Pillai in Cinema       Pillai Web Sites     Ceremonies    Home   

ரெட்டியபட்டி சுவாமிகள்

article thanks to சரவணன் http://archives.aaraamthinai.com/
--------------------------------------------------------------------------------

ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதிக் கோயில் நாகலாபுரத்தில் இருந்து பெருநாழிக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியபட்டி என்னும் ஊரில் உள்ளது.

ரெட்டியபட்டியில் வீரபத்திரப் பிள்ளைக்கும் ஆவுடையம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தார் சுவாமிகள். இவருடைய பெயர் எவருக்கும் தெரியவில்லை. சிறுகுழந்தை முதலே தனியாகவே இருந்து வந்திருக்கிறார். விளையாட்டுப் பருவத்திலும் யாருடனும் சேராது தனித்தே வாழ்ந்திருக்கிறார். இறைவன் மீது தீராது பற்றுக் கொண்டு குருமூர்த்தியாக விநாயகப் பெருமானை ஏற்றுக் கொண்டார்.

பதினாறு வயது முதல் உழவுத் தொழிலில் ஈடுபடத் துவங்கினார். அவ்வூரில் அப்போது கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஆகவே சுவாமிகள் தூத்துக்குடிக்குச் சென்று தானியங்களை வாங்கி வந்து மக்களுக்கு அதை இலவசமாக விநியோகித்திருக்கிறார். அதிலிருந்து மக்கள் இவர்மேல் அபரிதமான அன்புடன் பழகி வந்தனர்.

இவரும் ஊர்மக்கள் மீது மிகுதியான அன்பு கொண்டு எப்போதும் இறைவனையே நினைத்தபடி நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில காலங்களாக இப்படியே தன்னுடைய வாழ்க்கையை ரெட்டியபட்டியில் கழித்து வந்தார். அதன்பின் மதுரைக்குச் சென்று மீரான் சாயுபு கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். அப்போதுதான் வாழ்க்கையில் பெருமாற்றம் ஏற்பட்டது.

அதிகாலையில் எழுந்து நீராடி குருநாதரான விநாயகரை வணங்குவது, விஷக் கடிக்கு ஜபிப்பது போன்ற வழிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போதுதான் அவருக்குத் திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை அவருடைய ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூறாக இல்லை.

கடை முதலாளிக்கு இடையூறு இல்லாத வகையில் எவ்வித நோய்க்கும் மந்திரித்து திருநீறு கொடுப்பார். அப்போது அவருடைய தந்தை இறந்துவிட்டார். அச் செய்தி அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மீரான் சாயுபுவின் கடைக்கு முன்னால் அமர்ந்து பேசா நோன்பை ஒரு மண்டலம் வரை மேற்கொண்டார். வந்த அடியவர்கள் கேட்கின்ற கேள்விக்கும் எழுத்தால் பதில் அளித்தார்.

சில காலம் இப்படியே இருந்து விட்டு யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமல் பொதிகை மலைச் சாரலுக்குச் சென்று செண்பகாதேவி கோயிலுக்கருகிலுள்ள குகையன்றில் தவத்தை மேற்கொண்டார். இதற்கிடையே அவருடைய தாய் நோய்வாய்ப்படவே திரும்பி ரெட்டியபட்டிக்கு சுவாமிகள் செல்ல நேர்ந்தது. தாய்க்கு அருகிலேயே அமர்ந்து யாரிடமும் பேசாமல் கனிவுடன் கவனித்து வந்தார்.

இந்தச் சமயத்தில் அவருடைய தாய் இறந்து விட்டார். அவரை எரிக்கக்கூடாது என்றும் புதைக்க வேண்டும் என்றும் சுவாமிகள் சொல்லி விட்டார். ஆனால் அவர்கள் சைவப் பிள்ளை வழக்கத்தின்படி எரிக்கத்தான் வேண்டும். ஆனால் சுவாமிகளின் ஆணைப்படி புதைத்தார்கள். அதன்பின் வீட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார். இப்படியே ஒரு மண்டலம் வரை இருந்தார். இதைக் கண்ட குடும்பத்தார் அனைவரும் பயந்து விட்டனர். உரக்கக் கத்திப் பேசி எழுப்பினார்கள். இதனால் இடையூறு நேர்ந்தது எனக் கருதிய சுவாமிகள் மீண்டும் பொதிகை மலைக்குச் சென்று தவத்தை மேற்கொண்டார். அதன்பின் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நல்லது செய்தார். இறுதிக் காலத்தில் ரெட்டியபட்டிக்கு வந்து தான் பிறந்து வளர்ந்த வீட்டிலேயெ திருக்காப்பீட்டுக் கொண்டார் சுவாமிகள். அச் செய்தி மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு மூன்று தினங்கள் ஆகிவிட்டது. அதன்பின் சுவாமிக்கு அவ்வீட்டிலேயே சமாதி வைத்தார்கள்.

இந்தச் சமாதிக் கோயிலில் சுவாமி பிறந்த புரட்டாசி மாதத்திலும் சுவாமிகள் அடங்கிய ஜனவரி 12-ஆம் தேதியிலும் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். அதே நாளில் குருபூசையும் கொண்டாடப்படுகிறது.