Home            Meaning of Viboothi or Thiruneeru        Ultimate and Only God Shiva

Sivanjyana Botham 1st Suthram Meaning

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
குரு பூசை
(சிவஞான போத முதற் சூத்திர விளக்கம்)
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
--------------------------------------------------------------------------------
    சைவ சமயமே சமயம்.  அதன் தெய்வம் சிவபெருமான்.  அவனே முழுமுதற் கடவுள்.  இருக்கு முதலிய நான்கும் வேதங்கள்.  காமிக முதலிய இருபத்தெட்டும் சிவாகமங்கள்.  அவ்விருவகை நூல்களும் அவன்வாக்கு.  அவை வடமொழியில் உள்ளன.  அச்சமயத்துக்குப் பிரபல பிரமாண நூல்கள் அவைதான்.  திருஞானசம்பந்தர் முதலியோர் தம் முன்னைப் பிறப்புக்களில் அந்நூல்களின்வழி யொழுகினர்.  அதனால் அவனருளே கண்ணாக அவருக்குக் கிடைத்தது.  அது கொண்டு அவர் அவனை நேரிற் கண்டனர்.  அவரருளிய பாடல்கள் பல.  அவை பன்னிரு திருமுறைகளால் விளங்கும்.  வேதாகமங்கள் ஞான நூல்கள்.  திருமுறைகள் அனுபவ நூல்கள்.  அந்த ஞான நூல்களுக்கு அவ்வனுபவ நூல்கள் சான்றாகின்றன.
'சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலு மெஞ்சுந்தரனுஞ்
சிற்கோல வாதவூர்த் தேசிகனு - முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே மாமறைநூல் தானெங்கே
யெந்தை பிரான் ஐந்தெழுத்தெங்கே' என்றது காண்க.
    ஆகலின் அந்நூல்களும் மெய்ப்பிரமாணமாம்.  அவரே சைவசமய ஆசிரியன்மார், சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு.  அவையும் அத்தகையவே.  அவற்றுக்காசிரியன்மார் மெய்கண்டார் முதலியோர்.  அவர்தான் சைவ சந்தான ஆசிரியன்மார்.  அவரெல்லாந் திரண்டு ஒரு மூர்த்தியாக வந்தாரென்னும் பிரதாபத்துக் குரியார் சிவஞான முனிவரர்.  திராவிட மாபாடியமென்னும் பிரமாணநூல் அவரருளியது.  அத்தனை ஆசிரியன்மாரும் நாம் வழிபடத் தக்கார்.  அவ்வழிபாடு குருபூசை வெனப்படும்.
    அவருள்பட எல்லா நாயன்மாரும் எய்திய நிலை என்ன? அதுதான் சிவமாந் தன்மைப் பெருவாழ்வு.  அவரை வழிபடுவதெப்படி?
    "ஆசார்ய தேவோ பவ"
    "ஆசாரியனைத் தெய்வமாகப் பாவித்திரு'   - (தைத்திரீயோப நிஷத்)
    "ஆசார்ய சாஸ்திர மார்க்கேண ப்ரவிச்யா சுஸ்திரோ பவ! சிவோ குருச் சிவோ தேவச் சிவோ வேதச் சிவ: ப்ரபு:!"
    "ஆசாரியன் சாத்திரம் ஆகிய இம்மார்க்கத்தே பிரவேசித்து அதனில் உறுதியாயிரு: சிவனே குரு, சிவனே தேவன், சிவனே வேதம், சிவனே பிரபு'.   - (வராஹோப நிஷத்)
    "சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
    சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
    நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
    பவமான தின்றிப் பரலோக மாமே'  - (திருமூலர்)
    "சாக்கிரத்தை யதீதத்தைப் புரிந்தவர்க ளுலகிற்
    சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்க ளிவர்கள்
    பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின்
    பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ'  - (அருணந்தி சிவனார்)
    'கற்றா மனம் போற் கசிந்துகசிந் தேயுருகி
    யுற்றாசான் லிங்க முயர்வேடம் - பற்றாக
    முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும்
    பத்திதனி னின்றிடுவர் பார்' - (திருவதிகை - மனவாசகங் கடந்தார்)
    'தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு
    மீசனென வேயுளத்து ளெண்' - (மறை ஞான சம்பந்தர்)
    'கண்மணியானது இது நன்று இது தீது என்று காட்டுதல் போலச் சற்குருவானவர் இது நன்னெறி இது தீநெறி என்று உணர்த்துவோ ராதலால் அவரைச் சிவபெருமான் எனவே பாவித்து, நியமமாக மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் வழிபடுவோர் சித்தி முத்திகளைப் பெறுவர்'.    - (யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்)
ஆகையால் அந்நாயன்மாரைச் சிவனெனவே கொண்டு வழிபட வேண்டும் என்பதாயிற்று.
    அவர்க்குச் சிவாலயங்களிற் குருபூசை நடைபெறும்.  அதில் அர்ச்சனையும் உண்டு.  அர்ச்சிபவர் ஆலய அர்ச்சகர்.  அர்ச்சனை மந்திரம் அஷ்டோத்தரம்.  அது சிவபெருமானுக்குரியது.  ஆனாற் சிலர் அதை ஆக்ஷபிக்கின்றனர்.  அவருஞ் சைவர் தான்.  அவ்வாக்ஷபமாவது யாது? அம்மந்திரத்தில் 'அம்பிகா நாதாய நம:' என்பது போன்ற தொடர்கள் வரும்.  'அம்பிகா நாதாய நம:' என்றால் உமா நாதனுக்கு வணக்கம் என்று அர்த்தம்.  நாயன்மார் உமைக்கு நாதரா? அல்லர்.  ஆகலின் அம்மந்திரம் அவர்க்குச் சொல்வதால் சிவாபராதமே சித்திக்கும்.  இதுவே அவ்வாக்ஷபம்.  அது சரியா? சிறிதே விசாரிக்கலாம்.
    பெருமிழலைக் குறும்ப நாயனார் சந்தரரை உபாசித்திருந்தார்.  அந்நாயனாருக்குக் கிடைத்தது சிவபதம்.  அப்பூதியடிகணாயனார் திருநாவுக்கரசரை உபாசித்திருந்தார்.  அந்நாயனாருக்கும் அப்பதமே கிடைத்தது.  அதனால் அவ்விரு நாயன்மாரும் அவ்வாசிரியன்மாரைச் சிவனெனவே கொண்டு வழிபட்டாரெனத் தெரிகிறது.
    நாயன்மார் சிவன்களல்லராயின் திருத்தொண்டத்தொகை.  திருத்தொண்டர் திருவந்தாதி முதலியன சிவதோத்திரமாகிய திருமுறைகளுள் இடம்பெற நியாயமில்லை.
    அருணந்தி சிவனார்க்கு ஆசிரியர் மெய்கண்ட சிவனார்,
    'கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
    மண்ணிடையின் மாக்கண் மலமகற்றும் - வெண்ணெய் நல்லூர்
    மெய்கண்டா னென்றொரு கான் மேவுவரான் வேறின்மை
    கைகண்டா ருள்ளத்தின் கண்'
என்றார் அவ்வருணந்தியார்.  நெற்றிக் கண்ணையும் கண்டக்கறையையும் மறைத்துக் கொண்டு வந்த சிவனே மெய்கண்டார் என்கிறது அப்பாடல்.  அம் மெய்கண்டாரைப் 'பால லோசநாய நம: நீலகண்டாய நம:' எனக் கூறி அர்ச்சித்தாலென்னை? அதிற் குற்றமில்லை.
    உமாபதி சிவனார்க்கு ஆசிரியர் மறை ஞான சம்பந்த சிவனார்.  அவ்வுமாபதியார்.
    '......ஆடுந் திருத்தொழிலுஞ்
    சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
    பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
    வைச்ச நதியு மதிக்கொழுந்தும் - அச்சமுற
    ஆடு மரவு மழகார் திருநுதன்மேல்
    நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் - கேடிலயங்
    கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும்
    பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
    வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியா
    ருள்ளத்தி னும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை
    வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்
    ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும்
    இறவாத இன்பத் தெமையிருத்த வேண்டிப்
    பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
    தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்ற
    பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்
    உண்டி யுறக்கம் பயமின்பம் ஒத்தொழுகிக்
    கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி'
என்றார்.  சிவனே தன் தாண்டவம், கறை மிடறு, உமை, கங்கை, சந்திரன், சர்ப்பாபரணம், நெற்றிக்கண், டமருகம், தீத்தகழி, பாம்புக்கச்சு, புலித்தோல், பாதச் சிலம்பு, வீரக்கழல் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு மறைஞான சம்பந்த சிவனாராக வந்தானென்கிறது அப்பாடல்.  அங்ஙனம் மறைக்கப்பட்ட அடையாளங்களையும், இலக்கணங்களையுஞ் சொல்லி அவ்வாசிரியரை யர்ச்சிப்பது எப்படிக் குற்றமாகும்? அதில் பச்சை யிடம் என வருகிறது.  பச்சை யிடமாவது இடப்பாக மாதரான்.  ஆகலின் 'அம்பிகா நாதாய நம:' என்ற மந்திரமும் அடியாரை யர்ச்சித்தற்குப் பொருந்துவதே யென்க.
    கண்ணனும் அர்ச்சுனனும் கயிலைக்குப் பயணமாயினர்.  வழியில் அர்ச்சுனனுக்குப் பசித்தது.  ஆனால் சிவபூசை செய்யுமுன் அவன் சாப்பிட மாட்டான்.  கண்ணனுக்கு அது தெரியும்.  அவன் அர்ச்சுனனைப் பார்த்து 'இங்கே நான் சிவோஹம் என்ற பாவனையோடு உட்காருகிறேன்.  நீயும் என்னைச் சிவமாகப் பாவித்துப் பூசி' என்றான்.  அர்ச்சுனன் அவ்வாறே செய்தான்.  உணவும் அருந்தி முடிந்தது.  இருவருங் கயிலையையடைந்து சிவசந்நிதியில் நின்று சிவபெருமானை வணங்கினர்.  அர்ச்சுனன் கண்ணனிடம் சிவபூசை செய்தபோது அர்ச்சித்த பூக்கள் சிவன் திருமேனியில் இருந்தன.  அவ்விருவருங் கண்டு வியந்தனர்.  அர்ச்சுனன் அப்பூசையில் 'அம்பிகா நாதாய நம:' என்ற மந்திரத்தைச் சொல்லாமலா இருப்பான்? கண்ணன் சிவனடியானே, அம்பிகைக்கு நாதனல்லன்.  அப்படியிருந்தும் அப்பூசை சிவனால் ஏற்கப்பட்டது.
    சிவஞான முனிவரர் துறைசையாதீன பிரதம ஆசாரியரான பஞ்சாக்கர தேசிகரைத் துதித்தார்.  அத்துதியில் 'திருவெண்ணை மெய்கண்ட தேவே பஞ்சாக்கர தேசிகனே' என வருகிறது.  பஞ்சாக்கர தேசிகர் மெய்கண்டதேவ ரானாரெனின் அவ்விருவரும், பிறநாயன்மாரும் ஏன் சிவனாகார்?
    சிவாலயத்திலுள்ள சிவலிங்க வுருவம் சிலையே.  அம்பிகை யுருவமும் அதுவே.  அச்சிவலிங்க வுருவைப் பார்த்து 'அம்பிகா நாதாய நம:' எனத் துதிக்கலாம்.  அச்சிலையா அம்பிகைக்கு நாதன்? அம்பிகை யுருவைப் பார்த்துச் 'சிவசக்தியாய நம:' எனத் துதிக்கலாம்.  அச்சிலையா சிவனுக்குச் சக்தி? அவ்வினாக்களுக்கு விடையென்னை? அதுவே அடியாரை 'அம்பிகாநாதாய நம:' எனத் துதிக்கலாமா என்பதற்குமாம்.
    மனிதருள் ஒருவரை யொருவர் உபசரிக்கின்றனர்.  அவ்வுபசாரம் உடம்புக்கே செய்யப்படும்.  அவ்வுடம்பில் உயிருண்டு.  அது காணப்படாத பொருள்.  ஆயினும் அவ்வுபசாரஞ் செய்கிறவன் அவ்வுயிரைக் கருதியே செய்கிறான்.   அதற்கு நேரே செய்வதில்லை.  என்றாலும் உடம்புக்குச் செய்த உபசாரத்தை உயிர் தனக்கென ஏற்று மகிழ்கிறது.  சிவனடியார் தம்மைச் சிவன்பால் முழுக்க இழந்தவர்.  பழுக்கக் காய்ந்துள்ளது இரும்புத்துண்டு.  அதில் அக்கினி மேலிட்டது.  இரும்பு அடங்கினது.  அவ்விரும்பு போன்றவர் அவ்வடியார்.  அவருயிரைச் சிவனுண்டான்.  அது சிவமாயிற்று.  ஆகவே அவர் கரணங்களுஞ் சிவமயமாயின.  அவர் வேடமுஞ் சிவவேடமே.  அதனால் அவர் உள்ளும் புறம்பும் சிவமானவரே.  அவரை வழிபடுவது சிவனை நேரே வழிபடுவதாகும்.
    நாயன்மார் பலர்.  ஒவ்வொருவரது வாழ்க்கையும் ஒவ்வொரு விதம்.  அவ்வாழ்க்கைச் சம்பவங்களும் வேறு வேறாய்ப் பலவாம்.  அவற்றை எடுத்துக் கூறுந் துதிப்பாடல்களுக் களவில் பலவாம்.  அப்பாடல்கள் அவர்க்கெல்லாம் உள.  அவற்றைச் சிதைத்துத் தனித்தனி தொடர்களாக்கி அவரவர் குருபூசையில் அத்தொடர்களைச் சொல்லி அர்ச்சித்தால் அப்பாடல்களின் ஆற்றல் கெடும்.  துதிவேறு, மந்திரம் வேறு.  ஆனால் எல்லா நாயன்மாரும் எய்திய நிலை மாத்திரம் ஒன்றுதான்.  அது சிவமாந்தன்மைப் பெருவாழ்வு.  அதை வைத்தே அவர் வாழ்க்கையும், வாழ்க்கைச்சம்பவங்களும், பாடல்களும் மதிக்கப்படும்.  ஆகலின் அதுவே முக்கியம்.  அதுபற்றியே சிவ அஷ்டோத்தரஞ் சொல்லி அவர் அர்ச்சிக்கப்படுகின்றனர்.
    அவ்வர்ச்சனையை ஆக்ஷபிப்பவர் மேற் கூறப்பட்டவற்றுள் எதனையுஞ் சிந்தியார்.  அன்றியும் அவர் வடமொழியை வெறுப்பவர்.  அவ்வெறுப்பே தமிழ்ப்பற்றாக அவரிடம் பரிணமித்துள்ளது.  ஏதாவது போலிக் காரணத்தைச் சொல்லி அவ்வஷ்டோத்தரத்தை நிறுத்தி விட்டால் தமிழர்ச்சனைக்குக் குருபூசைகளிலாவது இன்றில்லாவிடின் நாளையேனும் இடங்கிடைக்கலாமென்பது அவரது நோக்கம்.  ஆனால் அந்நோக்கம் சைவத்துக்குப் பாதகமான தென்பதில் சந்தேகமில்லை.
    சிவபெருமானே எல்லா வுலகிற்குள் கருத்தா.  சர்வன்மாக்களும் அவனையே வணங்க வேண்டும்.  அப்படிச் சொல்வதே சைவ சமயம்.  ஆகலின் அச்சமயமும் எல்லாவுலகிற்கும் பொதுவாகும்.  நாடுகள், மொழிகள், பிற சமயங்கள் எல்லாம் அதற்கடக்கம்.
    'வச்சிர வரிசி மானத் தளர்வுறா நிலைபே
    றெய்து முயர்சிவ தருமம்'
என அதன் கலங்கா நிலையுங் காட்டப்பட்டது.  அதை அவர் தங்கருத்துக் கேற்பப் புரட்டப் பார்க்கிறார்.  அது செல்லாது.  அவரும் பிறவாமையை யெய்தவே பிறந்துள்ளார்.  அதை யெய்துவிப்பது அச்சமய மொன்றே.  ஆகலின் அவர் தம் விபரீதக் கொள்கைகளை விட்டு, அச் சமயத்தைப் போற்றுக.  அவர் உய்வது உறுதி.
சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க.
ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
 

--------------------------------------------------------------------------------