Home           Page 22       Page 24        Origin of Pillai


AYYA JEYAKANTHAN LAST DAY EULOGIES.

எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன்!'
ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டிய வேளையில், 'ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வந்த இந்த நூலை, இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதியினர் தொகுத்திருந்தனர்.

அப்போது அவர் விகடனுக்கு அளித்த பேட்டி இங்கே...

ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்... 'அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். 'இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார்.

''அய்யா... உடல் நிலை எப்படி இருக்கிறது?''

''ம்ம்ம்... வயதுக்கு ஏற்ப உடல் நிலை இருக்கிறது.''

''எல்லாவற்றுக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. ஒரு படைப்பாளியின் எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது எது?''

'''எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, 'இது சரி... இது தப்பு...’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச் செல்கிறான்’- எழுத்தாளன் பற்றி நான் சொன்ன இந்தக் கருத்து எழுத்துக்கும் பொருந்தும். எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பவர்கள் அதை எழுதிய எழுத்தாளர்கள்தான். வேறு யாரும் வெளியில் இருந்து தீர்மானிக்க முடியாது. ஆனால், எழுத்தைக் கீழான நோக்கங்களுக்குப் பலர் பயன்படுத்தியதால், அது கூர்மை மழுங்கிப்போய் இருக்கிறது. எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள்தான், அதற்குக் கூர்மை கொடுக்க வேண்டும்!''

'' 'கதைகளில் வேகம் இருக்க வேண்டும், விறுவிறுப்பு இருக்க வேண்டும்’ என்று சொன்னபோது 'குதிரைப் பந்தயத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை எல்லாம் இலக்கியத்துக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்றீர்கள். இப்போது ஸ்பீட் கதைகள், ஒரு நிமிடக் கதைகள், குறுங்கதைகள் என்றெல்லாம் இலக்கியம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கால மாற்றத்துக்கு இந்த வடிவங்கள் எல்லாம் தேவை என்று நினைக்கிறீர்களா?''

''இந்த மாதிரி கதைகளைப் பற்றி நான் ஒன்றுமே நினைப்பது இல்லையே!'' (முகத்தை உயர்த்திப் பார்க்கிறார்)

''எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாக்காரர்... எனப் பல முகங்கள் உங்களுக்கு உண்டு. எழுத்தாளனாக உச்சம் தொட்ட நீங்கள், மற்ற துறைகளில் எதில் நிறைவு கண்டதாக உணர்கிறீர்கள்?''

''பத்திரிகைத் துறை பங்களிப்பில் நிறைவு கண்டதாக நினைக்கிறேன். அதுவும் ஓரளவுதான். பத்திரிகை என்பதுதான் பலருடைய எண்ணங்க ளுக்கு இடம் அளிக்கவேண்டிய துறை. அதில் பலருடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. பலருடைய நிலைமைகளையும் அனுசரித்து நிறைவேற்றிய நிறைவு, எனக்கு ஓரளவு உண்டு.''

''இப்போது வாசித்துக்கொண்டிருக்கிற புத்தகம்?''

''தஸ்தாயெவ்ஸ்கியின் 'கேம்ப்ளர்’ நாவலை இப்போது வாசித்துக்கொண்டி ருக்கிறேன். அது எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றாலும், அது எனக்குப் புதிதாகவே இருக்கிறது. படிக்கும்போது அது எழுதப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.''

''எழுத்தாளர்களைச் சமூகம் கொண்டாட வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?

''எழுத்தாளனை எழுத்தாளனாகக் கொண்டாட வேண்டும் சமூகம். 'என்னைத் தனியாகக் கவனியுங்கள், என்று எழுத்தாளன், மக்களிடம் மனு போட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால், எழுத்தாளனின் ஸ்தானத்தை எழுத்தாளர்கள்தான் கெடுத்துக்கொள்கிறார்கள். இது தனி மனித உரிமை என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. பிரச்னைகளை அக்கறையோடு அணுகி, தீர்வு காண வேண்டும் என்பதுதான் கலைஞனின் சமூகக் கடமை. அது இல்லாதபட்சத்தில் அவனை சமூகம் விட்டுத்தள்ள வேண்டும். இதற்குக் கூட்டம் கூட்டி ஒன்றும் செய்ய முடியாது!''

''ஓர் எழுத்தாளனாக முழு திருப்தியோடு வாழ்ந்திருக்கிறீர்களா?''

''எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன். நான் வாழ்ந்திருக்கிறேன். அது போதாது. எல்லோரும் நிறைவோடு வாழ வேண்டும் என்பதும் என் அவா!''

''முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஓர் இடதுசாரியான உங்களுக்கு இதில் வருத்தம் ஏதும் இல்லையா?''

''மக்களை விமர்சிப்பதில் பயன் இல்லை. ஏனென்றால், தேர்தல் வந்தால் மக்களிடம்தான் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் தங்களை மதிக்காத மக்களை நாடிச் செல்கிறார்கள். அதற்குரிய பலன் இதுவே. அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. கூடியவரை மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி நடக்கின்றன. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது!''

'''வாழ்க்கை, முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தொடக்கக் கால வாழ்வோடு இப்போது எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறீர்கள்?''

''எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை முரண்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. இயற்கையிலேயே இருக்கிற முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால், செயற்கையான பல முரண்பாடுகளை சில வியாபாரிகள் உருவாக்கி வருகிறார்கள்!''

''இப்போது, உங்களுடைய ஒரு நாள் வாழ்க்கை எப்படி அமைகிறது?''

''ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மாற்றம் எதுவும் இல்லை!''

''நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக நினைக்கிறீர்களா?''

''இல்லை... நிறைவு அளிக்கவில்லை. மிகவும் குறைபாடுடையதாக... குறைபாடுகள் மட்டுமே தெரிவதாகத் தெரிகிறது!''

''இன்றைய தலைமுறையினருக்கு பணம் மட்டுமே வாழ்வு என்று ஆகியுள்ளதே?''

''மதிப்பெண் வாங்குவதையே வெற்றி என்று நினைக்கிறார்கள் மாணவர்கள். பெற்றோர்கள் இதை ஊக்குவித்து வழி வகுக்கிறார்கள். அரசியலிலும் தனி மனித வாழ்விலும் எங்கும் லாபக் கணக்குகளைப் பார்த்து மட்டுமே வாழத் தொடங்கிவிட்டனர். இதையும் மாற்ற, இளைஞர்கள்தான் வர வேண்டும். லாப-நட்ட கணக்குகளை மட்டுமே பார்க்கக் கூடாது. மக்களை விமர்சனம் செய்வதில் பலன் இல்லை என்று ஆரம்பத்தில் சொன்னேன். மக்கள் என்போர் முன் தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான். வரும் தலைமுறையை வழிநடத்த வேண்டியது முன் தலைமுறையின் கடமை!''

''தமிழர்களின் மிகச் சிறந்த குணம் எது... மிக மோசமான குணம் எது?''

''தமிழர்களிடம் சிறப்பான குணம் என்று ஒன்றைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கோழைத்தனம்தான், பொதுவான குணமாக இருக்கிறது. தனிப்பட்ட குணமாக ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையெடுக்கலாம். அதில் சிறப்பானதைக் கொண்டாடுவதும், சிறப்பற்றதைக் காணாமல்விடுவதும்தான் எழுத்தாளன் பணி.''

[4/10, 15:53] pasupathi k pillai: . ‘கேளடா மானுடா’என்று பீடத்தில் ஏறி நின்று பாடிய பாரதி, அந்த வகையில் தமிழுக்கு முதன்மையான நவீன இலக்கியவாதி. அரசவையைத் துறந்து இதழியல் நோக்கி அவர் போனதே அவ்வகையில் ஒரு பெரிய குறியீடு. ஆனால், அவரைப் புரிந்துகொள்ளாமல் அவமதித்துத் துரத்தியது தமிழ்ச் சமூகம்.
[4/10, 15:55] pasupathi k pillai: இடதுசாரி எழுத்தாளர் என்றாலும், அவர் வன்முறையை முழுமையாக நிராகரித்தவர். வன்முறை மானுட ஆழத்திலுள்ள புன்மையைத்தான் வெளியே கொண்டுவரும் என நினைத்தார். ஆகவே, மார்க்ஸை ஏற்றுக்கொண்டதுபோலவே அவர் காந்தியையும் ஏற்றுக்கொண்டார். காந்திக்கும் மார்க்ஸுக்குமான அனைத்து முரண்பாடுகளையும் ஜெயகாந்தன் அறிந்திருந்தார். ஆனால், மானுட விடுதலை என்ற புள்ளியில் அவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் எண்ணினார். அதுதான் ஒட்டுமொத்தமாக அவரது பங்களிப்பு. ஒரு தத்துவ இணைவு. ஒரு மகத்தான உரையாடல். அவர் விட்டுச்சென்றுள்ள கனவு அதுதான்!
[4/10, 15:56] pasupathi k pillai: அவரது படைப்புகளின் தலைப்புகள் மேலும் படைப்பூக்கம் கொண்டவை. ‘புதியவார்ப்புகள்’, ‘சமூகம் என்பது நாலு பேர்’, ‘அந்தரங்கம் புனிதமானது’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’, ‘எங்கோ யாரோ யாருக்காகவோ’, ‘முன்நிலவும் பின்பனியும்’ போன்ற வரிகள் தமிழின் மிகச் சிறந்த கவிதை வரிகளுக்கு நிகரானவை. அவை அப்படைப்புகளின் சாரமாக வாசகர் உள்ளத்தில் வாழ்நாள் முழுக்க நீடிப்பவை.
[4/10, 15:57] pasupathi k pillai: சாதி, மதம், சமூகக் கட்டுப்பாடுகளைக் கடந்து ‘நான் சிந்திக்கிறேன்’ என ஒவ்வொரு வாசகரையும் உணரச் செய்தவை அவரது படைப்புகள். வாழ்க்கையை, மக்களை எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் இருப்பார்கள். ஒரு காலகட்டத்தின், ஒரு சமூகத்தின் பொதுக் குரலாக ஒலிக்கும் பெரும் படைப்பாளிகள் தலைமுறைக்கு ஒருவரே. அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் அறிவாண்மையின் குரலாக ஒலித்தவர் ஜெயகாந்தன்.
[4/10, 15:58] pasupathi k pillai: இங்கே முற்போக்கு இலக்கியம் உருவானபோது அதன் குரலாக எழுந்துவந்தவர் அவர். இந்தியாவெங்கும் முற்போக்கு என்னும் மார்க்ஸிய அடிப்படை கொண்ட இலக்கியம் மரபை முழுமையாக நிராகரிப்பதாக, இந்திய எதிர்ப்பும் ஐரோப்பிய வழிபாடும் கொண்டதாக இருந்தபோது, ஜெயகாந்தன் இந்தியாவின் ஞானமரபிலிருந்த சாராம்சமான விஷயங்களுடன் மார்க்ஸியத்தை இணைக்க முயன்றார். மார்க்ஸியம் இந்தியாவின் ஞானமாக ஆக வேண்டுமெனக் கனவுகண்டார். ஆகவே, அவருக்கு மார்க்ஸ் அளவுக்கே விவேகானந்தரும் வள்ளலாரும் முதன்மையானவர்களாக இருந்தார்கள். வள்ளுவரும் தாயுமானவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களை இடதுசாரி மேடைகளில் முன்வைக்க அவரால் முடிந்தது. 
[4/10, 15:59] pasupathi k pillai: இழிவு என்றும் இங்கு எழுத்தாளர்களுக்கு இருந்தது. ஜனநாயகத்தின் வழியாக உருவாகிவந்த புதிய அரசர்களான அரசியல்வாதிகளுக்கு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் உருவாகிவந்த புதிய தெய்வங்களான நடிகர்களுக்கு இருந்த இடத்தை தமிழகம் எழுத்தாளர்களுக்கு அளித்ததில்லை - இன்னும் அளிக்கவில்லை.

தமிழிலக்கியத்தின் பதாகை

அத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளர்களின் முகமாகத் தருக்கி நிமிர்ந்து நிற்க, சமூகத்தை நோக்கிக் கைசுட்டிப் பேச, எழுத்தாளருக்குரிய வாழ்க்கையை வாழத் துணிவுகொண்டவர் ஜெயகாந்தன். எழுத்தன்றி எந்தத் தொழிலும் செய்ய மாட்டேன் என அவர் எடுத்த முடிவு, எந்நிலையிலும் கலைஞனாக மட்டுமே வாழ்வேன் என அவர் கொண்ட உறுதி அவரைத் தனித்து நிறுத்தியது. அவருக்கிருந்த இடதுசாரிப் பின்புலமும் வங்காளத் தொடர்புகளும் அதற்குக் காரணமாயின. அவர் அவ்வகையில் ஒரு முன்னோடி. ஒரு அடையாளம். நவீனத் தமிழிலக்கியத்தின் பதாகை.
[4/10, 15:59] pasupathi k pillai: இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவர் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவர் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது.
[4/10, 16:28] pasupathi k pillai: - ஜெயமோகன்,
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com

 

ஜெயகாந்தன் எழுத்துகள் காலத்தால் மறையாது: கருணாநிதி
Updated: Thu, 9 Apr 2015 18:40


ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '' தமிழ் இலக்கிய உலகத்தில் ஜே.கே என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியுற்றேன். துயரம் தனித்து வருவதில்லை என்பது எவ்வளவு உண்மை.

நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி கிடைத்தது.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று.

என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் இசபெல்லா மருத்துவ மனையிலே அனுமதிக்கப் பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனி மொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.

உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம், ''நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான்செல்வேன்'' என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, ''என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்'' என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருது, முரசொலி அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருது என பல விருதுகளைப் பெற்றவர்.

பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 

சமூகத்துக்கு நன்மை தரும் குணம்: பட்டுக்கோட்டை பிரபாகர்
Updated: Thu, 9 Apr 2015 17:53


எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
ஒரு எழுத்துலக சிங்கம் நிரந்தர ஓய்விற்கு சென்றுள்ளது. ஜெயகாந்தனின் எழுத்துக்களை என் கல்லூரி காலத்தில் தேடித் தேடிப் படித்தவன். அவர் எழுத்தில் உள்ள ஆழமும் கம்பீரமும் எந்த வாசகனையும் அதட்டல் போட்டு கை கட்ட வைக்கும்.

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், பிரளயம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தந்தவர்.

அவர் ஒரு கர்வி என்று என்னிடம் சிலர் சொல்லும்போது.. 'இருக்கட்டுமே..அசாத்திய படைப்புகளைப் பிரசவிக்க அந்த குணம் அவருக்கு தூண்டுதலாக இருந்தால் அது சமூகத்திற்கு நல்லதுதானே' என்பேன்.

அவரின் மேடைப் பேச்சிலும் அந்த கம்பீரம் இருக்கும். ஒரு சமயம் ஒரு மேடையில் ஒரு வாசகர் 'இன்றைய பெண்களின் கற்புநிலை கவலை அளிக்கிறதே?' என்று கேட்டபோது அவர் ஒரே வார்த்தையில் 'நம்புங்கள்' என்று பதில் அளித்தார்.

சமீபத்தில் விகடன் நடத்திய விழாவில் அனைவரும் அவரைப் பாராட்டிப் பேசியதும் நன்றியுரை சொல்ல வந்தவர் 'நன்றி' என்று ஒரு வார்த்தை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார். சிலருக்கு வாழும் காலத்தில் அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்காது.

ஆனால் ஜெயகாந்தனுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அவர் வாழ்ந்த காலத்திலேயே நிறைவாக அளிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.

அவர் தம் படைப்புகள் மூலமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

- பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்

 

 

 

Please write about more greats to us, we will add them here

Home           Page 21       Page 23        Origin of Pillai