Home        Archanai in Shiva Temple      Gayathri Manthram        Shivarathiri meaning


 

Hindi, Sanskrit should be learned by All Saivaites!
All Shaiva Books in other languages should be learnt, all other Saiva Pilgrim Spots should be visited by Saivaites!
by Eswaramoorthy Pillai in 1927 AD

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சைவ சமயிகளுக்கு ஓர் நல்லுரை
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை

--------------------------------------------------------------------------------
    தமிழும் வடமொழியும் பரதகண்டத்துப் பழங்கால மொழிகள்.  இவற்றுள் தமிழே தொன்மையுடைத்தென்றும் வடமொழியே தொன்மையுடைத்தென்றும் இக்கால ஆராய்ச்சியாளர் தம்முள் மாறுபடுகின்றனர்.  இவர்களிற் பெரும்பாலார் தம்மைச் சரித்திர ஆராய்ச்சி மிக்குடையாரெனச் சொல்லி மகிழ்வதுண்டு.  தத்துவ ஆராய்ச்சி கைவந்த பெரியார் நாத தத்துவத்தினின்றும் முதன்முதல் தோன்றியது வடமொழியென்றும் அடுத்து அத்தத்து வந்தினின்றும் தோன்றியது தமிழென்றுஞ் சொல்லுவர்.  ஆயினும் இவ்விருதிறத்தினரும் பரதகண்டத்தில் இப்பொழுது காணப்படும் மொழிகளெல்லாவற்றுள்ளுந் தமிழ் வடமொழிகளே மிகப் பழையனவென்பதில் மட்டும் முரணார்.
    வடமொழியானது தமிழ்போன்று தனக்கென நிலையான வரிவடி வெழுத்துக்களை வாய்க்கப் பெற்றிலது.  அதனைத் தமிழர் கிரந்த வெழுத்திலும், வடநாட்டார் நாகரவெழுத்திலும், மலையாளர் மலையாள வெழுத்திலும், தெலுங்கர் தெலுங்கெழுத்திலும், அங்ஙனமே பிறருந் தந்தந் தாய்மொழி யெழுத்திலுந் தாய்மொழியெழுத்துப்போன்ற வெழுத்திலும் எழுதிப் பயிலுகின்றார்கள்.  அன்றியுந் தமிழர் தெலுங்கர் என மொழிப் பெயர் கொண்டு சில பல கூட்டத்தினர் அழைக்கப்படுதல் இல்லை; இவைகளில் வைத்துப் பரதகண்டத்தில் வடமொழியின் பொதுமையும் இன்றியமையாமயுந் துணியப்படும்.  இத்துணிவு சேனாவரையர் 1  முதலிய தமிழ்த் தொல்லாசிரியர் பலரது வசனங்களால் வலியுறுத்தவும் படுகின்றது.  அவர்கள் வடமொழி பதினெண்புலத்துக்கும் உரியதென்று அதன் வியாபகத்தையும், பொதுமையையும், உரிமையையும் உடன்பட்டுள்ளார்கள்.  பதினெண்புலமெனவே தமிழ் நாட்டிற்கும் அதுரித்தாயிற்று.  தமிழ்நாட்டில் அதன் பயிற்சி இடைக்காலத்திற் குறைந்தமைபற்றி அது தமிழரால் வடமொழியெனப்பட்டது.
    தமிழும் ஒரு காலத்தில் பரதகண்ட முழுவதும் பரவியிருந்ததெனச் சிலர் சொல்லுவர்.  அதுண்மையாயிருத்தலுங் கூடும்.  ஆயினும் அது ஒரு காலத்து அங்ஙனமிருந்தது கொண்டு அதனைப் பரதகண்ட முழுவதற்கும் பொதுவென்றும், உரியதென்றுங் கொள்ளுதல் பொருந்தாது, ஏனெனில், தமிழ்த் தொல்லாசிரியர்கள் தமிழ் வழங்கு நாட்டை "வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" [தொல் காப்பியப்பாயிரம்]என முன்னமேயே வரையறுத்து விட்டமையானும், அம்மொழியின் அவாந்தர வியாபகம் விரைவிற் சுருங்கியும் விட்டமையானும் என்க.
    வடமொழி ஒரு காலத்தில் தன் வியாபகத்திற் சுருங்கியிருந்த தெனவும், பிறிதொரு காலத்தில் பெருகியிருந்ததெனவும் எவருஞ் சொல்வதில்லை.  அது என்றுந் தன திருப்பிடத்தை ஒரே படித்தாய் வியாபித்திருப்பது அறிவுடையார்க்கெல்லாம் பலபடியாலும் நன்கு விளங்கும்.  இன்னுந் தமிழ்ப்பெரியார் தமிழைப் பரதகண்டத்துக்குப் பொதுவென்றும், உரியதென்றுஞ் சொற்றிலர்.  சொல்லுவார் சொல்லினும் அதனை ஏனையோர் ஏற்றிலர்.  அன்றியுந் தமிழரென்னுங் கூட்டத்தினர் இன்றுந் தனித்து வேறுளர்.  வடமொழியின் பொதுமையும், உரிமையுந் தமிழாசிரியன்மாரால் சம்மதிக்கவும் பட்டன.  கிரந்தவெழுத்து தமிழ்நாட்டில் மட்டுமே இன்றும் நிலவுகின்றது.  இக்காரணங்களால் தமிழுக்குரிய தமிழர் வடமொழிக்கும் உரியராயினாரென்பது நன்கு பெறப்படும்.  இவர்களது வடமொழியுரிமை ஏனையோர் உரிமையினுஞ் சிறிதுங் குறைபட்டதுமன்று.
    நிற்க, நமது நாட்டிற்கு இவ்விருமொழிகளும் போல் உரியது வைதிக சைவ தருமம்.  இதுவே நமது சனாதன தர்மமும் ஆகும்.  "பழைய வைதிக சைவம் பரக்கவே" 2 என்று இதனை வாய்குளிர வாழ்த்திற்று ஸ்ரீமத் உமாபதி சிவம்.  மலை குழையினுங் குழையும் கடல் கலங்கினும் கலங்கும்.  தீக்குளிரினுங் குளிரும்.  இந்தச் சைவ தருமமோ யாண்டுந் தன்னிலையிற் குலைதலுந் தளர்தலுமின்றி ஒரு பெற்றித்தாயே யிலகுறும்.  3 "வச்சிரவரிசி மானத், தளர்வுறா நிலை பேறெய்து முயர்சிவ தருமம்" என்பது ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளது அமுத வசன மன்றோ?
    இனித்தமிழ் வடமொழிகளும் வைதிக சைவசனாதன தர்மமும் நமது நாட்டுக்கு உரியனவாதல் பற்றி நம்மவர் அம்மூன்றையும் பொன்னேபோற் போற்றக் கடன்பட்டுளார்.  ஆயினும் உரிமைப் பொருளையெல்லாம் போற்றல்வேண்டுமென்பது நியதியன்று.  அப்பொருள்கள் நமது அன்பைப் பெறுதற்குத் தகுதியுடையனவாதலும் வேண்டும்.  அங்ஙனமாயின் அத்தகுதியுடைப் பொருள்கள் பயப்பாடு பற்றித் தந் தகுதியில் மிகுந்துங் குறைந்தும் இருக்கும்.  இம்மிகுதி குறைவுகளை வைத்து மொழிகளாலாம் பயனிலுஞ் சமயதருமத்தாலாம் பயனே மிகவுஞ் சிறப்புடைத்து என்பதை யாவருங் கடைப்பிடிப்பர்.  எல்லா மொழிகளும் மக்களறிவிலுதிக்குங் கருத்துக்களைத் தாங்கி நிற்குஞ் சுமைத்தாங்கிகளே.  சமய தரும்மோ மக்கள் அறிவிலூறிநின்று அவர்கள் விரும்பும் பொருளாய் மாறுவது.  மக்கள் விரும்புவதெல்லாம் இறவாத வின்பமென்பது வெளிப்ப்டை.  ஆகவே இன்பமளிக்கும் பொருளே அவர்களது அன்பிற்குப் பாத்திரமாகும்.  அந்த அன்பின்வழி அவ்வின்பப் பொருள் அவர்களாற் போற்றவும் படும்.  ஆகவே இன்பப்பொருளாகிய சிவதருமம் நமது அன்பிற்குத் தகுதியுடையதாகி நம்மவராற் போற்றப்படுதல் இன்றியமையாததாகும்.  சமயம் ஒன்றே மக்களை விலங்கினின்றும் பிரித்துக் குறைவிலா மங்கல குணத்தனை அவர்களுக்கு நாயகனெனக்காட்டி அவர்கள் கழுத்தில் மங்கலியமாய்த் திகழ்கின்றது.
    தமிழ் வடமொழிகளையும் நம்மவர் பேணக்கடன் பட்டனராயினும், தங்கடனைச் செலுத்துங் காலங்களிலெல்லாம் அம்மொழிகள் உலகப் பொருள்களையும் மற்ற மொழிகளையும் போன்று மாயா காரியங்களே யென்பது அவர்களது உள்ளத்தை விட்டு இமைப்பொழுதும் விலகுதலில்லை.  பகிரண்ட முகடெலாங் கரைபுரண்டு அப்புறமும் அலை ததும்பும் அருண்ஞானவாரியில்  அணுத்துணையேனுந் திளைக்கவொட்டாது ஆன்மாக்களைப்பந்தித்து நிற்பன மாயா காரியங்களல்லவா?  ஆகலின் பெண்டுபிள்ளை, பண்ட பதார்த்தங்களிற்போல மொழிகளிலும் அவர்கள் தமதன்பை மிதமிஞ்சிச் செல்ல விடுவதில்லை.  எனினும் தமிழ் வடமொழிகளின் மாட்டு ஈடுமெடுப்புமற்றுச் செல்வத்துட் செல்வமாகிய சிவஞானச் செல்வம் உளதாதலொன்றேபற்றி அவைகளது அழகிலும் நிலைபேற்றிலும் அவர்கள் கருத்துச் செல்வதாயிற்று.  அம்மொழிகள் அச்செல்வத்தை யடக்கிக் காக்கும் பேழைகளே.  அவைகள் தம்மளவில் எத்துணைச் சிறப்பெய்தினுஞ் சிவகந்த மட்டும் அங்குப் பரந்து நாறப்பெறாவிடின் நம்மவர் ஆராய்ச்சிக்கு ஒரு பொருளாதலேயில்லை.  அந்த நறுமணந் தம்பாற் கமழ்தலின்றேல் அம்மொழிகள் கண்ணில்லா வதனம் போல்வன; காந்தனில்லாள் கவின்போல்வன; பண்ணில்லாப் பாடல் போல்வன; உயிரில்லா உடல்போல்வன.  ஆனால் அவைகள் செய்த தவமேபோலும் அவ்வைசுவரியத்தைத் தொன்றுதொட்டே தம்மகத்துக்கொண்டு நம்மவர் நற்பார்வைக் கிலக்காக நேர்ந்தமை.
    இவ்விருமொழிகளும் வெவ்வே றிலக்கியங்களாகலின் இவைகளிலக்கணங்களும் வெவ்வேறாயின.  தமிழ் ஒன்றில் வனப்பெய்தும்; வடமொழி மற்றொன்றில் அழகுறும்.  ஒன்றின் பொற்பு மற்றொன்றிற்காவதில்லை.  இவ்வேற்றுமைகள் எல்லா மொழிகளுக்கு மியல்பாதலின், இவ்வியற்கைத்தருமங் காரணமாக நம்மவர் தமிழ் வடமொழிகளுள் ஒன்றன்பால் ஆர்வமும், பிறிதொன்றன்பால் அதின்மையுங் கொள்ளார்.  ஒரு பொருளின் சிறப்பியல்வை நன்குணர்ந்தவனே அப்பொருளையும் நன்குணர்ந்தவனாவான்.  அறிவுடைய நம்மவர்க்குத் தமிழின் சிறப்பியல்பும், வடமொழியின் சிறப்பியல்புந் தெரியாமற் போகவில்லை.  வெவ்வேறு சிறப்பியல்பினையுடைய இரண்டு பசுக்கள் பால் தருதல் என்னும் பயப்பாடு பற்றி ஒரு நிகரனவாதல் போன்று அவ்விரு மொழிகளும் அவர்க்கு ஒரு நிகரனதின்னமுதத்தைச் சிற்றுயிர்க்கு ஊட்டுதலென்பது முற்கூறப்பட்டது.  இப்பயப்பாடு பற்றியே மொழிகளை நம்மவர் ஆராய்தல் செய்வர். நெருநலுள னொருவனின் றில்லையென்னும் பெருமையுடைத்திவ்வுலகன்றோ?
    இம்மொழிகள் ஒரு நிகரனவென்பதற்கு அவர்கள் கண்ட காரணங்கள் பல.  அவற்றுட் சிறந்தன மூன்று.  முதலாவது 4 "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்" என்பது 5 "ஏன்றெடுத்த மொழிகல்வி எவற்றினுக்கும் இரையோனே" ஆகிய சிவபிரான்  6 சிருட்டியாரம்பத்தில் அம்பிகைக்கு ஆரியமுந் தமிழும் ஒருங்கு நல்கி யறிவுறுத்தருளினார்.  ஆகலின் இவ்விரு மொழிகட்கும் முதலாசிரியரென அவர் விதந்து கூறப்பட்டார்.  இரண்டாவது "இயல் வாய்ப்ப இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர்" என்பது இவர்கள் தமிழுக்கிலக்கணம் வகுத்த பாணினியாருமே.  அகத்தியனார் பரமசிவனை வழிபட்டு முக்குணங்களுங் கடந்து இறைவனருள் பெற்றுத் தலைமை யெய்தியவர்.  7 "இத்தொல்லுல்கினி லெம்மையன்னவரில்லை கண்டீர் குறுமுனியலது" என்று அவரது தலைமை இணையிலியாகிய எம்பிரானால் சம்மதிக்கப்பட்டது.  அங்ஙனமே பாணினியாருந் தலைமை இணையிலியாகிய எம்பிரானால் சம்மதிக்கப்பட்டது.  அங்ஙனமே பாணினியாருந் தலைமை யெய்தியுள்ளமை வடமொழி நூல்களிற் பரக்கக்கரண்ப்படும். ஆதலினாற்றான் 'முனிவேந்தர்' என அன்னார் முனீந்திரரால் (சிவஞான சுவாமிகள்) மொழியப்பட்டனர்.  மூன்றாவது "இருமொழியுமான்றவரே தழீஇனார்" என்பது.  ஆன்றவராவார் சுத்தாத்வைத ஞானசாகரத்திற் றிளைத் தாடிய தூயோர்.  தமிழைத் தழீஇய அத்தகையார் ஸ்ரீஞானசம்பந்தாதி பரமாசாரிய மூர்த்திகள்.  வடமொழியைத் தழீஇய அத்தகையார் ஸ்ரீஹரதத்தாசாரியராதி மகந்நியர்கள்.  வடித்தெடுத்த இம்மூன்று காரணங்களையும் விளங்க விரித்து "இருமொழியு நிகரென்னுமிதற்கையமுளதேயோ" என்ற வுண்மையை யெறுழ்வயிரத் தூணேபோல் நிறுத்தினார்கள் நமது சிவஞானமுனிவர் பிரானார்.
    உலகெலா முய்யவந்த இவ்வுத்தம ஜகதாசாரிய மூர்த்திகளைக் காலத்துக்கேற்பக் கோலங்கொள்கின்ற சாமானிய அறிஞராக மதித்தல் அம்மமம்! கொடுவினை! இவர்கள் சாக்கிரத்தேயதீதத்தைப்புரியும் பரமஹம்சர்: கள்ளத்தலைவர் துயர் கருதித் தங்கருணை வெள்ளத்தலையும் வள்ளல்: இருமொழி யரியணைமீது எழில்தகவிருந்து இன்றமிழ்நாட்டை யாண்டருளும் ஏந்தலார்; தமது ஞானக் கதிர்களைத் தமிழ் நூல்களாகவே பரப்பித் தமிழரது இருளைக்களைய வந்த எரிசுடர்ச் சூரியர்; மாபாடிய மீந்து தமிழுக்குக் குறைதவிர்த்த நிறை செல்வர், அன்பர்களே! கேவலாத்துவித பாஷ்யகாரராகிய சங்கரரை அவ்வத்துவிதிகள் தமது உள்ளத்தில் எவ்வாறு வைத்து போற்றுகின்றார்கள்? விசிட்டாத்துவித பாஷ்யகாரராகிய இராமானுசரை அவ்வத்துவிதிகள் தமது நெஞ்சில் எவ்வாறு வைத்து ஆசிரயிக்கின்றார்கள்? துவித பாஷ்யகாரராகிய மத்துவரை அந்தத்து விதிகள் தமது மனதில் எவ்வாறு வைத்து வந்திக்கின்றார்கள்? அவ்வாறே சுத்தாத்வைத பாஷ்ய பரமாசாரிய சிகாமணியாகிய சிவஞான முனீந்திரரை ஒவ்வொரு சைவனுந் தனது உள்ளத்திலும், நாவிலுஞ் சிரசிலும் பிரகாசிக்கும்படி வைத்துப் பூசித்தல் வேண்டுமன்றோ? அக்கருணாசாகரரை மறந்துவாழுஞ் சைவனது வாழ்வும் வாழ்வாகுமா? அந்தோ! பரிதாபம்! வடமொழிப் பயிற்சி குன்றிய இக்காலத்தமிழரும் அங்கு மலிந்து கிடக்குஞ் சித்தாந்த ஞான நூற்களையும் படித்துய்தற் பொருட்டு அவர்களுக்குக் காதலையும் மனவெழுச்சியையும் உண்டாக்கத் தமதருள் நூற்களில் அச்சாத்திரங்களின் பெருமையை அவர்கள் பரக்கக் காட்டியுள்ளார்களே.  இந்தச் செய்ந்நன்றி கோறலினுங் கொடியதொரு கொலை குவலயத்துளதோ?  அவ்வவதார புருஷோத்தமர் தந்த ஆணை நமக்கன்றி வேறு யாருக்கு?
    ஆன்றோராசாரத்தைப் பாதுகாக்க; சைவ சமயத்தையே குறிக்கோளாகக் கொள்க; இருமொழிகளையும் ஐயமின்றி நிகரெனவே யுடன்படுக; வடமொழியிலுள்ள இருக்காதி நால் வேதங்களும், காமிகாதி இருபத்தெட்டுச் சிவாகமங்களும், தமிழிலுள்ள அநுபவ நூல்களாகிய பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களுஞ் சிவவாக்கேயெனச் சம்மதிக்க; அப்பதி நூல்களுக்குப் பொருள்கோள்முறை சிவஞான பாடியத்திற் காண்க; மாறிப் பொருள் கொள்ளற்க வென்பன அவர்கள் தந்த ஆணைகளிற் சிலவாதல் காண்க.
    சைவத் தமிழர்காள்! வடமொழியிலுள்ள பெளஷ்கராகம விருத்தி, சுருதி சூக்திமாலை, வேதபாதஸ்தவம், சிவாக்ர பாஷ்யம் முதலிய அருள் நூலாசிரியர்க்ளாகிய ஸ்ரீமத் உமாபதி சிவம், ஹரதத்தர் பெருமானார், சைமினி மகர்ஷி, சிவாக்ர யோகிகள் முதலிய சிவஞானச் செல்வர்களை வடமொழிப் பகைவர்கள் கைகுவிப்பதில்லை.  என்னே மாயாகாரியப்பேய் இவர்களை பந்தித்தலைக்கும் விந்தை! வடமொழியையுந் தமிழோடொப்பப் போற்றுங்கள்.  அது உங்களுக்கும் உரியது.  இரண்டன்பாலுந் திரண்டு கிடக்குஞ் சிவஞானத் தெள்ளமுதை யள்ளியள்ளிப் பருகுங்கள்.  அப்பாலும் அடிச்சார்ந்தார் அநேகர் வடமொழிக்கண் விளங்குகின்றார்கள்.  அங்குச் சென்று அவர்களையும் உங்கள் கண் முட்டக்கண்டு களியுங்கள்.  அத்தவம் வாய்க்கப்பெறாதார் தமது கால்வழிகளையாயினும் அவ்வழியிற்செலுத்துதல் மிக்க நலம்.  சைவ சமயமே உங்கள் உயிர்க்குறுதி.  மொழிப்போர் அப்பயனை உங்களுக்கு இழப்பிக்கவே செய்யும்.  இது சத்தியம்.  கூர்ந்து நோக்கி இவ்வாபத்தினின்றும் விரைவில் விலகிக்கொள்ளுங்கள்.  ஒரு மொழியைப் பயிலுகின்றவனை அம்மொழியை யிகழ்வதனால் தடுத்தலுங் கூடுமா?  இன்னும் மொழிப்பகை யென்னும் இப்பேயன்றோ உங்களிற் சிலர் வேத சிவாகமங்களை மக்கள் வாய்மொழியென்று பிதற்றச்செய்கின்றது? அன்பர்களே! கட்டழிந்து கெட்டொழிய வேண்டாம்.  அவ்வேத சிவாகமங்களே வைதிக் சைவத்துக்குச் சிறந்த பிரமாண நூல்கள்.  அவைகளை யருளிச் செய்தவர் சிவபெருமானாரே; தழுவியவர் ஆன்றோரே.  சரித்திர நூல் மொழி நூல் முதலிய உலகநூற் புகைகளாற் கலக்குண்டு ஊனம் வடிந்த கண்கொண்டு ஞானவான்களையும் ஞான நூல்களையும் பார்த்தல் தவறு.  நூல்களிலும் வன்மை மென்மையுண்டு.  சிவஞானசுவாமிகளது திருவடிகளில் முடிபட வணங்குங்கள்.  உங்களுக்கு எல்லாமினிது விளங்கும்.  தமிழ்ச்சுவையறியாத் தம்பங்கள் போன்று நிமிருவது திமிரேயாகும்.  சைவத்துறையிற் பொய் வந்துழல்வதைக் கருதாமல் பிறதொண்டுகளில் முனைத்து நிற்கின்றீர்களே.  படிற்று நூலால் சைவத்தமிழர்களை மயக்கிச் சைவ சனாதன தர்மத்தில் அவர்களுக்குள்ள நல் விசுவாசத்துக்குப் பொல்லாங்கு சூழ்தல் பாதகம்! பாதகம்!! பிறர்க்கு உபகாரமாதற் பெற்றியாற்றனுந் திரிபுராதியர்களது சிவநெறியைச் சிதைவு செய்த புத்தன் சுருங்கையின் வழியாய்ப் போக்கு வரவு செய்து தன் வினையை நுகர்ந்தொழிந்தான்.  அப்படியுமன்றிப் பகைமேலீட்டால் மட்டும் மொழிப்போர் தொடுத்துச் சைவ சமயத்தைத் தங்களுக்குந் தங்கள் சந்நிதிகளுக்கும் இழப்பித்தல் தகுமா?  தகுமா?  இச்செய்திக்குத் தீர்வும் உண்டா?  யாம் அறிகின்றிலேம்.  மிண்டு மனத்தராய் மொழிப்போர் தொடுத்தொழிவோரொழிக.  இருமொழியுஞ் சிவபிரானுக்குத் திருவோலக்க மண்டபமே.  ஆகையால் பழைய வைதிக சைவத்தையே பார்மிசைப் பரப்பி மக்களையுய்விக்க நாம் இடபக்கொடியை மிக உயர்த்துப் பிடிப்போம்.  தொல்லாசிய ராணைவழி நிற்கும் மெய்யடியர்காள்! வம்மின், வம்மின், விரைந்தோடி வம்மின்.
******
1.
     வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
    யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
    (இ-ள்) வட சொற்கிளவியாவது வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம். எ-று எனவே, பொதுவெழுத்தானியன்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லாமென்றவாறாயிற்று.
    அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன
    வட சொல்லாவது வடசொல்லோடொக்குந் தமிழ்ச் சொல்லென்றாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று; ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையானொப்புமையும் வேற்றுமையுமுடைமையான் இரண்டாகல் வேண்டும்.  இவை எழுத்தாலும் பொருளானும் வேறுபாடின்மை யாகிய ஒரு சொல்லிலக்கணமுடையான் இரண்டு சொல்லெனப்படா; அதனான் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாமென்பது ஒரு சொல்லாயினும் ஆரியமுந் தமிழுமாகிய இடவேற்றுமை யான் வேறாயினவெனின்;-  அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற் சோறு கூழென்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனான் இடவேற்றுமையுடையவேனும் ஒரு சொல்லிலக்கணமுடைமையான் ஒரு சொல்லேயாம்.  ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல்.  எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும், இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்; அதனான் இது போலியுரையென்க. அல்லாதூஉம், அவை தமிழ்ச் சொல்லாயின் வடவெழுத்தொரீ இயென்றல் பொருந்தாமையானும், வட சொல்லாதலறிக.
[தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 5-ம் சூத்திரம்  சேனாவரையர் உரை]
2.
     மழைவ ழங்குக மன்னவ னேங்குக
    பிழையில் பல்வள னெல்லாம் பிறங்குக
    தழைக வஞ்செழுத் தோசை தரையெலாம்
    பழைய வைதிக சைவம் பரக்கவே
                            -கோயிற் புராணம் திருவிழாச் சருக்கம் 53<
3.
     பளகறும் இட்டியாதி பசு தரு மங்கள காலத்
    தளவையிற் கழியும் என்றும் வச்சிர அரிசி மானத்
    தளர்வுறா நிலைபே றெய்தும் உயர்சிவ தருமம் அன்பால்
    உளமுறச் சிவனை எண்ணல் முதற்பல உளவாம் அன்றே.
                           -காஞ்சிப் புராணம், சத்ததானப் படலம் 7
4.
     இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
    இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
    இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ்
    இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ!
                    -காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலம் 249
5.
     மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கினிதாய்த்
    தோன்றிடும் அத்தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி
    ஆன்றவரம் எல்லார்க்கும் இவ்வரைபின் அளித்தருளாய்
    ஏன்றெடுத்த மொழிகல்வி எவற்றினுக்கும் இரையோனே
                    -காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலம் 244
6.
     மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்
    றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
    ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
    காரிகை யார்குக் கருணைசெய் தானே
                    -திருமந்திரம் ஆகமச் சிறப்பு 9
7.
    என்னலும் அனல் அங்கை ஏற்றவர் இமையீர்நீர்
    சொன்னது மெய்யே இத்தொல்லுல கினில்எம்மை
    அன்னவர் இலைகண்டீர் குறுமுனி அலதென்னாப்
    பன்னிய மொழிகேளாப் பண்ணவர் களிகூர்ந்து
                     -காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலம் 258
 
 
--------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை 1927ல் "சமய ஞானம்" பத்திரிகையில் வெளியிடப்பட்டது.