்பதே.  அவர்கள் தம்மேல் அவன் எப்போது வந்து விழுவான்  என்று எதிர்பார்த்துத் தங்களை யலங்கரித்தவண்ண மிருப்பார்கள்.  அவன் அவர்களை ஒரு நாள் ஸம்ச்லேஷித்தால் அதுவே அவர்களுக்குப் போதும்.  அவ்வானந்தம் அவர்களுள்ளத்தில் பலநாள் நீடித்திருக்கும்.  அதனாலும் அவர்கள் தங்களை அலங்கரித்தவண்ண மிருப்பார்கள்.   ஆய்ப்பாடியில் ஐந்து லட்சம் ஆய்க்குடிகளிருந்தன.  அத்தனை குடிகளிலுமுள்ள பெண்கலும் கொஞ்சமா? அப்பெண்களெல்லாரையும் அவன் கூட்டிச் சுகிக்கத்திருக்கிறான்.  அப்பெண்களும் அவனைக் கூடிச் சுகித்திருக்கிறார்கள்.  அத்தனை பெண்கைளின் பெற்றொருக்கும் அவனொருவனே மருமகனானான்.  அவனை மருமகனாகக் கொள்ளாமல் எத்தப் பெண்ணின் பெற்றோரு மிருந்ததில்லை.  ஆனால்  அப்பெண்களுள் எவளும் அவனால் விதிப்படி மணந்து கொள்ளப்பட்டவளல்லள். எல்லாப் பெண்களும் அவனாற் களவாடாப்பட்டவர்களே.   இராமன் போல்  ஏகபத்தினி விரதனல்லனவன்.  இரதி வைகுண்ட பதவி தருந் தெய்வமன்று.  முடிந்தால் உடற் புணர்ச்சிக்கே அதுதவி புரியும்.  ஒருமுறை  கூடினால் அவனுடம்பிலுள்ள  பரிமளம் ஆய்ப்பெண்களுடம்பிலும் படிந்திருக்கும்.  அவர்கள் பலநாள் தேய்த்துக் குளித்தாலும் அது அவர்களுடம்பை விட்டுப் போகாது.  கண்ணன் என அப்பெண்கள் சொன்னாலும் அக்கோபவ்ருத்தருக்குக் கோபம் வரும்.  அப்பெண்கள் அவனோடு கூடுவதை  அந்த வ்ருத்தரும் ஆனவரை தடுக்க  முயன்றனர்.  முடியவில்லை. ஓய்ந்து விட்டனர். அவ்வடங்காப் பெண்களே பகிரங்கமாகக் கண்ணன் வீட்டுக்கு வரலாயினர்.
    'பெருமாள் வர்ஷாகாலம் -- விச்லேஷித்தார் கூடுங் காலமுமாய் கூடியிருந்தார் போகரஸமநுவபவிக்குங் காலமுமா யிருக்க, நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவோமோ' (உரை 202)
    'மாரிக்காலம் போலே மார்கழித் திங்களும் விச்லேஷித்தார் கூடவும் ஸ்ம்ச்லேஷித்தார் ரஸிக்கவும் யோக்யமான காலமா யிருக்க, நீ எங்கள் காரிய மாராய்ந்து ஸம்ச்லேஷிக்க வேண்டாவோ' (உரை 202)
    '(பாவைக்களம் புக்கார்) க்ருஷ்ணனும் தாங்களும் கழகமிடும் ஸ்ங்கேத ஸ்தலம் புக்கார்கள்.  கழகம்- ஓலக்கம்.  ஸங்கேத ஸ்தலமாவது - வர்ஷார்த்தமாக இந்த்ராணியையும் ஸம்ச்லேஷார்த்தமாக ரதியையும் நோற்கைக்குப் பெண்கள் திரளுமிடம்' (உரை 139)
    'தையொரு திங்களில் காம ஸமரச்யணம் பண்ணுகையாலே, பாவையென்று - அவனகமுடையாளான ரதியைச் சொல்லுதல்' (உரை 38)
    'பாவைக்களம் - க்ருஷ்ணனும் தாங்களும் கூடுகைக்கு குறித்தவிடத்தில்' (உரை 138)
    'மாயனை - பெண்கள் மாயையி லகப்பட்ட ஆச்சர்ய பூதனானவனை' (உரை 148)
     'பகலை யிரவாக்கிக் கொண்டு விளக்கிலே க்ருஷ்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டு படுக்கையிலே கிடக்கப் பெறுவதே' (உரை 176)
    'பகலை யிரவாக்கிக் கொண்டு என்றது - ராத்ரி செய்யும் க்ருத்யத்தை விடிந்தும் செய்கை.  அதாவது- விடிந்தும் விளக்கு வைத்துக் கொண்டு ஸம்ச்லேஷித்திருக்கை' (உரை 176),
    '(பாவைக்குச் சாற்றி நீராடினால்) - நாட்டார்க்கு நோன்பு என்றொரு வ்யாஜத்தையிட்டு நம்முடைய விரஹதாபாம் போக நாம் குளித்தால், நோன்பென்றொரு வ்யாஜத்தைவிட்டு க்ருஷ்ண ஸம்ச்லேஷத்தைப் பண்ணினா லென்றுமாம்' (உரை 61).
    'நீராட-க்ருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி போய்க் குளிக்கை.  இத்தால்-இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ண ஸம்ச்லேஷம்.  தமிழரும், கலவியை, சுனையாடல் என்றார்கள்' (உரை 26,27)
    'நீராட என்றதுக்கு நோன்புக்காகக் குளிக்கை வாக்யார்த்தமாய், இத்தைச் சொல்லுமவர்களுடைய ஹார்த்தமான த்வந்யார்த்தத்தை யருளிச் செய்கிறார் -- நீராட என்ற வர்த்தத்தால் ஸம்ச்லேஷம் த்வநிக்குமென்கைக்கு நியாமக மருளிச் செய்கிறார்' (உரை 26,27)
    'கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழிய என்கிறபடியே க்ருஷ்ணனுடைய வரவைக் கடாக்ஷத்து, அவன் எப்போது வந்து மேல் விழும் என்று அறியாத படியாலே, தங்களை யெப்போதும் அலங்கரித்தபடியே யிருப்பார்களென்றுமாம்' (உரை 29).
    'ஒரு நாளையிற் கலவியிலாநந்த மிவர்களுக்கு அநுவர்த்திக்கையாலே விச்லேஷவ்யஸ நம் தோற்றாமையால் தங்களை யெப்போதும் அலங்கரித்திருப்பார்களென்று---கருத்து' (உரை 29)
    'பஞ்ச லக்ஷம் குடியிற் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதாரொருவருமில்லை' (உரை 31)
    'திருவாய்ப் பாடியில் க்ருஷ்ணன் பிறந்ததுக்குப் பின்பு ஸ்ரீ நந்தகோபருக்கு மருமகளல் லாதாருண்டோ, நமக்கென் என்று பேசாதே கிடக்க' (உரை 169).
    '(குமரன்) வெண்ணெய் களவு கண்டான், பெண்களைக் களவு கண்டான், ஊரை மூலை யடியாக்கினான்' (உரை 33),
    'பெண்களைப் படுகுலை யடிக்கும் க்ருஷ்ணனைப் போலன்றிக்கே, ஏகதார வ்ரதனாயிருக்கை' (உரை 134)
    'உடம்பை க்ருஷ்ணனுக்குக் கொடுத்தால் எங்களுக்குப் பேச்சாகிலும் தரலாகாதோ.  கண்ணுஞ் செவியு மொக்கப் பட்டினி கொள்ள வேணுமோ--- என்றிறே யிவள் பேச்சிருப்பது' (உரை 120),
    'அவன் ஒருக்கா லணைத்து விட்டால் அவை அஞ்சாறு குளிக்குப் பரிமளம் நிற்குமோ.  கட்டுங் காவலுமா யிருக்கிற வாசலிலே புகுரப்போமோ அவனுக் கென்ன; (நாராயணன்) அவனுக்கு எங்களைப் போலவே கதவு திறக்கப் பார்த்திருக்கவேணுமோ, வ்யாப்திக்கு ப்ரயோஜநம், வேண்டின விடத்தே ஸ்புரிக்க வல்லனாகை யன்றோ' (உரை 120, 121)
    'க்ருஷ்ணனை சொல்லிப் பண்டே சங்கித்திருக்கிற இடையர், நமக்கு தைவம் தந்த இச்சேர்த்தியை யழிக்கிறார்களோ என்று பயப்பட்டு, க்ருஷ்ணனுக்கடியான க்ஷராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள்' (உரை 48)
    'பறை கொள்வாள் யாம் இன்று வந்தோம்-- தேவரீரை யநுபவிக்கைக்காக, பந்துக்களால் நெடுங்காலம் நலிவுபட்ட நாங்கள் பந்துக்களுடையவும் ஊராருடையவும் இசைவு பிறந்த வின்று எங்க ளாற்றாமையாலே வந்தோம்' (உரை 210) என்றது காண்க.  திருப்பாவைப் பொருள் அதுவே யென்றார் உரைக்காரர்.  திருவெம்பாவைப் பொருள் அன்ன தன்று.
    கண்ணன் பரமாத்மா, அவன் நினைத்தவிடத்தில் நினைத்த வடிவம் எடுப்பான் என்பதொன்று.  அவன் பரமாத்மாவல்லன், பரமாத்மாவை யுபாசித்து அவ்வற்புத சித்தியைப் பெற்றான் என்பது இன்னொன்று.  அவற்றுள் உண்மையாவ தெது? அதற்கு விடை இங்கு வேண்டாம்.  சிவரகசியம் என்ற பரமேதிகாசத்தில் வீரசித்து என்ற அரசனின் சரிதை யொன்று வருகிறது. அந்நூலின் 2 ஆம் காண்டம், 18 ஆம் சருக்கம், 16 ஆம் பாடலைப் படிப்பார்க்கு அவ்வற்புதத்தின் வரலாறு விளங்கும்.  ஏககாலத்தில் பல மனைவிமாரின் இல்லங்களில் தங்கவைக்கும் அச்சித்தியை அவ்வீரசித்துப்போல் கண்ணனுங் கைவரப் பெற்றான்.  ஆய்க்குலத்தோர் அவ்வற்புத சித்தியை அக்கண்ணனுடையதேயெனக் கொண்டு வியந்தனர்.  அப்பெண்கள் அவனோடு ஆடிக் கூடுதற்கும் அவ்வியப்பே காரணம்.  சில வேடதாரிகளிடம் சில அதிசயங்களைக் கண்டு அவர்களைத் தெய்வமென்றே மயங்கித் தம்மைப் பறிகொடுக்கும் பெண்கள் இன்றும் ஆண்டாண்டுக் காணப்படுவர்.  ஆடவருள்ளும் அப்பெண்களனையாருளர்.  அவ்வாறான தெய்வங்களும் பல.  அவற்றுக்கும் இந்நாடு இடங் கொடுத்திருக்கிறது.  அவற்றின்மேல் மெய்த்தெய்வத்துக்குரிய இலக்கணங்களையேற்றி அவற்றைத் துதிப்போர் அத்துதிமுகத்தால் அவற்றின் காமச்சேட்டைகளுக்குத் தாற்பரியங் கற்பிக்கலாயினர்.  அத்துதிகள் பொருள் சேராப் புகழ்களேயாம்.  'பிரமசூத்திர சிவாத்துவித சைவ பாடியம் (தமிழில் மொழி பெயர்த்தது)' என்ற நூல் 375 ஆம் பக்கத்தில்
    'கன்மகாண்டம் பற்றி ஒருவன் 'பெண்களைக் காமுறறக' என்று கண்டிக்கப்படுவானாக, ஞானகாண்டம் பற்றி ( பதினாறாயிரம் கோப) ஸ்திரீகளைக் காமுற்ற கிருஷ்ண பகவான் கண்டிக்கப்படாது போதல் போலாம்' என்ற குறிப்பொன்று காணப்படுகிறது.  அதுவும் அன்னதேயாம்.  அன்றியும் அந்த ஞான காணப்படுகிறது.  அதுவும் அன்னதேயாம்.  அன்றியும் அந்த ஞான காண்டம் என்பதிலுள்ள ஞானமாவது எது? கண்ணனே பரமாத்மா, ஆகலின் அவனது ஞானமே அந்த ஞானம் என்பதா? கண்ணன் பரமாத்மாவை யுபாசித்து அதனிடம் யாசித்துத் தன்பால் விளங்கப் பெற்ற அப்பரமாத்மாவின் ஞானமே அந்த ஞானம் என்பதா? இவ்விரண்டினுள் முதலாமது வைணவக் கொள்கை.  அதைச் சைவம் அங்கீகரியாது.  இரண்டாமது வைணவக் கொள்கை யன்று.  அதை வைணவம் ஏலாது.  ஆகலின் அக்கன்மகாண்ட ஞானகாண்ட விவகாரமும் அக்கூட்டுக்குச் சிறிதும் உதவா தென்பது தெளியப்படும்.
பெண்ணும் ஆணும்
    விஷ்ணு கண்ணனாக வந்தார்.  அக்கண்ணனை ஆழ்வார்களில் ஆடவர்களும் பக்தி செய்திருக்கின்ற்னர். நாச்சியாரும் பக்தி செய்திருக்கின்றனர்.  ஆயினும் நாச்சியார் செய்த பக்தியே மிகச் சிறந்த தென்றார் உரைகாரர்.  பெண்கள் ஆடவரைக் கண்டாலே நேசிக்கும் சுபாவமுடையவர்கள் என அதற்கொரு காரணமும் அவர் சொன்னார்.
    'அவர்களிலும் இவள் விலக்ஷணை---- புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதிலுங் காட்டில் ஸ்திரீ புருஷனைக்கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலெ, ஆழ்வார்களிற் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரமபக்தி யுடையளான ஆண்டாள்' ( உரை 13,14), என்றது காண்க.  ஆடவன் ஆடவனையும் அரிவை அரிவையையும் அதிகம் நேசிக்கமாட்டார்; ஆடவன் அரிவையைக் கண்டால் எவ்வளவு நேசிப்பானோ? ஆனால் அவள் அவனைக் கண்டால் அவள் நேசம் அவனை நோக்கிப் பள்ளமடையாய்ப் பாயும் என்றவிடத்து அந்நேசமாவது காதலே போலும்.  அதாயின் அந்நேசம் பெண்ணுலகிற்கு மதிப்பைத் தருவதாமா? பெண்களின் புத்தி அவ்வளவு கட்டுக் கடங்காதா? அகத்துறையில் பொழிலுக்கு வந்த தலாவியிடம் தலைவனுக்கன்றோ காதல் செல்கிறது! அதன்றோ காட்சி ஐயம் முதலியவாகப் புனைந்துரைக்கப் படுகிறது? பெண்களின் காதல் அடங்கியே யிருக்கும்.  அதுவே பெண்ணியல்.  நாச்சியா ரன்பை உரைகாரர் விளக்கிய முறை பெண்களைக் கெளரவிப்பதா யில்லை.  மாணிக்கவாசகர் ஆடவர்.  அவர் செய்த பக்தி குறைவுடையதா? உரைக்காரர் அப்படி பேசியவ ராகிறார்.
இருபாவைகளின் தெய்வம்
    திருவெம்பாவை திருப்பாவைகளுக்குப் பொருள் கொள்வ திப்பாடியென முன் சொல்லப்பட்டது.  ஆயினும் அக்கூட்டு மகாநாட்டார் அவற்றை மாத்திரந் தனித்தெடுத்து அவை பேசுந் தெய்வம் ஒன்றே யென்பர்.  அவற்றை ஒரு தடவையாவது படித்துப்பாராவதவனைத்தான் அங்ஙனம் பொருள் கூறி ஏமாற்றலாம்.  திருப்பாவை கண்ணனையே பரமாத்மா வென்கிறது.  அது வெட்ட வெளி.  அதில் சிவனைப் பற்றிய பிரஸ்தாபமே கிடையாது.  ஆனால் திருவெம்பாவையைத் தனிவைத்துப் பொருள் காண லுற்றாலும் அதில்
    'மாலறியா நான்முகனுங் காணா மலை'
    'செங்கணவன்பால் திசை முகன்பால்----
    எங்கு மிலாததோ ரின்பநம் பாலதா'
    'போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்' என்ற அடிகள் வருகின்றன.  சிவனே பரமாத்மா.  அவனைப் பிரம விஷ்ணுவாதியரும் அறிய மாட்டார்.  அவனே அத்தேவரும் அனுபவித்தறியாத இன்பத்தை நமக்குத் தருவான என்பன அவற்றின் பொருள்.  அப்பாவை அவனைப் பரமாத்மா எனச் சொன்னமட்டில் நிற்கவில்லை; பிரமவிஷ்ணு வாதியரை அவனுக்கு மிகக் கீழ்ப்பட்டவரெனவுஞ் சொல்லியுள்ளது.  அப்பொருளை அறிந்தும் அறியாதவர்போ லிருந்துகொண்டு இருபாவைகளின் தெய்வம் ஒன்றெயென இல்லாமை பேசுவது பொருள் கூறுவார்க்கு நியாயமா? திருவெம்பாவையும் பதிவிரதை.  திருப்பாவையும் பதிவிரதை.  ஆயினும் அவை சக்களத்திகளல்ல.  அவற்றின் பதிகள் வேறுவே றாவர்.  அப்பதிகளை ஒன்றென்பது அப்பதிவிரதைகளைப் பழிப்பதாகும்.
சாதி நிந்தை
    ஆய்ச்சாதி யென்ப தொன்று.  அச்சாதி வடநாட்டிலுள்ளது.  இடைச்சாதி, கோபசாதி யென்பதும் அதுவே.  கண்ணன் அச்சாதிப் பெண்களைத் தான் முன் சொன்னபடி படுகுலை யடித்தான்; அப்பெண்கள் தம் உடைகளை யவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு நிர்வாணிகளாய் நீர் நிலையிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கையில் அவ்வுடைகளை யெடுத்து மரக்கிளையில் தொங்க விட்டு அவர்களை நாணித் தலைகவிழச் செய்தான்.  அவ்வுண்மையை நாச்சியாரே
    'கோழிய ழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்- ஆழியுஞ் செல்வனெழுத்தானரவணை மேல்பள்ளி கொண்டாய்--ஏழைமை யாற்றவும் பட்டோ மினியென்றும் பொய்கைக்கு வாரோம்- தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணிந்தரு ளாயே'
என்று தொடங்கிப் பத்துப் பாடல்களால் தெரிவித்தார்.  அப்படியெல்லாம் அவன் செய்யக் காரண மென்ன? அச்சாதி மக்களத்தனை பேரும் அறிவு சிறிதுமில்லதாரென்பதே அவ்வினாவுக்கு நாச்சியாரும் உரைகாரருந் தந்த விடையெனத் தெரிகிறது.
    'அறி வொன்று மில்லாத ஆய்க்குலத்து' (திருப் 28),
    'சற்றேனும் அறிவில்லாத கோபகுலத்தில்' (உரை 238),
    'கறவைகள் பின்சென்று இத்யாதியாலே-ஜ்ஞான ஹீநதை சொல்லியிருக்கவும், அறிவொன்று மில்லை என்ன ப்ரஸக்தியுண்டோ வென்னும் சங்கையிலே யருளிச் செய்கிறார்.---இஜ்ஜன்மத்திலே ஸம்பாதித்த ஜ்ஞாநமில்லாவிட்டாலும் ஜந்மாந்தரார்ஜித ஜ்ஞாநமுண்டாகலாமே.  அதுவுமில்லை யென்று கருத்து' (உரை 240),
    'இடக்கையும் வலக்கையு மறியாத இடையர் வர்த்திக்கிற வூர்' (உரை 30)
    'இடக்கையும் வலக்கையு மறியாத கந்யகைகள்' (உரை31),
    'க்ருஷ்ணன் தீம்புகண்டு உகக்குமூர்' (உரை 30)
என்றது காண்க.  எந்தச் சாதியையும் இடக்கை வலக்கைதானுத் தெரியாமை யென்ற அளவுக்கு அறிவற்ற சாதியெனப் பழிப்பது உசிதமாகுமா? ஆய்க்குலப் பெண்களையும் அப்படிப் பழித்தார் உரைக்காரர்.  நாயன்மார்களும் பல சாதிகளில் வந்தவரே.  அவர்களில் எவருடைய சாதியையும் அறிவற்ற தெனப் பெரியபுராணஞ் சொல்லவில்லை.  திருநாளைப் போவாரின் சாதிதானும் அங்ஙனம் பழிக்கப்படவில்லை.  நாச்சியார், உரைக்காரர் முதலிய வைணவ சமய முக்கியஸ்தர்களால் அவ்வாய்க்குலம் அப்படி நிந்திக்கப்பட்டது.  அம்மட்டோ?
    'இவளும் --- தன்னுடைய திருவுள்ளம் திருவாய்ப் பாடியிலே குடிபோய் பாவநாப்ர கர்ஷத்தாலே அநுகாரம் முற்றி, அவைதானேயாய், இடைநடையும் இடைப்பேச்சும் முடை நாற்றமு மாய்விட்டது' (உரை 17) என்றதும் அந்நிந்தையிற் சேரும், அக்குலத்தவர் அந்நாளில் அத்துணை யறிவின்றி யிருந்தனரெனக் கொண்டாலும், பிற்காலத்தில் அக்குலத்தில் அறிவுடைப் பெருமக்கள் பலர் தோன்றலாம்.  ஆயினு மென்? அக்குலத்துக்கு அந்தப் பிரமாண வாக்கியங்களிற் கண்ட குறை மறையுமா? அப்பெண்கள் பலபடியாலும் அசுசிப்படுத்தப்பட்டார்கள்.  மானபங்கஞ் செய்யப்பட்டார்கள்.  அவற்றிற்கு எத்தனை தாற்பரியமுங் கூறுவார் கூறலாம்.  அதனால் இக்காலை அக்குலத்தவருக்கு மனவமைதி யுண்டாகுமா? ஆகுமெனின், சரி.  தமிழ் நாட்டிலும் அப்பெயருள்ள சாதி இருந்து வருகிறது.  அது அந்தப் பிரமாண வாக்கியங்களையும், அக்கண்ணனின் செயலையும் சிந்திக்கு முறையிற் சிந்தித்துத் தன்னை யவற்றி லகப்படுத்தாமலிருப்பது நலமன்றோ? ஆனாயநாயனாரும், திருமூலநாயனாரும் தமிழக இடைக்குலத்தினர்.  பெரிய புராணத்தில் அக்குலம் நன்கு மதிக்கப்பட்டது.  திருவெம்பாவையில் சாதிநிந்தையில்லை.  அதனொடு திருப்பாவை ஒத்துச் செல்லுவதெப்படி?
மழை வேண்டல்
    திருப்பாவையில் பெண்கள் மழை வேண்டுகின்றனர்.  மேகம் திருமால் போற் கறுத்து, அவன் சக்கரம் போல் மின்னிப் பாஞ்சசன்னியம் போல் இடித்துச் சார்ங்கம் என்னும் வில் செலுத்தும் அம்புபோல் மழை பெய்ய வேண்டும் என்பது அவர்களினாசை.  அப்பாவை 4-ஆம் பாடல் காண்க.  அப்படிப் பெய்யும் மழை எவ்வளவு பயங்கரமாயிருக்கும்? பெண்கள் நீராடப் போகும்போது அப்பேய் மழை ஆகுமா? எந்தக் காலத்திலுமே அது ஆகுமெனச் சொல்லமுடியாது.  மேலும் மார்கழி கர்ப்போட்ட மாசம்.  அம்மாசத்தில் மழை அப்படிப் பெய்தால் மழைக் கர்ப்பக் கலங்கிவிடவுங் கூடும்.  அதனால் அடுத்த ஆண்டு மழை குறைந்துவிடும்.  உலகம் அப்படிப் பேசும்.  ஆகலின் பெருமழையை அப்பெண்கள் விரும்பியது நல்லதன்று.  பொருத்தமு மன்று.  திருவெம்பாவையிலுங் கன்னிகள் மழை வேண்டுகின்றனர்.  மேகம் உமாதேவி போற் கறுத்து, அவளிடைபோல் மின்னித், திருவடிச் சிலம்புபோல் சப்தித்துப், புருவம் போல் வில்லிட்டு, இன்னருளே யென்னுமாறு மழை பெய்க என்றாரவர்.  அப்பாவை 16 ஆம் பாடல் காண்க.  அம்மழை கர்ப்போட்டத்தைச் சிதையாது, கன்னிகளின் நீராடலைத் தடாது, அடுத்த ஆண்டு மழையையுங் கெடாது.  அப்பாவைகள் கூடிச் செல்லா என்பதை அதனாலுங் காண்க.
சயனம்
    படுக்கையறை நிகழ்ச்சியும் சிலபல காவியங்களில் வரும்.  ஆனால் அவ்வர்ணனையை ஆண்புலவர்தான் செய்வர்.  பெண் புலவர்க்கு அத்திறமை யிராதென்பதில்லை.  ஆனால் அவரியல்பு அவ்வர்ணனைப் பாடல்களையியற்ற இடங்கொடாது.  ஆயினும் நாச்சியார்.
    'குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்---மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்--கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்--- வைத்துக் கிடந்த மலர் மார்பா!' (திருப் 19) என்று பாடினார்.  அதவருக்குப் பொருந்துமா?
 
முடிப்புரை
    திருவெம்பாவைக்கும் திருப்பாவைக்கும் இப்படி இன்னும் பல வேறுபாடுகளுள.  இங்கு இவ்வளவு போதும்.  அப்பாவைகள் தம்மிற் சேர்ந்திருக்க முடியாவென்பதை அவற்றாலேயே தெரிந்து கொள்ளலாம்.  ஆயினும் அக்கூட்டைத் தொடங்கி நடத்துகிறார் ஸ்ரீசங்கராசாரியார். அக்கூட்டு ளகப்பட்ட வைணவரு முளர்.  ஆனால் அவர் மிகச்சிலரே.  அவ்வாசாரியார் தம் மதத்தரல்ல ரென்பதை அவரது வேடத்தில் அச்சிலரும் அறிந்து கொள்வர்.  ஆகலின் வைணவ சமய போதகர் சிறிதே எடுத்துக் காட்டினாலும் அச்சிலர் அக்கூட்டிலிருந்து விலகிக் கொள்ள முடியும்.  பொதுவாக வைணவர் தம் கோவில்களில் நடக்கும் எந்தக் கிரியைக்கும் அவ்வாசாரியரிடம் யோசனை கேளார்.  அவ்வாசாரியார் அக்கோயில்களிற் புகலாம், தெய்வத்தை வணங்கலாம், பட்டாசாரியார் தரும் துளசி தீர்த்த முதலியவற்றை ஏற்றுக்கொண்டு திரும்பலாம்.  அவ்வளவு தான்.  ஆனால் அவர் விபூதி ருத்ராட்சதாரணி.  அவருபாசனா மூர்த்தியாகிய பிரமப் பிரதிபிம்பத்துக்கு ஈசுரன், சந்திர மெளளீசுரன் எனச் சிவநாமங்கள் வைக்கப்பட்டுள்ளன.  அதனால் அவர் சைவ சமய ஆசாரியாரென்ற மயக்கம் சைவசமூகத்தில் படித்தவ ருள் படப் பலருக் குண்டாகிறது.  அவர் சைவக் கோவில்களிற் கர்ப்பக் கிருகங்களிலும் பிரவேசித்து மூர்த்திகளைத் தீண்டிப் பூசித்தலுஞ் செய்யலாயினர்.  அவ்வுரிமை தமக்கில்லை யென்பதை அவரும் பிரஸ்தாபியார்.  சைவரும் உணரார்.  அது சைவாலயங்களும் சைவ சமூகமும் மாயாவாத சமய ஆதிக்கத்திற் படிப் படியாய்ப் போய்ப் புகுதற்கு ஏதுவாகிறது.  பாவைக்கூட்டு மகாநாடும் ஒரு பலமான ஏதுத்தான்.  அதற்கான பிரசார முதலியன செய்யுங் கூலிப்பட்டாளமும் சைவ சமூகத்திலேயே பெருகலாயிற்று.
    எந்தச் சமயமும் அதன் சாத்திரவல்லுநர், ஆதிக்கக்காரர், பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியாற்றான் ஆக்கம் பெறும்.  ஆனால் சைவசாத்திர வல்லுநரெனப் படுவோருள் மிகப்பெரும் பகுதியினர் தமிழ் வெறியினராய் வடமொழித் துவேஷிகளாய்த் தம் சமயப் பிரமாண சாத்திர வரம்பு, குருசந்தான விசுவாசம், ஏனைய ஆசார அனுட்டானங்கள் எல்லாவற்றையுந் தத்தம் பண்ணிவிட்டு வரம்பழிந்து பேசுகின்றனர், எழுதுகின்றனர்.  ஆதிக்கக்காரரோ தமக்குள்ள ஆதிக்கத்தை மேலுமேலும் பெருக்கி அவ்வளவில் மகிழவே விரும்புகின்றனர்.
    'சமரச பாணியில் பேசுவோரைக் கண்டித்து கிருபளானி சொன்னதாவது---தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சொந்த நிலைமையை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  பட்டம், பதவிக்கு ஆசை தாண்டவமாடுகிறது---சுதந்திரம் கிடைத்த பின்னர் ஜனங்களுக்கு குறிக்கோள் காட்டப்படவில்லை' (தினமணி 2-12-1962)
என்றது காண்க.  தாம் சைவ சமயத்தவரென்ற பிரக்ஞை தானும் அவருக் கில்லாது போயிற்று.  பொது மக்களோ அன்றாட சீவனத்துக்கு வழிதேடுவதையே தம் கருத்திற் கொள்பவராகிறார்.  அவ்வளவு பேரையும் வசப்படுத்திக் கொண்டன ஸினிமாக்கள்.  அவர்கள் ஓய்வு நேரங்களில் ஆங்காங்கே கூடிப்பேசுவன பெரும்பாலும் ஸினிமாப்பேச்சுக்களே.  அவற்றையெல்லாம் பார்க்கும்போது சைவ சமயத்துக்கு அவர்கள் எவ்வளவு தூரத்திலிருக்கிறார்களென்பது தெரியவரும்.  சைவசமூகம் சைவ சமயத்தைத் தலைமுழுகிவிட்டதென்றே சொல்லிவிடலாம்.
    'தோப்புப் பெருத்து விளைநிலம் பாழ்த்தது
    தொண்டரிறு - மாப்புப் பெருத்து மடவீதி
    பாழ்த்தது மாதர்களின் - மூப்புப் பெருத்து-'
என்ற அடிகளை யுடையது ஒரு பழம் பாட்டு.  அது போல் வேண்டாத கலைகளெல்லாம் பெருத்தன; வேண்டுவதாகிய சைவ கலாஞானம் பாழ்த்தது.  அந்நிலையில் சைவக் கோவில்களும் தாபனங்களும் அயலார்கைப்படுவதில் அதிசயமில்லை.  ஸ்ரீ சங்கராச்சாரியார் முன்வந்தார்; அக்கோவில்களைச் சீர்ப்படுத்தப் போவதாகச் சொல்லி அக்கூட்டு மகாநாட்டை நடத்தலானார்.  அது மாயாவாத சமய ஆக்கத்துக்கும், சைவ சமய மறைவுக்குமே இடஞ் செய்யும்.  எந்தச் சமயமும் வேற்றுச் சமயத்தாரால் வளராதென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
     எல்லாக் கோவில்களும் பொதுவெனச் சொல்லப்படும்.  அம்முறையில் சைவக் கோயில்களும் பொதுவாகுக.  ஆனால் அத்து (வரம்பு) இல்லாமல் எந்தப் பொதுவுமிருக்க முடியாது.  யார்க்கும் எல்லாப் படியாலும் எந்தப் பொதுவு மிருத்தலில்லை.  சூரியன், சந்திரன், வாயு முதலிய பொதுக்களுங்கூட சிற்சில வேளைகளிற் சிற்சிலருக்கு மறுக்கப்படுவதுண்டு.  சைவக்கோவில்கள் பொதுவாயினும் அப்பொதுவுக்கும் அத்து உண்டு.  அந்த அத்துத்தான் சிவாகமங்கள்.  பாரததேசம் பாரதமக்களுக்குப் பொதுத்தான்.  ஆனால் அதற்கென அரசியற் சட்டமுண்டு.  அதற்கடங்கியே அப்பொதுமை அம்மக்களால் அனுபவிக்கப்படும்.  கிட்டத்தட்ட அவ்வரசியற் சட்டப் புத்தகம் போன்றன அச்சிவாகமங்கள்.  அவற்றில் விதித்தப்படிதான் அக்கோவில்களில் பூசை, விழா, வழிபாடு, நிர்வாகம் முதலிய அனைத்தும் நடைபெற வேண்டும், நடைபெற்றும் வருகின்றன.   சைவக் கோவில்களில் சிவாகம விதியென ஒன்றுமில்லை; அங்குப் பூசை முதலிய வெல்லாம் அவ்வக்காலத்து ஆதிக்கக்காரர்களால் தம் ஆதிக்கவலிமை கொண்டு அமைக்கப்பட்டனவே; அவ்வமைப்புக்களே சம்பிரதாயங்களும் மாமூல்களுமாகி விதிகள் போலாயின; அவற்றை மாற்றவும், புதுமைகளைப் புகுத்தவும் பிற்காலத்து ஆதிக்கவான்களுக்கும் உரிமையுண்டு என்பனவெல்லாம் அத்து மீறிய பேச்சுக்களே.  அவ்வாகம ஆட்சியிலிருந்து அக்கோவில்களைப் பறிமுதல் செய்வதற்காகவே அப்பேச்சுக்கள் நடமாடுகின்றன.  சைவ சமயத்துக்கும் சைவ சமூகத்துக்கும் அச்செயலை விடப் பெருங்கேடு வேறில்லை.
    'லோஹியா அபராதம் செஷன்ஸில் ஊர்ஜிதம்.  சர்க்கியூட் ஹவுஸில் அத்துமீறி புகுந்த வழக்கில் தீர்ப்பு.  கான்பூர், பிப், 8-சர்கியூட் ஹவுஸ் மக்களது வரிப் பணத்திலிருந்து கட்டப்பட்ட பொதுச் சொத்தேயானாலும், அத்தகைய சொத்து சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்டுள்ள விதி முறைகளை செயல் என்றும், டாக்டர் லோஹியாவும், இதரர்களும் அத்துமீறி உட்புகுந்தவர்களே யாவர் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்-' (தினமணி 10-2-1962)
என்றது ஒரு செய்தி.  நேர்மையுடையார் அதைக் கவனிக்கவே செய்வர்.  சைவக் கோயில்களில் சிவாகம அத்தை இக்காலைச் சைவசமூகம் அறியாமற் கிடக்கலாம்.  அதனால் அங்கே அசைவ ஆதிக்கம் புகவுங் கூடும்.  ஆயினும் அதநீதி.  அநீதி நிலைப்பதில்லை.  அக்கோவில்களில் அத்துமீறிய செயல்களும் சில நடந்து வரலாம்.  அவற்றைக் கண்டு நீக்குவதே நியாயமான நிர்வாகம்.  அதை விட்டு, அத்துமீறி நடந்துவருஞ் செயலொன்றை எடுத்துக்காட்டி, அதுபோல் இன்னொரு தகாத செயலையும் புகுத்தினா லென்னவெனக் கேட்பது நல்லியல்பாகாது.  அப்படிக் கேட்பதற் கொப்பே ஒரு சமய நிலயத்தில் வேற்றுச் சமயவுபதேசம் நடைபெறச் செய்வது.  அக்கூட்டு மகாநாடும் அப்படித்தான்.
    தமிழ்நாட்டில் சைவாதீனங்கள் பல.  அவ்வாதீன கர்த்தரனைவரும் என் வணக்கத்திற் குரியவர்.  நான் அவர்களை வணங்குகிறேன்.  அவர்கள்பாற் குறைகாணும் உரிமை எனக்கில்லை.  ஆயினும் சைவ சமூகத்தின் இக்கால நிலையை எண்ணும்போது அக்கர்த்தர்களின் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கு முறையில் சில சொல்ல வேண்டியது அவசியமாகிறது.  அவர்கள் என்னை மன்னித்தருள்க.
    சைவாதீன கர்த்தரொருவர் காவியுடை யணிந்து பதவியிலிருந்து கொண்டே கரிச்சட்டைக்காரரின் கொள்கையைத் தழுவலானார்.
    'ஒருதலை முறைக்கு மேலாக தமிழகத்தில் துவேஷத்தை பரப்புவதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஒரு கன்னடிகர் உழைத்து வருவதை நாடறியும்--' (தினமணி 1-5-1962) என்பது ஆசிரியப் பகுதி.  அக்கன்னடிகர் தெய்வநிந்தையே வாழ்வின் பயனாகக் கொண்டவர்.  தம் கன்னடப் பிரதேசத்தில் யார்க்கேனும் அவர் அறிமுகமானவரா? ஆனால் அவர் தமிழகத்திற் சஞ்சரித்துத் தமிழருள் எத்தனையோ பேரைத் தமிழரல்லாத யாராகவோ ஆக்கி வருகிறார்.  அவரைத் தமக்குத் தலையாகவோ துணையாகவோ கொண்டார் அம்மடபதி.  அதனால் அவர் பிரசங்கிப்பதையே இவரும் பிரசங்கித்து வருகிறார்.  இவர் பேச்சால் சைவ சமயமும் சைவ சமூகமும் உருப்படுமா?
    இன்னும் சில சைவாதீனங்கள் திருப்பாவையை ஆயிரமாயிரமாக அச்சிட்டு வழங்கி வருகின்றன.  வைணவ நூல்களை அச்சிட்டு வழங்க வைணவ மடங்க ளில்லையா? வைணவப் பிரபுக்க ளிலரா? வைணவக் கோவில்களிலவா?
    மற்றொரு சைவாதீனம் அறப்பணிக்கென ஏறக்குறைய எழுபது லட்ச ரூபா ஒதுக்கியுள்ளது. அதில் சைவ சித்தாந்தத்தைப் பரப்புதற்கென ஒதுக்கப்பட்டது 44 இல் ஒரு பங்கு எனத்தெரிகிறது.  லோக சபை சபாநாயகர் கூறியது இங்கே கவனிக்கத் தக்கது.
    'ஆலய நிதிகளை இந்துமத வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்---ஸ்ரீஅனந்த சயனம் வலியுறுத்தல்.  கல்வி வளர்ச்சிக்கு சர்க்கார் நிதியுதவி இருக்கிறதே என்றார்.---திருப்பதி போன்ற தேவஸ்தானத்தின் திரண்ட செல்வத்தை சர்வ கலாசாலைகள், கல்லூரிகளுக்குச் செலவிடுவதைக் காட்டிலும், இந்துமத வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் லோக சபை சபாநாயகர்---கூறினார். ---நாடெங்கிலும் புறக்கணிக்கப்பட்டு க்ஷணிக்கும் நிலையில் உள்ள கோயில்களை புதுப்பிக்க வேண்டும் என்றார்.  மேலும் கல்விக்கென நிதியை சர்க்காரிடமிருந்து பெறலாமே ஒழிய இந்து அறநிலயங்களிலிருந்து பெறக்கூடாது என்றும் கூறினார்.---சமீபத்தில் டில்லியில் ஆரம்பிக்கப்பட்ட வெங்கடேஸ்வரா கல்லூரி பற்றி குறிப்பிடும் பொழுது இப்பணத்தை ஒரு கோயிலுக்கு செலவழிப்பதை தான் விரும்புவதாக தெரிவித்தார்' (தினமணி 1-1-1962) என்பதது.
    சைவாலயங்களின் சொத்துக்கள் போல் சைவதீனங்களின் சொத்துக்களும் சைவசமய வளர்ச்சி யொன்றற்கே யுரியன.  அந்தப் பிரதானத்துக்கு அனுகூலமல்லாத, பிரதிகூலமாக்கூடிய வழியில் அச்செல்வங்க செலவகலாமா?
    அக்குருமார்களுக்கு இத்தமிழ் நாட்டில் லட்சக்கணக்கில் சீட ரிருந்து வருகின்றனர்.  அவரை அவர்கள் சிறிதேனுங் கருதுகின்றார்களா? பொருட் படுத்துகின்றார்களா? குருசிஷ்ய முறையில் ஆவன செய்து ஆதரிக்கின்றார்களா? குருசிஷ்ய பாரம்பரியத் தொடர்பைப் பாதுகாத்து வருகின்றார்களா? அவர் அவர்களை விட்டுச் சன்னஞ் சன்னமாக விலகிப் போகவில்லையா? குருமார்கள் கைவிட்ட அவரிடம் சைவசமய வாழ்க்கை குலைந்திடாதா? அப்படிச் சீடரை யெல்லாம் இழந்து விட்ட பிறகு அவர்கள் குருமார்களாதல் யாங்ஙனம்? அவ்வாதீனங்கள் எதிர்கால நிலைதான் யாதாவது? அவற்றின் தாபகர்களாகிய சைவஞான பானுக்களின் உள்ளந்தான் மகிழுமா?
    'சர்க்கார் ஜமீந்தார் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து ஜமீந்தார்களை ஒழித்து சமஸ்தானங்களையும் கைப்பற்றினார்கள்.  இப்போது மடாதிபதிகள் ஜமீன்தார் போல இருந்து வருகிறார்கள்.  இந்த மடாதிபதிகள் தேவையா? இல்லை.  ஜமீன்தார் ஒழிப்புபோல மடாதிபதி ஒழிப்பும் வேண்டும்.  இது பற்றி முதன்மந்திரி காமராஜரிடம் கூறியிருக்கிறேன்.  திரு காமராஜரும் பொறுத்து ஆவன செய்வதாக கூறியுள்ளார்' (தினமலர் 9-8-1962) என ஒருவர் கூறிய செய்தியை அக்குருமார்கள் பார்த்திருக்கலாம்.  அவ்வொழிப்பு நடைபெறுமோ? பெறாதோ? அது வேறு விஷயம்.  ஆயினும் அப்படிப் பேசினாரவர்.  அத்துணிவுக்கு காரண மென்ன? அவர் சைவப்பிரசாரமே செய்பவரா யிருந்திடுக.  ஆனால் அம்மடங்களைத் தம் குருபரம்பரையென அவர் கொள்ளார்.  அவர் போல இன்னும் அநேக ருளர்.  அம்மடங்கள் சைவத்தை மாத்திரமா வளர்த்தன? தமிழையும் புலவர் பெருமக்கள் அதிசயிக்கும்படி வளப்படுத்தின.  அந்நன்றிதானும் அவருள்ளத்திலிருந்து விடைபெற்று விட்டது.  எல்லாவற்றிற்கு மேலாக அத்துணிவுப் பேச்சைக் கேட்டு நெஞ்சு கலங்குஞ் சீடர் அம்மடங்களுக்கு இலரென அவர் எண்ணியிருக்கலாம்.  அவ்வளவுக்கு அம்மடங்கள் தம் சீடவர்க்கத்தை உதாசீனம் பண்ணித் தனித்தன.  அதனாலென்றோ அச்செய்தியிற் பேசியவர் மனம் போனபடி அம்மடங்களைக் குறைபேசலாயினர்.  சனங்களைப் பொருட்படுத்தாத சர்க்கார் என்ன ஆகும்?  அது போல் சீடரைக் கைவிட்ட மடங்களும் ஆகுமன்றோ? மாயாவாத வைணவ முதலிய அந்நிய சமய மடங்களில் அக்குருமார்களின் வாத்ஸல்யமும் சீடவர்க்கத்தின் பக்தி விசுவாசமும் சொல்லுந் தரத்தன வல்ல.  அவை எடுத்துக்காட்டாயிருக்குந் தகையன.  அம்மடங்களின் ஆக்கத்திற்கு அங்ஙனமாய குருசிஷ்யத் தொடர்பு ஒரு முக்கிய காரணமாகும்.
    சைவ சமூகம் சித்தாந்த சைவத்தை அயர்த்துக் கொண்டு வருகிறது.  தலைவனில்லாப் படைபோலும், மேய்ப்பனில்லா மந்தைபோலும், அரசனில்லாச் சனம் போலும் அது ஆசான்மாரின் பிடிப்பின்றிக் கட்டவிழ்ந்து தட்டழிந்து சிதறுண்டு சமயத் துறையில் தவிக்கின்றது.  அதற்கு யாரெல்லாமோ கடவுள், குரு, எவையெல்லாமோ நூல்கள், கொள்கைகள், ஆசாரங்கள், அனுட்டானங்கள்.  அம்மட்டோ? சைவ சமயத்துக்கே பகைவரா யிருக்குஞ் சைவர் தான் சிலரா? இப்போதுள்ள நிலை யிது.  இது வேற்றுச் சமயங்களின் விளம்பரத்துக்கு ஏற்புடையதாயிற்று.  அந்நிய சமய குருமார் இந்நாடெங்கும் யாத்திரை செய்கின்றனர்.  வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தம் சமயங்களைப் பிரசாரஞ் செய்து வருகின்றனர்.  அவருள் ஸ்ரீ சங்கராசாரியாரும் ஒருவர்.  ஆண்டு தோறும் அக்கூட்டு மகாநாட்டுக்கு அவர் ஆஞ்ஞை பிறப்பித்து வருகிறார்.  சைவரிடமும் அவ்வாஞ்ஞை பலிதமாகி வருகிறது.  அங்ஙனம் தம் சீடரையெல்லாம் அன்னிய சமய குருபாதங்களில் வீழ்த்தி விட்டுச் சைவகுருமார்கள் தமிழ் நாட்டுக்கு வெளியே யாத்திரை போவதும் வருவதுமாயிருக்கிறார்கள்.  அதனை அவர்கள் ஒன்றிரண்டளவில் நிறுத்திக் கொள்ளலாம்.  அவர்களுக்குச் சீடத்துவம் பூண்ட சைவ சமூகம் தமிழ் நாட்டிற்றா னுண்டு.  ஆகலின் அவர்கள் தமக்குரிய ஆசாரிய வைபவத்தோடு இங்கேயே பலமுறை யாத்திரை செய்தருள்க.  ஆங்காங்குள்ள இலட்சக் கணக்கான சீடரைச் சைவாசார அனுட்டான பரராக்கியருள்க, சைவசமய வரம்பை யுணர்ந்து போற்றி வருமாறு செய்தருள்க.  அப்பரிபாலனம் நிகழுமாயின், முகிலைக் கண்ட மயில் போல், தாயைக் கண்ட சேய் போல், காந்தனைக் கண்ட கற்பரசி போல் அவர்களின் விஜயத்தைக் கண்டு சைவவுலகம் பூரிக்கும்.  ஆனால் அவ்விஜயம் இப்போது பஞ்சமாயிற்று.  அதேனோ?  இனியாயினும் அக்குருசிஷ்ய சம்பந்தத்தில் திருவுள்ளம் வைக்குமாறு அக்குருமார்களின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்து அவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன்.
    இனிச் சைவக்கோயில்கள் தான் எப்படி யிருக்கின்றன? பெரும் பாலும் பெரிய கோவில்களைப் பார்த்துச் சிறிய கோவில்கள் படிக்கும்.  பெரிய கோவிற் பொறுப்பாளிகள் சிறிய கோவிற் பொறுப்பாளிகளை விடச் சைவ சாத்திர பண்டிதர்களா? அல்லது அவ்விருவகைப் பொறுப்பாளிகளுமே ஒரே படகிற் செல்பவர் தானா? அதைச் சிந்திப்பா ரரியர்.  ஆகலின் அக்கோயில்களெல்லாமே அக்கூட்டு மகாநாட்டுக் கிடமாயின.
    'ஆங்கிலப் பாக்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருப்பாவையும்--- திருவெம்பாவையும் ஒன்றாகக் கபாளீஸ்வரர் தேவஸ்தானத்தார் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.----வரும் மார்கழி மாதத்தில் இந்நூல் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்றும் கூறினார்.  திருவாசகமணி பேசினார்' (தினமணி 5-12-1962) என்றது ஒரு செய்தி.  அத்தேவஸ்தானத்தார் அதனை மறுத்து ஏதும் பேசினதாகத் தெரியவில்லை.  அதில் 'மார்கழி மாதத்தில்' என்ற சொல் வந்துளது.  அது பற்றிய சந்தேகம் ஒன்று.  அம்மாதத்தில் இரண்டு தமிழ்ப் பாவைகளுமே பாராயணம் பண்ணப்படுவது வழக்கம்.  அத்தேவஸ்தானத்தார் அத்தமிழ்ப் பாவைகளை ஒதுக்கிவிட்டு அவற்றிக்குப் பதிலாக அவ்வாங்கிலப் பாவைகளைப் பாராயணஞ் செய்விக்க உத்தேசிக்கின்றனரா? அல்லது அவ்விரு மொழிப் பாவைகளையுமே பாராயணஞ் செய்விக்க உத்தேசிக்கின்றனரா? முன்னதாயின் அத்தமிழ் பாவைகளைவிட அவ்வாங்கிலப் பாவைகள் உயர்வாவன என்பதாகும். பின்னதாயின் அவ்விருமொழிப் பாவைகளும் நிகராவன என்பதாகும். அதனால் அத்தமிழ்ப் பாவைகள் உயர்வு ஒப்பு இல்லாதன என்ற கெளரவம் போம்.  திருவெம்பாவை ஒப்புயர்வற்ற தென்பது சைவக்கொள்கை. திருப்பாவை அப்படிப்பட்டதென்பது வைணவக் கொள்கை.  அவ்விரண்டையுஞ் சேர்த்துப் பேசுவதே அவ்விரு சமயத்தார்க்கும் வேதனை தருகிறது.  இந்நிலையில் அவ்வாங்கிலாப் பாவைகளுக்கும் மார்கழி மாதத்துக்கும் என்னையோ சம்பந்தம்? அக்கபாலீசுரார் தேவஸ்தானத்தார் போல் ஆங்காங்குள்ள சைவக்கோவில்களிலும் தேவஸ்தானத்தாரிருப்பர்.  அவர் எத்தனை பேரோ? அவர்க்கும் பிரமாண நூற் சான்றுகட்கும் தூரம் அதிகம்.  அவரெல்லாம் ஒருவரைப் பார்த்து ஒருவர் தம் கோவிற் கிரியாபாகத்தை நடத்துவதே பெரும்பாலான நடைமுறாஇ.  அங்ஙனமாகலின் கோவில்களிற் புதுமைகள் புகக் கேட்பானேன்? அவரும் அக்கூட்டு மகாநாட்டுக்கு ஏன் உறுதுணைபோகார்?
    ஆனால் எங்கும் போல் திருநெல்வேலியிலும் ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் திருவெம்பாவை திருப்பாவைக் கூட்டு மகாநாடொன்று நடக்கவிருந்தது.  அந்நகரத்துச் சில சைவ நன்மக்கள் அதை மறுத்து நெல்லை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தார்கள்.  தாக்கலான நாள் 5-1-1961.  ஆக்கோவிலில் அக்கூட்டு மகாநாட்டை அக்கோவிலார் இனி நடத்துவதில்லை என்ற முடிவுடன் அவர்களும் வழக்குத் தாக்கல் செய்தவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மேல் இருகட்சிக்காரர்களும் கோர்ட்டில் சமர்ப்பித்த (Joint Memo) கூட்டு வேண்டுகோளின்படி கோர்ட்டாரவர்கள்(Joint Memo filed, not pressed, suit dismissed without cost)  என்று தீர்ப்பளித்தாரெனக் கேள்வியுண்டு.  அதனால் 1962 ஆம் வருஷத்து அக்கூட்டு மகாநாடு அக்கோவிலில் நடை பெறவில்லை.  மற்ற நகரங்களிலுள்ள சைவப் பெருமக்களும் அங்ஙனம் உயிர்தெழ மாட்டா ரென்பதில்லை.  சைவக்கோவில்களில் திருவெம்பாவை மகாநாட்டையும், வைணவக் கோவில்களில் திருப்பாவை மகாநாட்டையும் பிரித்து வைத்து நடத்துவதே அவ்விரு சமயங்களுக்கும் உகந்ததாகும்.  வைணவ சமயத்தவரும் அப்பிரிவையே ஆதரித்துளார்.  மாணிக்கவாசகர் நாச்சியார் ஆகியவரின் உருவங்களையோ படங்களையோ சேரவைத்துப் போற்றுவதைச் சைவரும் வைணவரும் அருவருக்கின்றனர்.  அவ்வைணவர் பலவூர்கைளிற் பல கூட்டங்கள் கூட்டி அப்பிரிவையே வேண்டித் தீர்மானங்களைச் செய்து வெளியிட்டிருக்கின்றனர்.  ஆகலின் அக்கூட்டு மகாநாடுகள் அவ்விரு சமயங்களின் மாந்தராலும் ஒதுக்கப் படவே வேண்டும்.  அம்மகா நாடுகள் சைவக்கோவில்களிலும் சைவசமூகத்திலும் மாயாவாத ஆதிக்கத்தையே கொண்டுவந்து விடும்.  அவ்விரு பாவைகளும் எதிர்த் திசை நோக்கிச் செல்வன.  அவை கூட்டுச் சேர மாட்டா.  அக்கூட்டால் நலனில்லை.  தீங்கே விளையும்.  அவ்வுண்மை மேலே நன்கு விளக்கப்பட்டது.  சைவ சமயப் பெருமக்கள் இனியும் பராமுகமா யிருக்கலாமா?
    'கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட், குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரிதான் வாய்மடுப்பினு மாகணங் கண்டுயில்வ, பேரா பெருமூச் செறிந்து' என்றருளினார்கள் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள்.
    'ஒரு கட்சியின் கொள்கைகளை எவ்வளவு பலமாக வேண்டுமானாலும் தாக்கிப் பேசலாம். அதில் ஒன்றும் தவறில்லை.  பரஸ்பரம் ஒருவருடைய குறையை மற்றொருவர் எடுத்துச் சொல்வது என்பது முற்றிலும் நியாயமே.  ஆனால்---கண்யம் இருக்க வேண்டும்.  தோழமை உணர்ச்சி இருக்க வேண்டும்.' (தினமணி 13-2-1962)
    'பரவலாக காணப்படும் தப்பு அபிப்பிராயத்தை ஒரு நொடியில் அகற்ற முடியாது' (தினமணி 15-5-1962) என்றது அப்பகுதியின் ஆசிரியப் பகுதி.  அதிக அளவில் அதைத் தழுவியே என் ஆராய்ச்சி நிகழ்ந்துளது.  நியாயம் எல்லாந் துறைகளுக்கும் ஒன்று.

------------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்
'சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி)'
முற்றிற்று
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

JAI BHARATH